கட்டுரைகள்
Published:Updated:

“நான் சி.எம் ஆகணும்னு அவர் ஆசைப்படுறார்!” - சரவெடி சசிகலா புஷ்பா

கணவருடன் சசிகலா புஷ்பா
பிரீமியம் ஸ்டோரி
News
கணவருடன் சசிகலா புஷ்பா

ஜெயலலிதா என்னைக்குமே ஒரு லெஜண்ட் லீடர்தான். அதேநேரம் எனக்கு நடந்ததை நான் சொல்றதுக்கு யாருக்கு எதுக்கு பயப்படணும்?

சசிகலா என்று பெயர் வைத்தாலே சர்ச்சைதான்போல!

ஒட்டுமொத்தக் கட்சியும் எந்த எதிர்ப்புமின்றி ஜெயலலிதா காலில் விழுந்துகிடக்க, ‘என்னை ஜெயலலிதா தாக்கினார்’ என்று எதிர்க்குரல் எழுப்பியவர் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க பிரதிநிதியாக நாடாளுமன்ற மாநிலங்களவைக்குள் நுழைந்த சசிகலா புஷ்பா, பதவிக்காலத்தை முடித்து, வெளியில் வரும்போது பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர். இந்த ஆறாண்டுக் காலத்தில், சசியைச் சுற்றிய சர்ச்சைகள் ஏராளம். தி.மு.க-வின் திருச்சி சிவாவுடன் டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த தகராறு தொடங்கி, ஜெயலலிதா குறித்து மாநிலங்களவை யிலேயே புகார் கூறியது, தொடர்ந்து அ.தி.மு.க-விலிருந்து நீக்கம், நீதிமன்றத் தடையைப் பொருட் படுத்தாமல் ராமசாமி என்பவரைத் திருமணம் செய்தது வரை பட்டியல் பெரியது. `அரசியல் முதல் குடும்பம் வரை அத்தனையையும் பேசலாமா’ என்றேன். தம்பதி சகிதமாகவே தயாரானார்கள் இருவரும்.

``ஊரடங்கு தொடங்கிய புதுசிலேயே பதவிக்காலம் முடிஞ்சிடுச்சு. அந்தச் சமயத்துல என்னை ராஜ்யசபாவுக்கு அனுப்பி வெச்ச அம்மாவை நன்றியுடன் நினைவுகூர்ந்தேன். அவங்க எனக்குத் தந்த வாய்ப்பு மூலமாத்தான் ஒரு நாட்டின் நிர்வாகம் எப்படிச் செயல்படுதுன்னு பக்கத்துல இருந்து தெரிஞ்சுக்க முடிஞ்சது. ஒரு எம்.பி-யா நான் செய்த சில விஷயங்கள் எனக்குத் திருப்தியா இருந்தது. ‘பெண்கள் தனிநபர் மசோதா கொண்டு வந்தேன். அது மூலமா பெண்களுக்குப் பேறுகால விடுப்பு, சம்பளத்துல சாதகமான விஷயங்கள் நடந்திருக்கு. என்னுடைய சொந்தத் தொகுதி யான தூத்துக்குடியின் வளர்ச்சிக்காகப் பேசியிருக்கேன். மொத்தத்துல ‘பரவால்ல சசி’னு நானே டிக் மார்க் போட்டுக்கலாம்’’ என்றவரிடம் கேள்விகளை வைத்தேன்.

``எம்.பி.யாகப் பதவியேற்ற கொஞ்ச காலத்துலேயே ஜெ.யுடன் மோதல். அங்கிருந்துதான் வரிசைகட்டத் தொடங்கியதா சர்ச்சைகள்?’’

“எம்.பி.ஏ படிக்கறதுக்காக சிங்கப்பூர்ல ரெண்டு வருஷம் தங்கியிருந்தேன். ஒரு மனத்தெளிவு, நேர்மையான அப்ரோச் செல்லாம் அங்க வந்ததுதான். அங்கெல்லாம் பிரைம் மினிஸ்டரே நடந்துபோயிட்டி ருந்தாலும் மக்கள் எந்தப் பதற்றமும் இல்லாம கடந்துபோவாங்க. ஆனா தமிழகத்தில் நிலைமை தலைகீழ்.

ஜெயலலிதா என்னைக்குமே ஒரு லெஜண்ட் லீடர்தான். அதேநேரம் எனக்கு நடந்ததை நான் சொல்றதுக்கு யாருக்கு எதுக்கு பயப்படணும்? நான் அவங்களுக்கு எதிராப் பேசினதையே அவங்க ரசிச்சாங்கன்னு பின்னாடி கேள்விப்பட்டேன். ஒருவேளை அவங்க இப்ப இருந்தாங்கன்னா, என்னை மறுபடியும் கட்சியில்கூடச் சேர்த்திருக்கலாம். ஏன்னா, என் மீது அவங்களுக்கு அத்தனை பிரியம் இருந்தது.’’

கணவருடன் சசிகலா புஷ்பா
கணவருடன் சசிகலா புஷ்பா

``சரி, ஜெ.மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் தொடர்வதில் என்ன சிக்கல் வந்தது? பா.ஜ.க பக்கம் போனது ஏன்?’’

“சரியான லீடர்ஷிப் இல்லையே. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ரெண்டு பேருமே எங்கூட ஒண்ணா இருந்து வேலை பார்த்தவங்கதான். அவங்களை அம்மா இருந்த இடத்துல என்னால பொருத்திப் பார்க்க முடியாது. அதேநேரம் இந்தப்பக்கம் பிரதமர் மோடி ஆளுமையான ஒரு தலைவராத் தெரிஞ்சார்.

மோடியைப் பார்த்து நான் வியந்த அந்தத் தருணத்துலதான் என் வாழ்க்கையில் வந்தார் டாக்டர் ராமசாமி. என் கணவர். ஒரு சின்ன ஊசலாட்டத்துல இருந்தவளுக்கு பா.ஜ.க கொள்கைகளை விளக்கி, முழு வீச்சுல என் கையைப் பிடிச்சு அங்க கூட்டிட்டுப் போனது அவர்தான்’’ என, கணவரைப் பார்க்க, அடுத்த கேள்வியை ராமசாமியிடம் வைத்தேன்.

``நீதிபதி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர், பேராசிரியர், ஐ.ஏ.எஸ் அகாடமியின் உரிமையாளர்... இப்படி நிறைய சொல்றாங்க. உண்மையில் நீங்க. யாரு?’’

“பூர்வீகம் தஞ்சாவூர். சென்னை லயோலாவுல படிச்சிட்டு ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே டெல்லி போய் செட்டிலாகிட்டேன். அங்க லோக் அதாலத்ல இருந்தேன். மத்திய அரசு என் பணிகளைப் பார்த்து சில பொறுப்புகளைத் தந்தாங்க. அதனால மத்திய ஆட்சியாளர்கள்கிட்ட நெருக்கம் உண்டாச்சு. இன்னும் உங்களுக்குத் தெளிவாச் சொல்லணும்னா, நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன். இங்க உள்ளவங்க இயலாமையில ‘சங்கி’ன்னு ஒரு வார்த்தையைப் பயன்படுத்தறாங்களே, அந்த சங்கிகள் கூட்டத்துல ஒருத்தன். இனி பா.ஜ.க தமிழ்நாட்டு அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கப்போகுது. ஆர்.எஸ்.எஸ் காரன்கிறதால இயல்பாவே பா.ஜ.க-வுடன் நெருக்கமுண்டு. அந்த வகையில சசி மாதிரி ஒருத்தர் இருக்க சரியான இடம் அந்தக் கட்சிதான்ங்கிறதை எடுத்துச் சொன்னேன்.’’

``சசிகலா புஷ்பா, ராமசாமி... யார் மனசுல யாரு முதல்ல இடம் பிடிச்சது?’’

கணவருடன் சசிகலா புஷ்பா
கணவருடன் சசிகலா புஷ்பா

``பொதுவா எனக்கு அரசியல்வாதிகள்கிட்ட ஒரு வெறுப்பு இருந்திட்டிருந்தது. ஊழல், அரசியலை பிசினஸ் ஆக்கறது மாதிரியான விஷயங்கள்தான் பிரச்னை. ஆனா சசி அந்த மாதிரி ஆளா இல்லாதவங்களா இருந்தாங்க. அவங்களோட வழக்குகளை எடுத்தப்பதான் நான் அவங்களுக்கு அறிமுகமானேன். சந்திச்ச கொஞ்ச காலத்திலேயே அவங்களைப் பத்தி ஒரு உயர்வான பிம்பம் எனக்குள் வந்திடுச்சு. அதுவரைக்கும் அரசியல் வாதின்னாலே ’என்ன ஏதுன்னு கேட்காம அரெஸ்ட் பண்ணணும்’னு நினைச்சிட்டிருந்தவன் நான். முதன்முதலா என்னை அரெஸ்ட் பண்ணின அரசியல்வாதி இவங்கதான். ஹவுஸ் அரெஸ்ட் இல்லீங்க, ஹார்ட் அரெஸ்ட்! தப்பாப் புரிஞ்சுக்கப் போறாங்க, இதயத்தைக் கவர்ந்துட்டாங்கன்னு சொல்ல வந்தேன்’’ - உற்சாக மூடில் பேசிய ராமசாமியை இடைமறித்தவராய்த் தொடர்ந்தார் சசி.

‘`எனக்கு இவரைப் பார்த்து வியக்க வைத்தது இவரோட துணிச்சல். தொண்ணூறுகளில் தி.க தலைவர் வீரமணியும் அவரின் மகனும் டெல்லியில கைதானாங்க. அந்தக் கைதுக்குக் காரணம் இவர்தான். அ.தி.மு.க தலைமைக்கு எதிரா நான் நாடாளுமன்றத்துல பேசின பிறகு என்மீது போடப்பட்ட அத்தனை வழக்குகளையும் கையிலெடுத்து எல்லாத்தையும் பொய் வழக்குன்னு நிரூபிச்சதும் இவர்தான். இந்தத் தைரியம், தெளிவான சிந்தனை, எல்லாமும்தான் இவரோடு வாழ்க்கையைப் பகிர்ந்துக்கலாம்னு முடிவு செய்ய வெச்சுது.

நான் இல்லாம சாப்பிட மாட்டார். நான் காபி தந்தாதான் குடிப்பார். என்னுடைய வளர்ச்சியில அவ்வளவு அக்கறையா இருக்கார். அவர் தந்த ஊக்கத்துலதான் நான் இப்ப சட்டம் படிச்சிட்டிருக்கேன். பொண்டாட்டியைத் தமிழ்நாட்டு சி.எம் ஆக்கிடணும்கிற எண்ணம்கூட அவருக்கு இருக்கு. இன்னைக்கும் என்னை விட்டு ஒருநாள்கூடப் பிரிஞ்சு இருக்க மாட்டார். ஏன் நானும் அப்படித்தான். சிம்பிளாச் சொல்லணும்னா நாங்க நவீன கால வள்ளுவனும் வாசுகியும் மாதிரி’’ – சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரிக்கிறார் சசி.

(மீண்டும் சசியிடமே) ``தி.மு.க-வே, ஓட்டு கேட்டு எங்க வீட்டுக்கு வராதே’ன்னு தூத்துக்குடியில் 2021 தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கீட்டீங்க போல...’’

“ஆமாங்க. தேர்தல் நெருங்குதுல்ல, அதான். தி.மு.ககாரங்க இந்தி, இந்தின்னு கருணாநிதி காலத்து வேதத்தையே ஓதிட்டிருக்காங்க. அதுக்கு ஒரு உதாரணம்தான் கனிமொழியின் `ஏர்போர்ட் இந்தி சர்ச்சை’ இதெல்லாம் இனி எடுபடாது. எங்க பிரசாரம் வலுவானதா இருக்கும். நிச்சயம் வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மாற்றம் வரும்.”