Published:Updated:

“அன்று மு.க.முத்து... இன்று உதயநிதி!”

- போட்டுத் தாக்கும் சிங்கமுத்து

பிரீமியம் ஸ்டோரி

கைச்சுவை நடிகர் சிங்கமுத்து, அ.தி.மு.க-வின் தலைமைக் கழகப் பேச்சாளர். சமீபகாலமாக இவரை சினிமாவில் பார்க்க முடிவதில்லை. அதனால் என்ன... நேரில் சந்தித்தோம்.

“அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது?’’

“முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காதுக்குச் செல்லும் விஷயங்கள் உடனடியாக சரி செய்யப் படுகின்றன. நான் விசிட்டிங் கார்டு கொடுத்தால் போதும்... எளிதாக அவரைச் சந்திக்க முடிகிறது. இதுவரை 52 ஆயிரம் ஃபைல்களில் கையெழுத்து போட்டுள்ளார் எடப்பாடி அண்ணன். ‘மேம்பால நாயகன்’ என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான மேம்பாலங்களைக் கட்டிவிட்டார்.’’

“அன்று மு.க.முத்து... இன்று உதயநிதி!”

“உதயநிதி ஸ்டாலின், தி.மு.க இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்றிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“தி.மு.க-வில் பரம்பரை பரம்பரையாகப் பதவி வகிப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. கட்சிக்காகப் பாடுபட்டு, ரத்தம் சிந்திய தொண்டர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு அந்தப் பதவியைக் கொடுத்திருக்கலாம். இளைஞர் பருவத்தைத் தாண்டியபிறகும் இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவர் ஸ்டாலின். இப்போது, அதைச் சரிசெய்யவே இந்த நியமனம் என்று நினைக்கிறேன்.”

“உதயநிதியின் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?”

“உதயநிதி கட்சிக்காக சிறு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக தன் மகன் மு.க.முத்துவை சினிமாவில் நடிகனாக உருவாக்கினார் கருணாநிதி. ஆனால், மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அந்த எண்ணம் ஸ்டாலினுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், உதயநிதியை சினிமாவுக்குக் கொண்டுவந்தார். இப்போது இளைஞரணிச் செயலாளர் ஆக்கியிருக்கிறார். உதயநிதி, கட்சியில் தாக்குப்பிடிக்கலாம்... தொண்டர்களும் கை தட்டலாம்... ஆனால், தொண்டர்களின் மனதிலே வேதனை இருப்பதை அவர் மாற்ற முடியாது. ‘கட்சிக்காக உழைத்தவர்கள் அனைவரும் கரை வேட்டியைக் கட்டிக்கொண்டு சாக வேண்டியதுதானா...’ என்பதுதான் தி.மு.க தொண்டர்களின் தற்போதைய மனநிலை.”

“அ.ம.மு.க-வின் செயல்பாடுகள், தினகரனின் முயற்சிகள் பற்றி?’’

“வெளிப்படையாகச் சொல்கிறேன்... தினகரனுக்கு கூட்டம் கூடியதைப் பார்த்தபோது, எங்களுக்கும் ஒருபக்கம் பயம் இருந்ததுதான். மறுக்கவில்லை! ஆனால், அவர் இந்தளவுக்கு தோற்றுப்போவார் என்று நினைக்கவில்லை. மக்களுக்குப் பிடிக்கவில்லையா, அவரது நோக்கங்கள் மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லையா... என்று தெரியவில்லை. ‘சசிகலா வந்தால் ஏற்றுக்கொள்ளலாம். அவரின் குடும்பத்தினர் வந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று அமைச்சர்கள் பலரும் சொல்கிறார்கள். சசிகலா வெளியே வந்தால்தான் உண்மையான நிலவரம் தெரியும்.’’

“வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?’’

“அதைக் கடவுள்தான் தீர்மானிக்க வேண்டும். நான் யாருடனும் சேர்ந்து நடிக்க விருப்பமாகத்தான் இருக்கிறேன். அதை இப்போதுதான் வடிவேலுவும் உணர்ந்திருக்கிறார்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு