Published:Updated:

‘‘அ.தி.மு.க தலைவர்களில் இன்னும் சிலர் பா.ஜ.க-வில்?!" - சசிகலா புஷ்பா சஸ்பென்ஸ்!

சசிகலா புஷ்பா ( கே.கார்த்திகேயன் )

`தமிழ்நாடு என்றாலே, தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு திராவிடக் கட்சிகள் மட்டும்தான் என்றதொரு மாய பிம்பத்தை ஏற்படுத்திவைத்துக்கொண்டு, மற்றக் கட்சிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள்.’

‘‘அ.தி.மு.க தலைவர்களில் இன்னும் சிலர் பா.ஜ.க-வில்?!" - சசிகலா புஷ்பா சஸ்பென்ஸ்!

`தமிழ்நாடு என்றாலே, தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு திராவிடக் கட்சிகள் மட்டும்தான் என்றதொரு மாய பிம்பத்தை ஏற்படுத்திவைத்துக்கொண்டு, மற்றக் கட்சிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள்.’

Published:Updated:
சசிகலா புஷ்பா ( கே.கார்த்திகேயன் )

`அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா பா.ஜ.க-வில் இணையப்போகிறார்' என்று கடந்த 2 வருடங்களாகவே உலா வந்துகொண்டிருந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி.

அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்திலேயே பேசி, அரசியல் உலகை அதிரவைத்தவர் சசிகலா புஷ்பா எம்.பி. விளைவு... அ.தி.மு.க கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். ஆனாலும் அவர் வகித்துவந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்படாததால், டெல்லி ராணியாகவே வலம் வந்துகொண்டிருந்தார்.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓ.பி.எஸ். அணி., டி.டி.வி அணி என தமிழக அரசியல் களத்தில்மாறி மாறிப் பயணித்த சசிகலா புஷ்பா, ஒருகட்டத்தில் டெல்லி பா.ஜ.க-வோடு நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். இதையடுத்து, பா.ஜ.க-வில் இணைந்துவிடுவார் என்ற பேச்சும் எழுந்தது. ஆனாலும் அதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தவர், தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் திடீரென பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

திடீரென இப்படியொரு `அரசியல் மூவ்' எடுத்ததன் பின்னணி குறித்துத் தெரிந்துகொள்ள சசிகலா புஷ்பா எம்.பி-யிடம் பேசினேன்....

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அ.தி.மு.க எம்.பி-யாக வலம் வந்துகொண்டிருந்த நீங்கள், பா.ஜ.க-வில் இணைய வேண்டிய அவசியம் என்ன?''

``அரசியல் ரீதியாக மாநிலக் கட்சிகளால் ஒரு மாநிலம் அடையக்கூடிய வளர்ச்சியைவிடவும், தேசியக் கட்சிகளால் இன்னும் விரைவான வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை பிரதமர் மோடி, நேரடியாகவே உணர்த்திக் காட்டிவருகிறார். அடுத்ததாக, ஓர் அரசியல்வாதியாக தேசியக் கட்சிகளில் இணைந்து பணியாற்றும்போதுதான், நமது பணியை இன்னும் சிறப்பாக செய்யமுடியும் என்று எனக்குத் தோன்றியது. எனவே, இயல்பாகவே எனக்கு பா.ஜ.க மீது அதீத ஈடுபாடு ஏற்பட்டு கட்சியில் இணைந்துவிட்டேன்.''

மோடி - அமித்ஷா
மோடி - அமித்ஷா

``கடந்த 2 வருடங்களாகவே பா.ஜ.க-வோடு நெருங்கியத் தொடர்பிலிருந்த நீங்கள் திடீரென பா.ஜ.க-வில் இணைந்ததற்கு என்ன காரணம்?''

``பா.ஜ.க-வில் இணைந்து பணியாற்ற நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த நிலையில்தான், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வந்தது. இதுதான் சரியான தருணம் என்று நான் நினைத்திருந்தேன். பா.ஜ.க தலைமையும் டெல்லியிலுள்ள தமிழ் மக்களிடையே பா.ஜ.க-வுக்காக வாக்கு சேகரிக்கும் பணியில் என்னை ஈடுபடுத்த விரும்பியதால், உடனடியாக பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டேன். இப்போதுகூட தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.''

``அ.தி.மு.க சார்பில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிவரும் நீங்கள், திடீரென பா.ஜ.க-வில் இணைந்திருப்பதால் உங்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய நேரிடுமே?''

``பா.ஜ.க தலைமையோடு ஆலோசனை செய்தே நான் என் முடிவுகளை எடுக்கிறேன். அந்தவகையில், பா.ஜ.க தலைமையகத்தில் மூத்த தலைவர்களின் முன்னிலையில்தான் நான் என்னை பா.ஜ.க-வோடு இணைத்துக்கொண்டுள்ளேன். அடுத்துவரும் நாள்களிலும் தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவேன். இதற்குமேல் இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை.''

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா
கே.கார்த்திகேயன்

``அ.தி.மு.க-வில் இருந்துகொண்டே பா.ஜ.க-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சிலர் எடுத்துவருகிறார்களே....?''

``அது பற்றி நான் எதுவும் சொல்லமுடியாது. ஆனால், அ.தி.மு.க-விலுள்ள சில முக்கியத் தலைவர்களே பா.ஜ.க-வில் இணைவதற்காக என்னோடு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். விரைவில் தமிழகத்தில், பிரதமர் மோடி, அமித் ஷா கரங்களை வலுப்படுத்த அ.தி.மு.க-விலுள்ள முக்கியத் தலைவர்களையும் பா.ஜ.க-வில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்.''

``தொடர்ச்சியாக டெல்லி பா.ஜ.க-வோடு மட்டுமே நெருக்கம் காட்டிவரும் நீங்கள், தமிழக பா.ஜ.க-வை கண்டுகொள்ளவில்லையே ஏன்?''

``அப்படியில்லை... நாடாளுமன்ற உறுப்பினராக பணிசெய்துவந்ததால், இயல்பாகவே பா.ஜ.க-வின் தேசியத் தலைமைகளோடு எனக்கு நல்லதொரு புரிதல் இருந்தது. அதேசமயம் தமிழக பா.ஜ.க-வின் முக்கிய மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா என அனைவருமே என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்தாம். அந்தவகையில் தமிழகத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சிக்காகவும் எனது பங்களிப்பை வழங்க ஆயத்தமாகவே இருக்கிறேன்.''

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

``தமிழக பா.ஜ.க-வின் மாநிலத் தலைமைப் பொறுப்புக்கு உங்கள் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக வரும் செய்திகள் உண்மையா?''

``எந்தக் கட்சியிலும் பதவியை எதிர்பார்த்து பணியாற்றுபவள் நான் இல்லை. அ.தி.மு.க-வில் இருந்தபோதுகூட எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துமுடிப்பேன். அந்தவகையில், என் திறமையின் வேகத்தைப் பார்த்துத்தான் அ.தி.மு.க தலைமையும் எனக்கான அங்கீகாரங்களை வழங்கிவந்திருக்கிறது. இப்போது பா.ஜ.க-வில் நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. கட்சித் தொண்டர் என்ற முறையில் எனக்கான பணியை எப்போதும்போல், சிறப்பாக செய்துமுடிப்பதில்தான் என் கவனம் இருக்கிறது. இந்தவகையில், என் பணியைக் கண்டு அவர்களாக எந்தப் பொறுப்பு அளித்தாலும் அதை ஏற்றுக்கொண்டு பணிபுரிவேன்.''

``திராவிட சித்தாந்தங்கள் வேரூன்றிய தமிழகத்தில், தாமரையை எப்படி மலர வைக்கப் போகிறீர்கள்?''

``தமிழ்நாடு என்றாலே, தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு திராவிடக் கட்சிகள் மட்டும்தான் என்றதொரு மாய பிம்பத்தை ஏற்படுத்திவைத்துக்கொண்டு, மற்றக் கட்சிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள். பொய்யான அந்த பிம்பங்களை எல்லாம் உடைத்தெறிந்து, தமிழகத்தில் தாமரையை மலரவைக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்!

குறிப்பாக, இந்து மதத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் தி.மு.க-வின் முகமூடியை கிழித்தெறிவதும், அக்கட்சியின் வாரிசு அரசியலை மக்களிடையே அம்பலப்படுத்துவதும்தான் என் முக்கியப் பணியாக இருக்கும்.''

மு.க.ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்

``அ.தி.மு.க-வில் இத்தனை ஆண்டுகள் இருந்துவந்த அனுபவத்திலிருந்துதான் `திராவிடக் கட்சிகள் மாய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன' என்று சொல்கிறீர்களா?''

``தமிழ்நாடு என்றாலே திராவிடப் பாரம்பர்யம் மட்டும்தான் என்றதொரு மாயத்தை இந்த இரண்டு கட்சிகளும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனதான். ஆனாலும்கூட `இந்த பிம்பங்கள் எல்லாம் பொய்யானவை' என்று ஏற்கெனவே பா.ஜ.க சார்பில் இங்கே வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் நிரூபித்துள்ளார்கள். எனவே, பா.ஜ.க-வின் கொள்கைகள் ஏற்கெனவே தமிழகத்திலும் பரவிதான் இருக்கிறது. ஆனாலும், இந்தத் திராவிடக் கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். இந்த உண்மைகளை எல்லாம் தமிழக மக்களிடம் எடுத்துச்சொல்லி, தமிழகத்தில் தாமரையை மலரவைக்க பா.ஜ.க தொண்டர்களில் ஒருத்தியாக நானும் பாடுபடுவேன்!''