Published:Updated:

மோடி உரை... 11 லட்சம் பேர் டிஸ்லைக்... பின்னணியில் யார்? - ரகசியம் உடைக்கும் வானதி சீனிவாசன்!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

மன் கி பாத் உரையில், 'ராஜபாளையம் நாய்’, `தஞ்சாவூர் பொம்மை' பற்றியெல்லாம் பெருமையாகப் பேசினார் பிரதமர் மோடி. ஆனால், அந்த உரையை நாட்டு மக்கள் அதிக அளவில் `டிஸ்லைக்' செய்திருக்கிறார்கள். அந்த டிச்லைக்குகளின் பின்னணி குறித்து விளக்குகிறார் பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசன்

'தமிழக அரசியலில் எப்படியாவது தடம் பதித்துவிட வேண்டும்' என்ற துடிப்போடு களமாடிவரும் தமிழக பா.ஜ.க., அடுத்தடுத்த அதிர்வுகளை உருவாக்கிக்கொண்டே வருகிறது. கந்த சஷ்டி - வேல் பூஜை, விநாயகர் ஊர்வலம் போன்ற மதரீதியிலான முன்னெடுப்புகளோடு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சியினருக்கும் எதிராகக் கம்பு சுழற்றி வருகிறது தமிழக பா.ஜ.க.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் பேசினோம்...

``பா.ஜ.க தலைவர்களிடம் எந்தக் கேள்வி கேட்டாலும், சம்பந்தமே இல்லாமல் தி.மு.க-வைக் குறை சொல்லியே, பதில் சொல்ல ஆரம்பிக்கின்றனரே..?''

``மாநில பிரச்னைகளுக்குக்கூட சம்பந்தமே இல்லாமல் 'மோடி'யைத்தான் கைகாட்டுகின்றனர் தி.மு.க-வினர். அவர்களது இந்த பா.ஜ.க எதிர்ப்புநிலையை மக்களிடம் அடையாளம் காட்டுவதற்காகத்தான் நாங்களும், எதிர்க்கட்சி வரிசையில் தி.மு.க-வை முதன்மையாக வைத்து எதிர்க்கிறோம்.’’

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் பதவி அளித்திருப்பது மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதா?''

``அப்படியான அதிருப்திகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு அமைச்சர் பொறுப்பேற்கச் செல்வதற்கு முன்னர்தான் கட்சி அலுவலகத்தில் வந்து உறுப்பினராகவே சேர்ந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் திடீரென அறிவிக்கப்பட்டவர்தான்.''

``20 வருடங்களாகக் கட்சிக்கு உழைத்து துணைத் தலைவராகியிருக்கும் வானதி சீனிவாசனுக்கு வருத்தம் இருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளனவே?''

'``அது உண்மையல்ல... பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, நேரடியாக அமைச்சர் பொறுப்புக்கே வர முடியும் என்கிறபோது, கட்சிப் பதவிகளில் வருவதென்பது புதிதல்ல. அதேசமயம் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்போது, அனுபவம்மிக்க மூத்த தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுத்தான் வருகிறது.''

அண்ணாமலை
அண்ணாமலை

``துணைத் தலைவர் அண்ணாமலைக்கு கோவையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ளவில்லையே ஏன்?''

``அண்ணாமலை கோவை வந்த தினத்தன்று நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பெருந்துறைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தேன். அதனால் அண்ணாமலையும் `அக்கா நானே நேரில் வந்து உங்களைச் சந்திக்கிறேன்' என்று தொலைபேசியில் தெரிவித்தார். பெருந்துறை நிகழ்ச்சி நிரல் குறித்து சமூக ஊடகத்தில் நான் பதிந்திருக்கும் பதிவுகளைப் பார்த்திருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள்.''

``நீட், ஜே.இ.இ தேர்வுகளைத் தள்ளிவைப்பது குறித்துப் பேசாமல், பொம்மைத் தயாரிப்பு, நாய் வளர்ப்பு பற்றி பிரதமர் பேசுவது நியாயம்தானா?''

``பிரதமரின் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பல்வேறு நபர்கள் செய்த நல்ல காரியங்களைப் பற்றிப் பேசி, அவர்களை ஊக்கப்படுத்துகிறார். அந்தவகையில் நம் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு விஷயங்களை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பாகத்தான் அந்த நிகழ்ச்சி இருந்திருக்கிறது. மற்றபடி பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதற்கான நிகழ்ச்சி அல்ல அது.''

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

``பிரதமரின் பேச்சை யூடியூபில் லட்சக்கணக்கான பேர் டிஸ்லைக் செய்திருக்கிறார்களே..?''

``அப்படி டிஸ்லைக் செய்ததில், 98 சதவிகிதம் துருக்கி நாட்டிலிருந்துதான் செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் இப்போது கிடைத்திருக்கிறது. எனவே, இது திட்டமிடப்பட்ட சதி!''

'உங்கள் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியே `நீட், ஜே.இ.இ தேர்வுகளைத் தள்ளிவையுங்கள்’ என்று தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறாரே..?''

'``பா.ஜ.க-வைச் சேர்ந்த தலைவர்களது கருத்தையும் கேட்டறிந்து, அதன் பின்னர் ஒரு முடிவெடுத்துத்தான் அரசாங்கம் அறிவிப்புகளைச் செய்கிறது.''

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

''இந்தியப் பொருளாதாரச் சரிவுக்குக் கொரோனாவையும் கடவுளையும் காரணம் கூறுவது சரிதானா?''

'``இயற்கைப் பேரழிவு என்றாலே, அது மனித சக்திக்கு அப்பாற்பட்டதுதானே... கொரோனாவுக்கு எப்போது தடுப்பூசி கண்டுபிடிப்போம், நோய் எப்போது தீரும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆக அதைத்தான் அமைச்சர் நிர்மலா சீதாராமனும் வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே, பொருளாதாரச் சரிவு என்பது இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. உலக நாடுகள் அனைத்துமே இன்றைக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.''

`` `கொரோனா பரவலுக்கு முந்தைய காலகட்டத்திலும் இந்தியப் பொருளாதாரம் சரிவில்தானே இருந்தது... அதுவும் கடவுளின் செயலா?’ என்று எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து சுப்பிரமணியன் சுவாமியும் கேட்கிறாரே?''

``கொரோனாவுக்கு முந்தைய காலத்திலும் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் பொதுவாக பொருளாதாரப் பிரச்னை இருந்து வந்தது. அதனால்தான் `உலகப் பொருளாதார மந்தநிலை' என்றே வர்ணித்தார்கள். எனவே, அதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கத்தானே செய்யும். அதிலிருந்து மீண்டு வருவதற்கு நாம் என்னென்ன வழிவகைகளை மேற்கொண்டு வருகிறோம் என்பதுதான் இங்கே முக்கியமானது!''

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

``ஆனால், கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதிலும், மயிலுக்கு உணவு அளிப்பதிலும்தானே பிரதமரின் கவனம் இருக்கிறது?''

``இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கான சுகாதாரம், உணவுத் தேவை எனத் தன் கடமையை மிகச்சரியாகவே செய்துவருகிறது மத்திய அரசு. அந்தவகையில், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டுத்தான் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிலும் அரைநாள் நிகழ்ச்சியாக பிரதமர் கலந்துகொண்டார். இதனாலேயே அனைத்து வேலைகளும் பாதிக்கப்பட்டுவிட்டன என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

பிரதமர், மயிலுக்கு இரை அளிப்பதைக்கூடக் கேள்வி எழுப்பி, `இயற்கையையே யாரும் ரசிக்கக் கூடாது, எந்த உயிரினத்தோடும் பழகக் கூடாது' என்று தடை போடச் சொல்கிறீர்களா?''

``நாடே கொரோனா பேரிடரில் தத்தளிக்கிறபோது, பிரதமரின் கவனம் திசை திரும்புகிறதா அல்லது மக்களின் கவனத்தை பிரதமர் திசை திருப்புகிறாரா?''

``ஒரு தலைவரோ அல்லது அரசாங்கத்தை நிர்வாவகிப்பவரோ அவருக்கென்று எந்தவிதமான உணர்வுகளும் இருக்கக் கூடாது என்ற மனநிலைக்கு நாம் போய்விட்டோமா? அதனால்தான் அன்றாட வாழ்வில், ஒரு தனி மனிதருக்கான இடத்தைக்கூட அளிக்க மறுத்து கேலி செய்துகொண்டிருக்கிறோமா... இந்த மனநிலை மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். எனவே, எல்லாவற்றையும் எல்லாவற்றோடும் ஒப்புமைப்படுத்த வேண்டியதில்லை.''

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

``ராகுல் காந்தியை, 'அரைவேக்காடு; செமி இத்தாலியன்' என்றெல்லாம் ஹெச்.ராஜா விமர்சிப்பது எந்தவகையான அரசியல் நாகரிகம்?''

``பிரதமர் மோடி குறித்து, காங்கிரஸ் கட்சியினர் இதைவிடக் கேவலமான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். அடுத்து தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் அரசியல் பாணி இருக்கும். அந்தவகையில், இப்படிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறவர்களின் தனிப்பட்ட பாணி அது.

காங்கிரஸ் கட்சியினர் எங்களைப் பற்றித் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்கிறபோது, இதே கேள்வியை நீங்கள் அவர்களிடமும் கேட்டிருந்தால் நன்றாக இருக்கும்!''

Vikatan

``சமீபகாலமாக தமிழக பா.ஜ.க-வில், குற்ற வழக்கு பின்னணி கொண்டவர்கள் அதிக அளவில் சேர்கிறார்களே..?''

``கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், இளைஞர்கள் என பலதரப்பினரும் எங்கள் கட்சியில் இணைந்து வருகிறார்கள். அவர்களில், ஏற்கெனவே குற்றப் பின்னணி இருந்து தண்டனை பெற்றுத் திருந்தியவர்களும் கட்சியில் இணைகிறார்கள் அவ்வளவுதான். ஆனால், இந்த விஷயத்தை சமூக ஊடகங்களில் பெரிதுபடுத்திவரும் தி.மு.க-வில்தான் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட தி.மு.க-வே `கிரிமினல்களின் கூடாரமாக'த்தான் இருக்கிறது. தமிழக அரசியலை கிரிமினல்மயமாக்கியதில் தி.மு.க-வின் பங்கு மிக அதிகம்.''

எல்.முருகன்
எல்.முருகன்

'``இனி `பா.ஜ.க-தி.மு.க இடையேதான் நேரடி போட்டி' என்று வி.பி.துரைசாமி சொன்னது இதைத்தானா?''

``குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபரையோ அல்லது போலீஸாரால் தேடப்பட்டுக்கொண்டிருக்கும் படுபாதகமான செயலைச் செய்த ஒரு நபரையோ நாங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்வது கிடையாது. திருந்தி வாழ்பவர்கள் `இனி எந்தக் குற்றமும் செய்ய மாட்டோம்' என்று உறுதிமொழி கொடுத்தவர்களை மட்டுமே... அதுவும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே சேர்த்திருக்கிறோம்.’’'

புதுக்கோட்டை: `ஒரு டீ-க்குக்கூட வழியில்லாம இருந்தேன்! - பெட்டிக்கடையால் தலைநிமிர்ந்த டீ மாஸ்டர்

``அண்மையில், பா.ஜ.க-வில் இணையவந்த ரௌடி நெடுங்குன்றம் சூர்யாவை போலீஸ் சுற்றிவளைத்ததும் தப்பியோடிவிட்டதாக செய்திகள் வந்தனவே..?’’'

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

``கட்சிக் கூட்டத்தில்கூட இது பற்றிய விவாதம் வந்தது. அவர் எங்கள் கட்சியில் சேர வந்தது உண்மைதான். ஆனால், `உங்கள் பின்னணி என்னவென்று எனக்குத் தெரியாது. ஆதலால், முறைப்படி அனுமதி வாங்கி வந்து என்னை நேரில் சந்தியுங்கள். குற்றப் பின்னணி இல்லையென்றால் சேர்த்துக்கொள்கிறேன்' என்றுதான் எங்கள் தலைவரும் சொல்லியிருந்திருக்கிறார்.''

அடுத்த கட்டுரைக்கு