Published:Updated:

நள்ளிரவு பூஜை செய்யும் பொன்.ராதாகிருஷ்ணன்!

ஆச்சர்யமா இருக்கே... அப்படியா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஆச்சர்யமா இருக்கே... அப்படியா?

ஆச்சர்யமா இருக்கே... அப்படியா?

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் பா.ஜ.க பிரமுகர் நடத்திவரும் அமைப்பின் ஆண்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அவர் செல்லும்போது அங்கு பக்தி பஜனை நடந்துகொண்டிருந்தது. உற்சாகமான பொன்.ராதாகிருஷ்ணன் மேடையேறி ‘பிரபோ கணபதே...’ என்ற பஜனை பாடலைப் பாட, பார்வையாளர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். ‘‘இது சமீபத்தில் மீடியாக்களில் வெளியான செய்தி. பொன்.ராதாகிருஷ்ணன் பற்றி வெளிவராத தகவல்கள் ஏராளம்’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

‘‘பொன்.ராதாகிருஷ்ணன், தீவிர அம்மன் பக்தர். தேவி பூஜையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அதற்காகச் சிறிய தேவி விக்ரஹம் மற்றும் பூஜை உபகரணங்கள் அடங்கிய தனி பேக் ஒன்று எப்போதும் அவருடன் இருக்கும். உலகின் எந்த மூலைக்கு அவர் பயணித்தாலும், அந்தப் பையை எடுத்துச் செல்வார். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இரவு நேரத்தில் கண்டிப்பாக தேவிக்கு பூஜை செய்வார். கட்சி நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் என தொடர்ச்சியாகப் பங்கேற்றாலும், நள்ளிரவு 12 மணியானாலும் தேவிக்கு பூஜை செய்வதற்குத் தவறுவதில்லை அவர்.

நள்ளிரவு பூஜை செய்யும் பொன்.ராதாகிருஷ்ணன்!

சமயம் கிடைக்கும்போதெல்லாம் அம்மன் கோயில்களில் அமர்ந்து தியானம் செய்வதும் அவரது வழக்கம். அதிலும், கன்னியாகுமரி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு அடிக்கடி செல்வார். மண்டைக்காடு அம்மன் மீதான அளவு கடந்த பக்தியால், அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது சுமார் 4.5 கோடி ரூபாயில் தங்கத்தேரைக் காணிக்கையாகச் செலுத்தினார். இதற்காக தெரிசனங்கோப்பு பகுதியிலுள்ள தனது சொத்தையே விற்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! பக்தர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது. அதுவும், பக்தர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே வசூலிக்கப்பட்டது.

அம்மனுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமைகளில் தண்ணீர்கூடக் குடிக்காமல் விரதம் இருப்பார். இதனால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ‘முழு நாளும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது’ என மருத்துவர்கள் எச்சரித்தனர். அதன் பிறகே, சோர்வு ஏற்பட்டால் மட்டும், இரவு நேரத்தில் மட்டும் ஒரு இட்லி சாப்பிடுவார். ஆனால், கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும்போது, இந்த சமரசமும் கிடையாது. ஆறு நாள்களும் எதுவுமே சாப்பிடாமல் கடும் விரதம் மேற்கொள்வார். அந்த நாள்களில் வெறும் நீராகாரம் மட்டுமே எடுத்துக்கொள்வார். திருச்செந்தூர் முருகன் கோயில் அவருடைய ஃபேவரைட். கொஞ்சம் மனது சோர்வாக இருந்தாலும் உடனே திருச்செந்தூருக்குக் கிளம்பிவிடுவார்’’ என்கிறார்கள் அவர்கள்.

இன்னொரு விஷயம்... பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு கவிஞரும்கூட. அத்திவரதர் வைபவ சமயத்தில் அத்திவரதரைப் போற்றி பாடல் எழுதி கவிஞராகவும் அவதாரம் எடுத்தார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்!