Published:Updated:

``காங்கிரஸ் கட்சியை இனிமேல் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்!’’ - வருந்தும் பீட்டர் அல்போன்ஸ்

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ் ( பா.காளிமுத்து )

தமிழக காங்கிரஸ் கட்சியில், `தேர்தலை எதிர்கொள்ளத் தேவையான பண வசதி இருப்பவர்களாகப் பார்த்தே சீட் கொடுக்கப்படுகிறது' என தன் மன வேதனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ்.

`இந்திய விடுதலை இயக்க'த்தை முன்னெடுத்துச் சென்று வெள்ளையனை வீழ்த்திய காங்கிரஸ் கட்சி, இன்றைக்கு இந்திய குடிமக்களின் மனங்களை வெல்ல முடியாமல் ஜனநாயகத் தேர்தலில் வீழ்ச்சியுற்று வருவது... வரலாற்றுச் சோகம்.

நூற்றாண்டைக் கடந்த காங்கிரஸ் கட்சி, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 63 இடங்களில் கட்டுத்தொகையையும் இழந்து பரிதாபமாகத் தோற்றுப்போனது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

சோனியா - ராகுல்
சோனியா - ராகுல்

``சமீபகாலங்களில், அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சி சந்தித்துவரும் தோல்விகளின் பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்?''

``காங்கிரஸ் கட்சி எடுத்த ஒரு முடிவால் மட்டுமே இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்துவிட்டன என்று சொல்லிவிட முடியாது. கடந்த 70 ஆண்டுக்கால அரசியலில், அதுவும் குறிப்பாக கடந்த 30 ஆண்டுக்காலத்தில், காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காகப் பல மாநிலங்களில் காங்கிரஸ் கொடுத்த விலைதான், அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸ் தன்னுடைய அரசியல் இடத்தை இழந்தது.

உதாரணமாக, தமிழ்நாட்டையே சொல்லலாம். இங்கே கடந்த 50 ஆண்டுகளாகப் பொதுமக்கள் நலன் சார்ந்து நடைபெறுகிற எந்தவொரு செயலுக்கும் தொடர்பிருந்ததில்லை.

மக்களுக்கு கிடைக்க வேண்டிய பணிகள் அனைத்துமே ஊராட்சி ஒன்றியம் அல்லது மாநில சட்டமன்றம் என இந்த இரண்டு தளங்களில் மட்டும்தான் நேரடியாகக் கிடைக்கின்றன. ஆனால், இவையிரண்டிலுமே காங்கிரஸ் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத சூழல் தொடர்ந்து ஏற்பட்டுவந்த காரணத்தால்தான்... இவ்வளவு பெரிய இழப்பை நாம் இன்றைக்கு சந்தித்து வருகிறோம்.''

``அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீட்டில் காங்கிரஸ் - தி.மு.க இடையே ஏற்பட்ட உரசல் இப்போது சமாதானத்துக்கு வந்துவிட்டது. இதுவும்கூட ஒருவகையில் சமரசம்தானா?''

''இல்லையில்லை... 1971 தேர்தலின்போது தமிழ்நாட்டில் தி.மு.க-வுடன் இந்திராகாந்தி கூட்டணி அமைத்தார். அப்போது, 10 நாடாளுமன்ற சீட்களை மட்டும் பெற்றுக்கொண்டு, `எங்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் சீட்டே வேண்டாம்' என்று சொல்லிவிட்டார். அதுதான் முதல் புள்ளி.

2006 - 2011, தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது, அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியையும் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருந்தனர். `காங்கிரஸ் கட்சிக்காக ஏழு துறைகளின் அறை சாவி என்னிடம்தான் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியிலிருந்து பட்டியலைக் கொடுத்துவிட்டு சாவிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று என்னிடமும் மறைந்த சுதர்சனத்திடமும்தான் கருணாநிதி சொன்னார். அப்போது ஆற்காடு வீராசாமியும் கூடவே இருந்தார். ஆனாலும்கூட, அப்போது டெல்லியிலிருந்த காங்கிரஸ் எம்.பி-க்களோ `ஆட்சியில் நாமும் பங்குபெற்றால், தி.மு.க-வுக்கு வருகிற கெட்ட பெயரெல்லாம் நமக்கும் வந்துவிடும்' என்று சொல்லி மறுத்தனர். அப்போதுகூட நான், `அப்படியென்றால், தி.மு.க-வை ஆட்சிக்கட்டிலில் அமரவைப்பதற்கு ஆதரவு கொடுத்தபோது, நமக்கு கெட்டபெயர் வராதா...' என்று கேள்வி கேட்டேன்.

தமிழ்நாட்டில், இனிமேல் இப்படியொரு வாய்ப்பு காங்கிரஸுக்கு எப்போது கிடைக்கும்? அன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு 7 அமைச்சர்கள் கிடைத்திருந்தால், அது கட்சியின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காலகட்டமாக அல்லவா இருந்திருக்கும். ஆக, வந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதை `சமரசம்' என்று சொல்லாமல், வேறு எப்படிச் சொல்ல முடியும்?''

கருணாநிதி
கருணாநிதி

``காங்கிரஸ் கட்சியேகூட சமீபகாலங்களில், பெரும்பான்மை மத அடையாளத்தை அணிந்துகொள்ள நேரிட்டதும் சிறுபான்மை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திவிட்டதோ..?''

''அப்படியல்ல... 'எங்களுக்காக உங்களுடைய மத அடையாளத்தை நீங்கள் தொலைத்துவிட வேண்டாம்' என்றுதான் சிறுபான்மையின மக்கள் எப்போதுமே நினைக்கிறார்கள். 'இந்துவாகவே இருப்பதே குற்றம்' என்று எந்தவொரு சிறுபான்மை வாக்காளரும் சொல்லவில்லை.

மகாராஷ்டிராவில்கூட, சிவசேனாவோடு கூட்டு சேர முடியுமா என்று காங்கிரஸ் கட்சியே தயங்கிக்கொண்டிருந்த வேளையில், அம்மாநிலத்திலுள்ள சிறுபான்மையின கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வந்து, 'பா.ஜ.க-வையும் ஆர்.எஸ்.எஸ்-ஸையும் ஒன்றாக இணைத்து ஆட்சியில் அமரவைக்கக் கூடாது என்பதுதான் நமது நோக்கமே தவிர... எங்களுக்காக நீங்கள் சிவசேனாவோடு சேராமல் இருக்க வேண்டாம்' என்று சொன்ன பிறகுதான் அங்கே கூட்டணி அரசே அமைந்தது. இதற்குப் பிறகுதான் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் என 3 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிகளையும் பெற்றது. மற்றபடி, `நாங்களும் இந்துக்கள்தாம்; ஒட்டுமொத்தமாக எங்களை இந்துக்களின் விரோதியாகச் சித்திரிக்கப்படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்' என்பதை பொதுமக்களுக்குப் புரியவைக்கிற விதமாக இதுபோன்ற சில சமிக்‌ஞைகளை செய்துவருகிறோம். எனவே, இந்து மதம் என்பது வேறு; இந்துத்துவா என்பது வேறு!''

``தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சித் தலைவராக வர முடியவில்லையே என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?''

``தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக முடியவில்லை, ஆசை நிறைவேறவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருந்தாலும்கூட, இன்றைக்கு எனக்கான அடையாளத்தை ஏற்படுத்தித்தந்தது காங்கிரஸ் கட்சிதான். 3 முறை எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறேன்; ஒருமுறை எம்.பி மற்றும் தமிழ்நாடு முழுக்க அறியப்பட்ட பொதுநலப் பணியாளராக இன்றைக்கு இருக்கிறேன் என்றால், இவை எல்லாமே காங்கிரஸ் கட்சியால்தான். ஏனெனில், எனக்குப் பின்னே பெரிய சாதி பலமோ, மதபலமோ கிடையாது.. காங்கிரஸைத் தவிர.

நான் பிறந்து வளர்ந்த காங்கிரஸ், என் கண்ணெதிரிலேயே சிறுத்துப் போகும்போது வருத்தமாக இருக்கிறது. இந்த வருத்தத்தைப் பதிவு செய்யக்கூட இடம் இல்லை. எத்தனை முறை டெல்லிக்குப் போயாச்சு, காத்துக் கிடந்தாச்சு, எடுத்துச் சொல்லியாச்சு...! `தமிழ்நாட்டில் என்ன செய்தும் பிரயோஜனமில்லை' என்றுதான் டெல்லியும் தனியே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.''

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்
பா.காளிமுத்து

``இதுபோன்ற விரக்தியான பேச்சுகள் காங்கிரஸ் கட்சியை இன்னும் பலவீனப்படுத்திவிடாதா?''

``நான் பேசுவது கட்சியைப் பாதிக்கும் என்று நினைக்கவில்லை. ஏற்கெனவே இதைப் பல தளங்களில் பலமுறை பேசி அலுத்துவிட்டேன். கட்சிக்குள்ளே இதைப் பற்றிப் பேசுவதற்கான தளங்கள்கூட இல்லை. இப்போது நான் பேசுவதும்கூட, இவற்றையெல்லாம் செயல்படுத்தவில்லை என்றால், `காங்கிரஸ் கட்சியை இனிமேல் தேடிக் கண்டுபிடிக்கத்தான் வேண்டும்' என்ற சிரமமான நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். ஏனெனில், காங்கிரஸ் பலவீனப்படுவது, நாட்டுக்கு நல்லதல்ல!''

``ஆரோக்கியமான உணவு... எந்த மதமாக இருந்தால் என்ன?'' - `அட்சய பாத்ரா’ திவ்யா சத்யராஜ்

``தமிழ்நாட்டில், திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை மீறி காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுத்துவிட முடியுமா?''

``தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கான வலுவான அடித்தளம் இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. அந்த அடித்தளத்திலிருந்து கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏனெனில், காங்கிரஸ்காரன் இல்லாத ஒரு கிராமம்கூட இங்கே இல்லை.

எங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில், இன்றைக்கும் பல்வேறு கிராமங்களில் கட்சிக்கென்று அலுவலகங்களே இருக்கின்றன. நான் மாவட்டத் தலைவராக இருந்தபோது, அ.தி.மு.க, தி.மு.க-வை எதிர்த்து காங்கிரஸ் தனித்து நின்றபோது 7 இடங்களில் வெற்றிபெற வைத்தவன். 1989 - காலகட்டத்தில் ஜி.கே.மூப்பனார் எடுத்த முயற்சியை நாம் தொடர்ந்து வளர்த்து வந்திருக்க வேண்டும்!''

மூப்பனார்
மூப்பனார்

``பொதுவாக காங்கிரஸ் கட்சி, செய்யத் தவறிய விஷயங்கள் என்று எதைச் சொல்வீர்கள்?''

``ஆட்சியைப் பற்றி எடுத்துக்கொண்ட கவனத்தையும் கரிசனத்தையும் கட்சியைப் பற்றி எடுத்துக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டிலேயேகூட, 1969-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் வந்த தலைவர்களில் பெரும்பாலோருக்கு எம்.எல்.ஏ ஆக வேண்டும், எம்.பி ஆக வேண்டும் என்ற நோக்கம்தான் இருந்ததே தவிர, கட்சியை வளர்க்க வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை.

1969-க்கு முன்புவரை முதல் அமைச்சரையும் தாண்டி கட்சியின் நிர்வாகிகளுக்குத்தான் அதிகப் பங்கு, பலம் இருந்தது. ஆனால், 69-க்குப் பிறகு எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர்களுக்குத்தான் பங்கிருப்பதாக நிலைமை தலைகீழாக மாறிப்போனது. சுருக்கமாகச் சொன்னால், 69-க்குப் பிறகு வால்தான் நாயை ஆட்டியது.

எம்.பி-க்கள்தான் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை முடிவு செய்வதாக இந்தியா முழுமைக்குமே நிலைமை மாறிப்போனது. எல்லா முடிவுகளும் டெல்லியிலேயே எடுக்கப்பட்டன. இன்றைக்கும்கூட, தமிழகத்தில் ஒரு எம்.பி தொகுதிக்குள்ளாக மாவட்டத் தலைவர் அல்லது வட்டாரத் தலைவர், நகரத் தலைவர் என்று யாரையும் மாற்றும் அதிகாரம் எம்.பி-களுக்குத்தான் இருக்கிறது; தமிழகக் காங்கிரஸ் தலைவர் நினைத்தாலும்கூட மாற்ற முடியாது. எம்.பி நினைப்பதுதான் நடக்கும்.''

``தமிழக காங்கிரஸில், வேட்பாளர் தேர்வின்போது தவறுகள் நடப்பதாகக் குறைபட்டிருந்தீர்களே..?''

``தேர்தலின்போது, கை நிறைய இடங்களை வாங்கி வைத்துக்கொண்டு, வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று தேடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், `தேர்தல் செலவுகளை எதிர்கொள்ள யார் கையில் பண வசதி இருக்கிறது' என்று பார்த்துதான் சீட்டே வழங்கப்படுகிறது.''

வசந்தகுமார்
வசந்தகுமார்

```எம்.எல்.ஏ-வாக ஜெயித்தவர், எம்.பி தேர்தலிலும் போட்டியிடுவது சரியல்ல என்ற பீட்டர் அல்போன்ஸின் வாதம் தவறு என்பதை வசந்தகுமாரின் வெற்றியே உறுதிசெய்துவிட்டது' என்கிறார்களே தமிழகக் காங்கிரஸார்..?''

``தனிப்பட்ட எந்தவொரு நபரையும் குறிப்பிட்டு நான் குற்றம்சாட்டவில்லை. கட்சியின் கொள்கையைப் பற்றித்தான் சொல்லியிருந்தேன். அடுத்ததாகத் தேர்தல் வெற்றியை வைத்துக்கொண்டு கொள்கையை விமர்சிக்க முடியாது. தேர்தலில், வசந்தகுமார் மட்டுமல்ல... அவரோடு சேர்த்து டாக்டர் செல்லக்குமார், ஜோதிமணி என 8 பேரும்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போதும்கூட சொல்கிறேன்... நாகர்கோவிலில் எத்தனையோ திறமைமிக்க தகுதியுள்ள தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலேயே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்திருக்கலாம் என்பதுதான் என் கருத்து!''

``காங்கிரஸ் கட்சிக்குள்ளாக வளர்ந்து வரும் வாரிசு அரசியல் பற்றி பீட்டர் அல்போன்ஸ் கண்டித்துப் பேசத் தயங்குவது ஏன்?''

``ஊடகத்தில் கண்டித்துப் பேசவில்லையே தவிர, இதுகுறித்த எனது கருத்துகளை அகில இந்தியத் தலைவர்களுக்குக் கடிதமாக எழுதியிருக்கிறேன். அதில், `எம்.பி, அமைச்சர் என ஒருவர் பதவியில் இருக்கும்போது, அவரின் மனைவி அல்லது மகன் எனக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யாரேனும் தேர்தல் களத்துக்கு வரக்கூடாது என கட்சியின் விதிகளிலேயே சேர்க்க வேண்டும்' என்று சொல்லியிருக்கிறேன்.

'நான் 2 தடவை எம்.பி-யாக இருக்கிறேன். அடுத்து என் மகனை எம்.பி-யாக்கிவிட்டுப் போகிறேன்' என்றால், கட்சியின் வேர் காய்ந்துதான் போய்விடும். அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது.''

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

``காங்கிரஸ் கட்சிக்குப் பணியாற்றுவதை யாரும் தடுக்கவில்லை. எனவே, வீட்டுக்குள் இருந்துகொண்டு கட்சியை விமர்சனம் செய்ய வேண்டாம்'' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா சொல்கிறாரே?''

''அதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு கட்சி வேலையைச் செய்வதற்கு முதலில் அங்கீகாரம் வேண்டும். நாளையே நான் நினைத்ததையெல்லாம் கட்சி வேலை என்று சொல்லி செய்துகொண்டிருந்தால், அதைக் கட்சி எப்படிப் பார்க்கும்..? கட்சி நடவடிக்கையாகப் பார்க்குமா, தனிப்பட்ட எனக்கான விளம்பர நடவடிக்கையாகப் பார்க்குமா?

வெறுமனே பிட் நோட்டீஸ் அச்சடித்து யார் வேண்டுமானாலும் பிரசாரம் செய்யலாம் என்றால், அந்தப் பகுதியிலுள்ள கட்சி நிர்வாகிகளே `கட்சியின் பெயரை இவர் தவறாகப் பயன்படுத்துகிறார்' என்று புகார் கொடுத்துவிட மாட்டார்களா? 'இது கட்சியின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு அல்ல' என்று கட்சித் தலைமையே அறிவிப்பு வெளியிட்டுவிடாதா? எனவே கட்சி அங்கீகாரம் கொடுக்காமல் யாரும் கட்சிப் பணி செய்துவிட முடியாது.

மீனவர் அணி, தொழிலாளர் அணி, ஐ.டி அணி, நெசவாளர் அணி என காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 40 அணிகள் இருக்கின்றன. இந்த அணிகளுக்கான மாநில துணைத் தலைவர், பொதுச் செயலாளர் என நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் யாரையும் எங்களுக்குத் தெரியவில்லை. காரணம்... இவர்கள் அனைவரையும் நியமனம்தான் செய்கிறார்கள். தேர்தல் வைத்து தேர்ந்தெடுப்பதில்லை.''

``தேர்தல் வைத்து தேர்வு செய்யும்போது, தவறான நபர்கள் வந்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, நியமன முறைதான் ஆரோக்கியமான நடைமுறை என்கிறார்களே..?''

''இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த முறை உறுப்பினர்கள் சேர்த்த கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. நானும் என் நண்பர்களும் மட்டுமே ஏழரை லட்சம் உறுப்பினர்களைக் கட்சிக்குள் சேர்த்தோம்.

ஆனால், இப்படிக் கட்சிக்காக உழைத்த நபர்களுக்கு அங்கீகாரத்தை வழங்காமல், எம்.எல்.ஏ, எம்.பி என அதிகாரத்தில் இருப்பவர்கள் சிபாரிசு செய்த நபர்களுக்கு மட்டுமே கட்சி அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. இதுதான் தவறு. இப்படிக் கட்சிக் கொள்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாத நபர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதால்தான் கட்சியின் வேர்கள் கெட்டுப்போய்விடுகின்றன.

தலைவர்கள் வந்துபோகிறபோது வாழ்த்தி பேனர் வைப்பது, கூட்டங்களுக்கு செலவு செய்து ஆட்களைத் திரட்டிவரும் பணம் செலவு செய்யக்கூடிய சக்தி படைத்தவர்களுக்கு மட்டுமே கட்சியின் பதவிகள் வழங்கப்பட்டால், கட்சியின் வேர் எப்படியிருக்கும்?''

பிரியங்கா - ராகுல்
பிரியங்கா - ராகுல்

``காங்கிரஸ் கட்சிக்கு பிரியங்கா காந்தி தலைவராக வேண்டும் என்ற உங்களது கோரிக்கை இப்போதும் தொடர்கிறதா?''

''கிராமக் காங்கிரஸிலிருந்து அகில இந்தியக் காங்கிரஸ் வரை முறையாக உறுப்பினர் சேர்க்கப்பட்டு, தேர்தல் நடைபெற வேண்டும். இந்தத் தேர்தலின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மட்டுமே கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும். பொதுக்குழு, அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினர், வட்டாரத் தலைவர், மாவட்டத் தலைவர், நகரத் தலைவர், மாநிலத் தலைவர் என அனைத்துப் பொறுப்புகளுக்குமே தேர்தல் முறையின் மூலம்தான் பதவிக்கு வர முடியும் என்ற சூழ்நிலை என்றைக்கு வருகிறதோ அன்றுதான் காங்கிரஸ் திருந்தும்.''

``அகில இந்திய காங்கிரஸின் தலைமைப் பொறுப்பும் தேர்தல் மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா?''

``அகில இந்திய காங்கிரஸ் தலைமை உட்பட... அனைத்துமே தேர்தல் மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதேசமயம் சோனியா, ராகுல், பிரியங்கா இந்தத் தலைவர்களைச் சுற்றித்தான் காங்கிரஸ் பின்னப்பட வேண்டும். ஏனெனில், இந்தக் குடும்பத்துக்குத்தான் காங்கிரஸ் கட்சியை ஒன்றாக இணைத்துக்கொள்ளக்கூடிய வசீகரமும் தியாகமும் இருக்கின்றன.''

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்
பா.காளிமுத்து

``தேர்தல் ஜனநாயகத்தை வலியுறுத்துகிற நீங்களும்கூட, நேரு குடும்பத்துக்குள்ளாகவே இன்னமும் தலைவர்களைத் தேடிக்கொண்டிருப்பது சரிதானா?''

``அவர்கள் இன்னமும் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள் என்று நாங்கள் நினைப்பதுதான் இதற்குக் காரணம். இன்றைய காலச் சூழலில், ஒரு முகம் இல்லாத கட்சி, முகவரி இல்லாத இயக்கத்தை நடத்தவே முடியாது என்பதுதான் இந்திய அரசியலின் எதார்த்தம். இந்த வகையில், நாடறிந்த, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்களாக இவர்கள்தாம் இருக்கிறார்கள். சாதி, மதம், மாநிலம் என்ற எல்லைகளையும் கடந்தவர்கள் இவர்கள். நான் சொல்வதுபோல், ஒரு தேர்தல் முறை நடத்தப்பட்டுவிட்டால், அடுத்தடுத்து தகுதியுள்ள தலைவர்கள் தானாகவே கட்சிக்குள் உருவாகி வருவார்கள்.''

இதோடு,

''சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைக்கூட காங்கிரஸ் இழந்து விட்டதா?’’

''சபரிமலை விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க நிலைப்பாட்டைத்தானே எடுத்தது?’’

''சொந்தக் கட்சி குறித்து இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவதால் பிரச்னைகள் வராதா?’’

- போன்ற விறுவிறு கேள்விகளுக்கும் பீட்டர் அல்போன்ஸ் அளித்துள்ள விரிவான பதில்களைப் படிக்க... நாளை வெளிவரும் ஆனந்தவிகடனில் படிக்கலாம்..!

அடுத்த கட்டுரைக்கு