“திருந்துகிறார்கள்... சேர்கிறார்கள்... பா.ஜ.க-வை வளர்க்கிறார்கள்!” - வானதி சீனிவாசன்

“எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில்தான் பாஜகவில் வந்து சேர்கிறார்கள். யாரையும் ஆசைகாட்டி நாங்கள் அழைப்பதில்லை!
எப்போதும் மாறாத புன்னகையும் உற்சாகமும்தான் வானதி சீனிவாசனுக்கு அடையாளம். தேசிய மகளிரணித் தலைவர் பொறுப்பு உற்சாகத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் பூச்செண்டுகள், வாழ்த்துகள் குவிய, இன்னொரு பக்கம் சென்னை, டெல்லி, மும்பை எனப் பரபரப்பாகப் பறந்துகொண்டிருக்கிறார். கார்ப் பயணம் ஒன்றில் கிடைத்த சிறிய அவகாசத்தில் அவரோடு உரையாடினேன்.
“பா.ஜ.க-வுக்குத் தென்னிந்தியாவிலிருந்து முதல் தேசிய மகளிரணித் தலைவர்... எதிர்பார்த்தீர்களா?”
“இல்லை. டாக்டர் தமிழிசை, மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் மாநிலப் பொதுச்செயலாளராக, முருகன் தலைவராக வந்தபிறகு துணைத்தலைவராக எனக்குத் தரப்பட்ட வேலையைத் தீவிரமாகச் செய்தேன். பொறுப்புகளில் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்ததில்லை. எங்கள் கட்சியில், எல்லோருடைய வேலைகளும் கவனிக்கப்படும். எந்த நிலையிலிருந்தும் பெரிய பொறுப்புகளுக்கு வருவார்கள். என் பணிகளையும் கவனித்து நம்பிக்கையோடு இந்தப் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள். ரொம்பச் சின்ன வயதிலேயே ஏபிவிபி-க்குள்ள வந்துட்டேன். கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்திலிருந்தே தீவிரமான இயக்கச் செயல்பாடுகள். அப்போ மாநிலச் செயலாளராக இருந்தவர்தான் பின்னாளில் என் கணவர் ஆனார். இப்போது என் கணவர் விசுவ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவர். நிறைய அனுபவங்கள்... ஏற்ற இறக்கங்கள்... இன்னைக்கு மிகப்பெரிய பொறுப்பு தரப்பட்டிருக்கு. இன்னும் தீவிரமா வேலை செய்யணும்.”

“சமீபகாலமாக அ.தி.மு.க, பா.ஜ.க-வோடு முரண்படுகிறது. கூட்டணியிலிருந்து வெளியேற ஆயத்தமாகிறார்களா?”
“கூட்டணியில் எந்தக் குழப்பமுமில்லை. ஒரு மாநில அரசு அவர்களின் அதிகாரத்தின் கீழ் சில நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். சில விஷயங்களில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஆனால் அதற்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லை. நாங்கள் தேவைப்படக்கூடிய நேரங்களில் மக்கள் பிரச்னைகளை எடுத்துச் செல்கிறோம். அது நடக்காதபோது விமர்சிக்கிறோம். எங்கள் மாநிலத் தலைவர் வேல் யாத்திரைக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். கொரோனா இருந்தாலும் பீகாரில் தேர்தலே நடத்தி முடித்துவிட்டார்கள். இங்கு ஒரு அரசியல்கட்சி தகுந்த முன்னேற்பாடுகளோடு ஒரு யாத்திரை நடத்துவதற்கு இத்தனை களேபரங்கள். இதுமாதிரியான விஷயங்களில் தமிழக அரசு சரியான ஜனநாயக மாண்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. கூட்டணியில் இருப்பதால் முரண்பாடுகளோ விமர்சனங்களோ இருக்கக்கூடாது என்ற கட்டாயமும் இல்லை.”
“நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. கந்த சஷ்டி கவசம், வேல் யாத்திரை, மனுஸ்மிருதியை வைத்தே பா.ஜ.க அரசியல் செய்வது சரிதானா?”
“இந்து மத சிந்தனைகளையும் நடை முறைகளையும் கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்தும் நிகழ்வுகள் தமிழகத்தில்தான் அதிகம் நடக்கின்றன. ஆரம்பக்காலத்தில் திராவிடர் கழகம் விநாயகர் சிலையை உடைத்தது, ராமர் சிலைக்கு செருப்பு மாலை போட்டதில் தொடங்கி, இன்று, எதிர்க்கட்சித் தலைவரும் அவர் கட்சி சார்ந்த எம்பி-களும் குறிப்பிட்ட மதத்தை அவமானப்படுத்துவது, நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துவது என்று இங்குமட்டும்தான் இந்த நிலை. இதுபற்றி யார் பேசுவது..? அதனால்தான் பா.ஜ.க பேசுகிறது. இதே பா.ஜ.க தான் மதுவுக்கு எதிராக தமிழ்நாட்டில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது. நான் மாநில மகளிரணிப் பொறுப்பாளராக இருந்தபோது மூன்று பெரிய மாநாடுகள் மதுவுக்கு எதிராக நடத்தியிருக்கிறோம். நேரடியாக நானே போராடி மூன்று மதுக்கடைகளை மூடியிருக்கிறேன். ‘தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை’ என்று நீர்நிலைகளைக் காக்க யாத்திரை நடத்தியிருக்கிறோம். மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காகவும் பேசுவோம். யாரும் பேசத் தயங்குகிற, இந்து மதத்துக்கு எதிரான செயல்பாடுகளைக் கண்டித்தும் பேசுவோம்.”
“மனுஸ்மிருதியில் இருப்பதைத் திருமாவளவன் சொன்னால் எதிர்க்கிறீர்கள். எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றோர் தொடர்ந்து பெண்களை அவமானப்படுத்துவது போல் பேசும்போது ஏன் மௌனம்?’’
“மனுஸ்மிருதியையெல்லாம் இங்கே யார் பின்பற்றுகிறார்கள். அரசாங்கத்திலோ சட்டத்திலோ அவற்றுக்கு இடமிருக்கிறதா? நீங்கள் குறிப்பிட்டவர்கள், அவர்கள் பேசியது தொடர்பான விளக்கத்தையோ மறுப்பையோ தருகிறார்கள். நாங்கள் திருமாவளவனிடம் எதிர்பார்ப்பது அவர் பேசியதற்கான விளக்கம் அல்லது வருத்தத்தைத்தான்.”

“தொடர்ந்து சினிமாக்காரர்களைக் கட்சியில் சேர்க்கிறீர்கள். கவர்ச்சிகரமான அரசியல் நடத்த நினைக்கிறதா பா.ஜ.க?”
“வாரிசு அரசியல், பண அரசியல் இல்லாமல் ஒரு கட்சியை நடத்தி அதிகாரத்தைக் கொண்டுவரமுடியும் என்பதற்கு பா.ஜ.கதான் உதாரணம். ஒரு கட்சி வளரும்போது எல்லாத் தரப்பு மக்களும் உள்ளே வருவார்கள். தமிழகத்தில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் நெருக்கமான பிணைப்பு உண்டு. சினிமாக்காரர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது இங்கே இயல்பு. இன்று எல்லோரும் தேடி வருகிறார்கள் என்றால், கட்சி வளர்கிறது என்று பொருள். குறிப்பாக சினிமாக்காரர்கள் வருவது வளர்ச்சிக்கான குறியீடு.”
“ ‘பா.ஜ.க-வில் சேர்ந்தாலும் நான் இன்னும் பெரியாரிஸ்ட்’தான் என்று குஷ்பு சொல்லியிருக்கிறார். பா.ஜ.க-வில் பெரியாரிஸ்ட்களுக்கு இடமுண்டா?”
“தீண்டாமை, பெண்கள் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம் போன்ற விஷயங்களில் பெரியாருக்கும் எங்களுக்கும் முரண்பாடில்லை. அவருடைய கடவுள் மறுப்பு, இந்து மத எதிர்ப்பில்தான் எங்களுக்குக் கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. குஷ்பு, ‘பெரியாரிஸ்ட்’ என்று எந்த அடிப்படையில் சொன்னார் என்று தெரியவில்லை. எங்கள் கட்சியின் கொள்கையைப் புரிந்துகொண்டும் ஏற்றுக்கொண்டும்தான் குஷ்பு எங்கள் கட்சிக்கு வந்திருக்கிறார். எந்த அளவில் அவர் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுகிறார் என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.”
“இந்துக்கள் நலனுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும் பா.ஜ.க, ஆணவக்கொலைகளுக்கு எதிராகவோ தலித் மக்கள் உரிமைகளுக்காகவோ ஒரு போராட்டத்தையும் நடத்தியதில்லையே?”
“அதிக பட்டியலின எம்.பி-க்கள் இருப்பது எங்கள் கட்சியில்தான். ஆணவக்கொலைகள் போன்ற பிரச்னைகளை அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் தீர்க்க நாங்கள் முயல்கிறோம். அந்த மக்களை ஓட்டு வங்கியாக நாங்கள் பயன்படுத்துவதில்லை. பதற்றத்தை உருவாக்கி அரசியல் செய்ய நாங்கள் விரும்புவதில்லை.”
“மருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டைத் தர மறுக்கிற மத்திய அரசு, பொருளாதார அடிப்படையில் முன்னேறிய சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறது. அப்படியானால் பா.ஜ.க எந்த ‘இந்துக்களுக்கான’ கட்சி?”
“பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது பா.ஜ.க அரசியல்ரீதியாக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி. அதனால் அதை நிறைவேற்றி யிருக்கிறோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் நடந்த தவறுதான் ஓபிசி இட ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்குக் காரணம். ‘பின்தங்கிய வகுப்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஜாதிகளின் தன்மை வேறுபடுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். இருக்கும் குறைந்தபட்ச கால அவகாசத்தில் அந்தப்பணியை முடிக்க முடியாது. அதனால் அவகாசம் கொடுங்கள்’ என்று மத்திய அரசு சொல்கிறது. கொடுக்கமாட்டோம் என்று எங்கேயும் சொல்லவில்லை. அதேசமயம், இந்தப்பணிகள் முடியும்வரை மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீடு நடைமுறை தொடரவேண்டும் என்று நாங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம்.”
“கல்வி முதல் மின்சாரம் வரை மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாக மத்திய அரசின்மீது குற்றம் சாட்டப்படுகிறதே?”
“மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வரும்போது மாநில அரசு ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் அதற்குப் பெயர் அடிமைத்தனம் அல்ல. cooperative federalism. எப்போதும் முரண்பாட்டோடு நடந்து அதிகாரத்தைக் காட்டுவதால் பாதிக்கப்படுவது மக்கள்தான். அதைப் புரிந்துகொள்ளுங்கள்.”
“ஊழலற்ற கட்சி என்று பா.ஜ.க-வை முன்னிறுத்துகிறீர்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் சேர்வதும், ஆட்சிகள் மாறுவதும் பணபலம் இல்லாமலா நடக்கின்றன?”
“எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில்தான் பா.ஜ.க-வில் வந்து சேர்கிறார்கள். யாரையும் ஆசைகாட்டி நாங்கள் அழைப்பதில்லை. கசப்பான அனுபவங்கள் காரணமாக வேறு கட்சிகளிலிருந்து வருகிறார்கள்.”
“சமீபகாலமாக குற்றப்பின்னணி உள்ளவர்கள் பா.ஜ.க-வில் சேர்வது அதிகரித்துள்ளதே?”
“சமீபகாலமாக பா.ஜ.க-வில் வழக்கறிஞர்கள் அதிகம் சேர்ந்திருக்கிறார்கள்; பெண்கள் அதிகமாகச் சேர்ந்திருக்கிறார்கள்; திரைத்துறையினர் அதிகம் சேர்ந்திருக்கிறார்கள். குற்றப்பின்னணி கொண்ட ஓரிருவர்கூட ‘நாங்கள் திருந்திவிட்டோம்’ என்று வந்து சேர்ந்திருக்கிறார்கள். சமூகத்தில் உள்ள அனைவருக்குமான கட்சியாக பா.ஜ.க மாறத் தொடங்கியிருப்பதைத்தான் இது காட்டுகிறது.”