Published:Updated:

எங்க போனாலும் அரசு பேருந்துதான்! - திருச்சி வேலுச்சாமி...

வேலுச்சாமி
பிரீமியம் ஸ்டோரி
வேலுச்சாமி

ஆச்சர்யமா இருக்கே அப்படியா?

எங்க போனாலும் அரசு பேருந்துதான்! - திருச்சி வேலுச்சாமி...

ஆச்சர்யமா இருக்கே அப்படியா?

Published:Updated:
வேலுச்சாமி
பிரீமியம் ஸ்டோரி
வேலுச்சாமி

‘‘எளிமைக்கு உதாரணமா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சொல்றாங்க. அதேசமயம், காங்கிரஸ் கட்சியிலயும் கதர் வேட்டி, சட்டையோட கால்ல செருப்பு அணியாம வாழ்ந்த தலைவர்கள் இருந்திருக்காங்க. இன்னைக்கு வரைக்கும் நானும் அப்படித்தான்...’’ என்கிறார் திருச்சி வேலுச்சாமி. வேளைக்கொரு உடையிலும், நாளுக்கொரு ஆடம்பர கார்களிலும் கட்சித் தலைவர்கள் வலம்வரும் காலமிது. ஆனால், வெள்ளை கதர் வேட்டி சட்டையில் பளிச்சிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, உள்ளூர் பயணமாக இருந்தாலும் சரி... வெளியூர் பயணமாக இருந்தாலும் சரி... கார் ஏறுவதில்லை. அரசுப் பேருந்தில் செல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்!

எங்க போனாலும் அரசு பேருந்துதான்! - திருச்சி வேலுச்சாமி...

‘‘என் குடும்பத்தினரும் நண்பர்களும் என்னை எவ்வளவோ வற்புறுத்தியும் எனக்குன்னு ஒரு கார் வாங்கிக்கவே இல்லை. உள்ளூர் பயணமா இருந்தா ஆட்டோ, டவுன் பஸ்ல போயிடுவேன். வெளியூர் பயணமா இருந்தா, பெரும்பாலும் அரசுப் பேருந்துதான். சில நேரங்கள்ல ரயில்ல போவேன். அதுவும் செகண்ட் கிளாஸ்தான். ‘நாங்க லட்சக்கணக்குல சம்பாதிக்கிறோம். நீங்க ஏம்ப்பா இன்னும் பஸ்ல போய்க்கிட்டு இருக்கீங்க?’னு என் பசங்க அடிக்கடி கேட்பாங்க. ‘இல்லப்பா, எனக்கு இதுதான் சரியா வரும்’னு சொல்லிடுவேன்.

எளிமையா வாழணுங்கிற கொள்கை ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்துலயும் நம்ம மக்கள் எப்படி வாழறாங்க, அவங்க மனநிலை எப்படி இருக்கு, அவங்களோட எதிர்பார்ப்பு என்னன்னு நாம எந்தப் புத்தகத்துலயும் படிச்சுத் தெரிஞ்சுக்க முடியாது. நாமளே நேரடியா களத்துல இறங்கி அதை உணரணும். அதுக்கு இந்த மாதிரியான பயணங்கள்தான் உதவியா இருக்கு. வயசு எழுபது ஆகிடுச்சு... இந்தப் பழக்கத்தால பல அசௌகர்யங்கள் ஏற்படுதுதான். முன்னாடி மாதிரி போய்வர முடியலை. ஆனா, அதையெல்லாம் நான் பெரிசுபடுத்திக்கறது இல்லை.

எவ்வளவோ கஷ்டங்கள் வந்தபோதும்கூட, நான் 22 வயசுப் பையனா இருக்கும்போது காமராஜர் சொன்ன ஒரு விஷயம்தான் என்னை இந்தப் பாதையிலிருந்து நழுவாம வழிநடத்திக்கிட்டு இருக்கு. 1972-ல காங்கிரஸ் கட்சியோட மாணவரணி கேம்ப் மாமல்லபுரத்துல நாலு நாள் நடந்துச்சு. அதுக்கு வந்திருந்த காமராஜர், ‘நாம நம்ம தேவையைக் குறைச்சுக்கிட்டா, யார் முன்னாடியும் கைகட்டி நிக்கவேண்டிய அவசியம் இருக்காது’னு என்கிட்ட சொன்னார். சொல்லி ஐம்பது வருஷம் ஆகப்போகுது... அவர் சொன்ன மாதிரி என் தேவைகளைக் குறைச்சுக்கிட்டதால, இன்னைக்கு வரைக்கும் யார் முன்னாடியும் கைகட்டி நின்னதில்லை’’ என்கிறார் கம்பீரமாக.