Published:Updated:

“தி.மு.க., அ.தி.மு.க-வை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை!”

சரண்டராகும் கருணாஸ்

பிரீமியம் ஸ்டோரி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க ஆட்சியைத் தக்கவைப்பதில் சோதனை ஏற்பட்டபோதெல்லாம், முக்கியத்துவம் பெற்றது ‘தனியரசு, தமிமுன் அன்சாரி, நடிகர் கருணாஸ்’ மூவர் அணி! ‘கழுவும் மீன்களில் நழுவும் மீன்கள்’போல தமிழக அரசியல் களத்தில் உலாவரும் இவர்களில் ஒருவரான ‘முக்குலத்தோர் புலிப்படை’ நிறுவனத் தலைவரான கருணாஸிடம் இன்றைய தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசினோம்.

“நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழ்த் தேசியவாதிகளால் ஏற்பட்ட நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“விஜய் சேதுபதி எந்தப் படத்தில் நடிக்கலாம், நடிக்கக் கூடாது என்பது அவரது உரிமை. அதேசமயம், ‘மக்கள் செல்வனாக இருக்கும் நீங்கள், அந்த மக்களின் கருத்துக்கும் மதிப்பளித்து, யோசித்து செயல்படுங்கள்’ என்று கோரிக்கைதான் வைத்தேன். மற்றபடி, அவர் ‘800’ படத்தில் நடிக்கக் கூடாது’ என்றெல்லாம் கட்டளையிடவில்லை. இதுவே எனது நிலைப்பாடும்கூட.”

“லைகா நிறுவனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நீங்கள், ‘யோசித்து செயல்படுங்கள்’ என்று விஜய் சேதுபதிக்கு அறிவுரை கூறுவது எந்த வகையில் நியாயம்?”

“லைகா நிறுவனர்கள் எனக்கு நண்பர்கள்தான். ஆனால், நான் எப்போது லைகாவுக்கு ஆதரவு கொடுத்தேன்... லைகாவுக்கு நான் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை; ஆதரவும் கொடுக்கவில்லை. அதேசமயம், பிரபாகரனைவைத்து அரசியல் செய்பவர்களிடம் விஜய் சேதுபதி மாட்டிக்கொள்ளக் கூடாதே என்ற அக்கறையில்தான் அவருக்கு மேற்கண்ட அறிவுரையைச் சொன்னேன்.’’

 “தி.மு.க., அ.தி.மு.க-வை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை!”

“ `திரைப்பட நடிகர்கள் தங்கள் சம்பளத் தொகையில் 30 சதவிகிதத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்’ என்று நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சொல்லியிருப்பதைப் பற்றி..?’’

“தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்குத் துளிகூட மரியாதையில்லை. இங்கு படம் தயாரிப்பதைவிட மானங்கெட்ட வேலை எதுவும் இல்லை. அதனால்தான் தயாரிப்பிலிருந்து ஒதுங்கிவிட்டேன். இன்றைக்குத் திரைப்படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் நிலை வந்துவிட்டது. நடிகர்களைச் சார்ந்தவர்களும் வாழ வேண்டுமென்றால், பெரிய நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இதை 15 வருடங்களுக்கு முன்பிருந்தே சொல்லிவருகிறேன். பக்கத்து மாநிலங்களிலெல்லாம் திரைத்துறைகள் நன்றாக இருக்கின்றன. தமிழ் சினிமாதான் நாசமாகப் போய்விட்டது. அதற்கு முக்கியக் காரணம், இங்கிருக்கும் பெரிய நடிகர்கள்தான்.’’

“உங்கள் கட்சி, வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இடம்பெறும்?’’

“எங்களது நீண்டநாள் கோரிக்கைகளான, ‘மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கனார் பெயரைச் சூட்ட வேண்டும்; ‘தேவர் இனம்’ என்ற அரசு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்’ ஆகிய இரு கோரிக்கைகளுக்கு உத்தரவாதம் கொடுப்பவர்களுக்கே எங்கள் ஆதரவு.”

 “தி.மு.க., அ.தி.மு.க-வை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை!”

“ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அ.தி.மு.க கூட்டணியில் நீங்கள் இருந்தும், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை. அதனால், தி.மு.க கூட்டணிக்கு மாறுவீர்களா?’’

“தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், இப்போதே அதுபற்றிச் சொல்ல முடியாது. சமீபத்தில்கூட முதல்வர், துணை முதல்வர் இருவரையும் சந்தித்து, ‘சீர்மரபினர் கணக்கெடுப்பில் மறவர், கள்ளர் சமுதாயங்களையும் சேர்க்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கிறேன். ‘நிச்சயமாகச் செய்து தருகிறோம்’ என உத்தரவாதம் அளித்துள்ளனர்.”

 “தி.மு.க., அ.தி.மு.க-வை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை!”

“ `முக்குலத்தோர் சமுதாயம், திராவிடக் கட்சிகளுக்கு அடிபணிந்தே கிடக்கிறது’ என்று சொல்லி வருத்தப்படும் நீங்களே, மறுபடியும் அந்த திராவிடக் கட்சிகளுடனேயே கூட்டணிவைக்கிறீர்களே... ஏன்?’’

“ஒரு பெரிய சமூகத்திடம் உடனடியாக மாற்றத்தை உருவாக்கும் வலிமை எனக்குக் கிடையாது. ஆனால், எங்கள் சமூகத்தின் இன்றைய தலைமுறையினர் உண்மையை உணர்ந்து, மாற்றத்தை நோக்கி வருகின்றனர். அதுவரை, தி.மு.க., அ.தி.மு.க இந்த இரண்டு கட்சிகளைவிட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை!”

 “தி.மு.க., அ.தி.மு.க-வை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை!”

“சசிகலா விரைவில் விடுதலையாவார் என்ற சூழலில், அவரின் ஆதரவாளரான நீங்கள் அ.தி.மு.க கூட்டணியில் தொடர்வதில் உங்களுக்கு உடன்பாடுதானா?”

“2016 தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒரு சீட் கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர் சசிகலா. பலருக்கும் சிபாரிசு செய்ததுபோல், எனக்கும் அவர் சிபாரிசு செய்தார். அதற்காக எப்போதுமே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதேபோல், எங்கள் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த சசிகலாவுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், அவருக்குப் பாதுகாப்பு அரணாகவும் முன்னிற்பேன். ஆனால், அரசியல்ரீதியாக எங்கள் கட்சி என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதைக் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துதான் முடிவெடுக்க முடியும்!’’

“நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள்தானே, ‘சசிகலாவுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் இடமில்லை’ என்று பேசிவருகிறார்கள்?’’

“இவையெல்லாம் அவர்களது உட்கட்சிப் பிரச்னைகள். அதில் நான் கருத்து சொல்ல முடியாது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு