வைகோ என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது, அவருடைய ஆர்ப்பரிக்கும் மேடைப்பேச்சுதான். அனல்கக்கும் வார்த்தைகளை ஏற்ற இறக்கங்களுடன் அவர் உச்சரிக்கும்போது, எதிரில் கேட்டுக்கொண்டிருக்கும் தொண்டர்கள் மெய்சிலிர்த்துப் போவார்கள். அப்படி `கணீர்’ குரலில் பேசக்கூடிய வைகோ, வருடத்தில் ஒரு நாள் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருக்கிறார். ஏன் தெரியுமா?
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவைகோவுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டதற்குக் காரணம், அவரின் தந்தை வையாபுரி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வையாபுரியின் வீட்டுக்கு காமராஜர், கக்கன் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் வந்து செல்வது வழக்கம். அதன் மூலம் அரசியல் தலைவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற வைகோ, அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பின்னாளில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
தன் தந்தை வையாபுரிமீது அளப்பரிய அன்புகொண்டிருந்தார் வைகோ. 1973-ம் ஆண்டு, ஏப்ரல் 5-ம் தேதி வையாபுரி மறைந்தார். அதன் பிறகு, ஒவ்வொரு வருடமும் அவரின் நினைவுநாளில், யாரிடமும் பேசாமல் தன் தந்தையின் நினைவாகவே இருப்பார் வைகோ. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மௌன விரதம் கடைப்பிடிப்பதோடு, ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அருந்த மாட்டார்.
மௌன விரதம் இருக்கும் நாளில் யாரையும் சந்திப்பதில்லை. எந்த ஊரில், எந்த இடத்தில் இருக்கிறாரோ அங்கேயே மௌன விரதம் இருப்பார். 2014-ம் ஆண்டு, அதற்கும் ஒரு சோதனை வந்தது. அது, நாடாளுமன்றத் தேர்தல் நேரம். விருதுநகர் தொகுதி வேட்பாளராக வைகோ போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய, கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ராம் ஜெத்மலானி டெல்லியிலிருந்து வந்திருந்தார். அதனால், அன்று அவருடன் பிரசாரக் களத்துக்குச் சென்றார். ஆனாலும், ஒரு வார்த்தை பேசவோ, உணவு மற்றும் தண்ணீர் அருந்தவோ மறுத்துவிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2017-ம் ஆண்டு, தேசத்துரோக வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் வைகோ. அங்கும் தந்தையின் நினைவுநாள் மௌன விரதத்தைக் கடைப்பிடித்தார். எக்காரணத்தைக் கொண்டும் கடந்த 47 வருடங்களில், ஒருமுறைகூட தன் மௌன விரதத்தைக் கலைத்ததில்லையாம் வைகோ!