Election bannerElection banner
Published:Updated:

``அதெல்லாம் ஒரு வெண்டைக்காயும் இல்லீங்க!'' - என்ன சொல்கிறார் மன்சூர் அலிகான்?

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

`போலீஸின் கையில் சட்டத்தைக் கொடுத்தால், நாளை இதே மாதிரி எல்லா விஷயங்களையும் கையாள ஆரம்பித்துவிடுவார்கள். அதனால்தான் தெலுங்கானா என்கவுன்டரை நானும் முழுவதுமாக ஆதரிக்கவில்லை’

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழத்தையே உற்றுப் பார்க்க வைத்தவர் நடிகர் மன்சூர் அலிகான். ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு, தீவிர அரசியலிலிருந்து சற்று விலகி, திரைத்துறையில் கவனம் செலுத்திவருகிறார். இந்நிலையில், தற்போதைய பரபர அரசியல் குறித்து மன்சூர் அலிகானிடம் பேசினேன்...

``நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால், அரசியல் மீது மன்சூர் அலிகானுக்கு விரக்தி ஏற்பட்டுவிட்டதா?''

''அதெல்லாம் ஒரு வெண்டைக்காயும் இல்லை. நேர்மையாகத் தேர்தல் நடைபெறும் என்று நம்பித்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இறங்கினோம். ஆனால், இப்படி ஒட்டுமொத்தமாக நாட்டையே ஏமாற்றி பதவியில் வந்து உட்கார்ந்திருப்பவர்களிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.

வட இந்தியாவில் ஒரு எம்.பி தொகுதியில், வேட்பாளராக நின்ற ஒரு பெண்மணிக்கு ஒரு ஓட்டுகூட கிடைக்கவில்லை. அது எப்படி. அவர் செலுத்திய வாக்காவது கிடைத்திருக்க வேண்டுமல்லவா... இதிலிருந்தே ஈ.வி.எம் மோசடி என்று தெரியவில்லையா?

இந்த எலக்ட்ரானிக் யுகத்தில், ஒரு கணக்கிலுள்ள பணத்தையே இன்னொரு கணக்குக்கு மோசடியாக மாற்றிவிடுகிறார்கள். அதனால்தான் ஈ.வி.எம் மெஷினைக் கண்டுபிடித்த நாடுகளே அவற்றையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்துகின்றன.''

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

''குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறதே?''

''அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு திட்டமிட்டு புல்வாமா தாக்குதலை நடத்தி 42 பேரைப் பலி கொடுத்து மோசடி செய்தார்கள். பாகிஸ்தானோடு போர் தொடுப்போம் என்று பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.

நாடு முழுக்க ரத யாத்திரை நடத்தி, ரத்தக் களறியாக்கினார்கள். வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இப்போது ராமர் கோயில் கட்டவும் அனுமதி அளித்துவிட்டார்கள். இப்போதும்கூட குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தன்னெழுச்சியாக மக்கள் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். ஆனால், இந்தப் போராட்டத்தையே தவறாகச் சித்திரிக்கிறார்கள். இதற்கான தண்டனையை அவர்கள் நிச்சயம் அனுபவிப்பார்கள்.''

`மிடாஸ் பாட்டில் மூடி...மொபைல் போட்டோ...1,500 கோடி!'
-இளவரசி குடும்பம் மீது பாயும் சசிகலா உறவுகள்

''தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?''

''கொடூரமான முறையில் ஒரு பெண்ணைக் கற்பழித்து, எரித்துக் கொன்றவர்களை கொலை பண்ணலாம்தான்... தவறில்லை. இதோ உன்னாவ் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அந்த எம்.எல்.ஏ மீது ஏகப்பட்ட ஆதாரங்கள் இருக்கிறதுதானே... அப்புறம் என்ன அவருக்கு ஆயுள் தண்டனை, ஆயில் மசாஜ் தண்டனை... நடுரோட்டில் சுட்டுத்தள்ளுங்கள்.

அதேசமயம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு கருத்துகளையும் தீர விசாரித்து நீதியை நிலைநாட்டுங்கள். இல்லையெனில், சிலர் இதைத் தவறாகப் பயன்படுத்திவிடும் வாய்ப்பும் இருக்கிறது.''

சீமான்
சீமான்

''ராஜீவ்காந்தி படுகொலை வழக்கின்போது, மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்துவந்த சீமான், இப்போது தெலங்கானா என்கவுன்டரை ஆதரிக்கிறாரே..?''

''தெலங்கானா என்கவுன்டரைப் பொறுத்தவரை, அந்தச் சூழலில் அவர் அப்படிப் பேசியிருக்கலாம். அதற்காக அதையே அளவுகோலாக வைத்துக்கொண்டு பேச வேண்டியதில்லை. போலீஸின் கையில் சட்டத்தைக் கொடுத்தால், நாளை இதே மாதிரி எல்லா விஷயங்களையும் கையாள ஆரம்பித்துவிடுவார்கள். அதனால்தான் அந்த என்கவுன்டரை நானும் முழுவதுமாக ஆதரிக்கவில்லை. மதுவின் போதையில் கொன்றார்களா அல்லது வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்றெல்லாம் தீர விசாரித்துதான் தண்டனை தரப்பட வேண்டும்.

ஆனால், இதைப் பற்றியெல்லாம் பேசுகிற நீங்கள், தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக்கொன்ற போலீஸாருக்கு என்ன தண்டனை, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வாகனங்களுக்கு தீ வைத்த போலீஸாருக்கு என்ன தண்டனை, ஆந்திரா காட்டுக்குள் 20 தமிழர்களை அடித்துக் கொன்றார்களே அவர்களுக்கு என்ன தண்டனை... என்பது பற்றியும் பேச வேண்டும் அல்லவா?

உலகத்தில் எந்த வழக்கில் 28 வருடங்களுக்கும் மேலாக ஒரு பெண்ணை சிறையில் வைத்திருக்கிறார்கள்? தமிழர்களுக்கு இதுதான் நியாயமா. இந்த ஆட்சியில் இப்படித்தான் நடக்கும். இதற்காகவே இந்த கவர்னர்களை எல்லாம் மாற்ற வேண்டும்.''

''குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய அமைப்பினர் சிலர் கலந்துகொள்கிறார்களே..?''

''சும்மா யாருக்காவது தொப்பி போட்டு இஸ்லாமியர் என்று ஏமாற்றுவார்கள். இதோ மேற்கு வங்கத்தில்கூட, இஸ்லாமியர்கள்போல் லுங்கி, தொப்பி அணிந்துகொண்டு கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்களே... எப்போதும் ஏமாற்றுப் பேர்வழிகள்தான் அவர்கள்!''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு