Published:Updated:

``மதுரை பெண்ணைச் சந்திக்க ஆசைப்படுகிறேன்; அவர் யார் தெரியுமா?!" - தமிழிசை செளந்தரராஜன் #WomensDay

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

``ஒரு கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் என்னைப் பற்றி மிக மோசமாகப் பேசினார். அதைப் பார்த்து, `அடக்கடவுளே' எனச் சிரித்தேன்."

தமிழக பா.ஜ.க-வின் அடையாளங்களில் ஒருவராக இருந்தவர் தமிழிசை செளந்தரராஜன். தமிழகத்தில் பா.ஜ.க-வை பலம்பெற பல்வித முயற்சிகளை மேற்கொண்டார். அதற்காக, ட்ரோல், மீம்ஸ், விமர்சனங்கள் உட்பட ஏராளமான தனிப்பட்ட தாக்குதல்களையும் அசராமல் எதிர்கொண்டு, அரசியல் களத்தில் ஜொலித்தப் பெண்களில் முக்கிய இடத்தைப் பெற்றார். தமிழகத்தில் தாமரை மலராவிட்டாலும், தமிழிசையின் கடின உழைப்புக்கு ஆளுநர் பொறுப்பு கிடைத்தது. 

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

தெலங்கானா ஆளுநராக ஆறு மாதங்களை நிறைவு செய்திருப்பவர், களப்பணி, தனிப்பட்ட கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பது என உற்சாகம் குறையாமல் பணியாற்றிவருகிறார். மகளிர் தின வாழ்த்துகளை அட்வான்ஸாகத் தெரிவித்து, அவரிடம் பேசினோம்.

"எப்போதுமே உற்சாகமாக இயங்குகிறீர்களே எப்படி?"

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

``ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள். அதுபோல பொதுவெளியில் நம் தோற்றம்  சிறப்பாக இருக்கும்போதுதான், நாம் பேசும் கருத்துகள்கூட கூடுதல் கவனம் பெறும். தினந்தோறும் சிறப்பாக உடை அணிவேன். அதுவும், உடல்நிலை சரியில்லாத தினத்தில்தான் மிகச்சிறப்பாக உடை அணிவேன். விமர்சனங்களை எளிதில் கடந்துவிடுவேன். எனவே, எனக்குள் எந்த வருத்தங்களும் தங்குவதற்கு இடம் கொடுக்க மாட்டேன். அதனால், எப்போதும் உற்சாகமாக இயங்க முடிகிறது.

பா.ஜ.க-வின் தமிழக தலைவராக நான் இருந்தபோது, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் என்னைப் பற்றிப் பேசிய ஒரு கட்சியின் பெண் செய்தித் தொடர்பாளர் ஒருவர், `அவர் நாற்காலி மேல ஏறி நின்னு பேசியவர்தானே' எனக் குறிப்பிட்டார். அதேபோல தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வின்போது, ஒரு கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் என்னைப் பற்றி மிக மோசமாகப் பேசினார். அதையெல்லாம் பார்த்து, `அடக்கடவுளே' எனச் சிரித்தேன். என்னைப் பற்றி தவறுதலாகவே பேசியிருந்தாலும் கோபப்பட்டு அவர்கள் பேச்சுக்கு எதிர்வினை ஆற்ற மாட்டேன். இப்போது ஆளுநராக இருப்பதால் இன்னும் கூடுதல் கவனத்துடனும் கனிவுடனும் என் கருத்துகளை வெளிப்படுத்துகிறேன்."

"ஆறு மாத கால ஆளுநர் பணி அனுபவம் பற்றி..."

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

``என் அதிகாரத்துக்கு உட்பட்டு, அரசு அதிகாரிகள் உதவியுடன் பணியாற்றிவருகிறேன். இந்தப் பொறுப்பை ஏற்ற தொடக்கத்தில், நான் கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சிக்கு விரைவாகச் செல்லத் தயாரானேன். `மரபுப்படி முதல்வர் வந்து `10 நிமிடம் கழித்துதான் நீங்கள் செல்ல வேண்டும். அங்கு காத்திருக்கும் முதல்வர்தான் உங்களை வரவேற்க வேண்டும்' என அதிகாரிகள் சொன்னார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த என் பணியை அதிகார நோக்கத்தில் பயன்படுத்தாமல் அன்புடன் அணுக வேண்டும் என்று முடிவெடுத்து, அதன்படி செயல்படுகிறேன். தெலங்கானா மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்துவிட்டேன். 57 வயதாகும் நான்தான் இந்தியாவின் இளைய ஆளுநர் என்கிறார்கள். இதுவும் என் உற்சாகத்தை அதிகரிக்கிறது.

அடிக்கடி பள்ளிக் குழந்தைகளைச் சந்தித்துப் பேசுகிறேன். சமீபத்தில் பின்தங்கிய பகுதியிலுள்ள பள்ளிக் குழந்தைகளைச் சந்தித்தேன். `ஓடி விளையாடு பாப்பா' பாடலைத் தெலுங்கில் எழுதி வைத்துப் பாடி அவர்கள் என்னை வரவேற்றது மறக்க முடியாத அனுபவம். தற்கொலை எண்ணத்தில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் தற்கொலை எண்ணத்தை மாற்றியது, சரியான ஆவணங்கள் இருந்தும் நிலத்துக்கான பட்டா மாறுதலுக்காக மூன்று ஆண்டுகளாக அலைந்துகொண்டிருந்த ஒருவருக்கு மூன்றே நாளில் பட்டா கிடைக்க அதிகாரிளுக்கு உத்தரவிட்டது உட்பட உடனுக்குடன் ஆக்கபூர்வமான பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன்."

"சமையலில் ஆர்வம் உண்டா?"

"பொது மேடையிலும் அரசியல் மேடையிலுமே அதிக ஆர்வம் செலுத்துவதால், சிறுவயது முதலே சமையல் மேடைக்கும் எனக்குமான இடைவெளி ரொம்பவே தூரம். எனவே, சமையலில் எப்போதுமே எனக்கு விருப்பமில்லை. சமையலில் ஆர்வம் செலுத்துவது பெண்களின் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால், அதுவே பெண்களின் வளர்ச்சிக்கும் வெளியுலக அனுபவங்களைப் பெறுவதற்கும் தடையாக இருக்கக் கூடாது.”

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

"நீங்கள் சந்திக்க விரும்பும் நபர்கள்..."

"மக்கள் தலைவர்கள் முதல் எளிய மனிதர்கள் வரை எல்லோரிடமும் உள்ள நல்ல விஷயங்கள் எதுவானாலும் அதை நானும் கடைப்பிடிக்க முயல்வேன். எனவே, இன்ஸ்பிரேஷன் என ஒருசிலரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அதேநேரம் எளிய பின்னணியிலிருந்து பலருக்கும் முன்னுதாரணமாக உயர்ந்த பெண்களைச் சந்திக்க ஆசைப்படுவேன். அந்த வகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், மதுரை சின்னப்பிள்ளையைச் சந்தித்து காலில் விழுந்து வணங்கினார். அந்த சின்னப்பிள்ளையைச் சந்திக்கும் ஆசை இருக்கிறது."

"மக்கள் பிரதிநிதியாக ஆகாத வருத்தம் இப்போதும் இருக்கிறதா?"

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

``20 வருடமாக அரசியல் பணியில் இருந்தேன். தமிழக பா.ஜ.க தலைவராகச் சிறப்பாகவே பணியாற்றினேன். ஆனால், நாங்கள் எதிர்கொண்ட தேர்தல்களில் நான் பணியாற்றிய பா.ஜ.க-வுக்குச் சிறப்பான வெற்றியைப் பெற்றுத்தர முடியவில்லை. அது என் ஒருவரால் மட்டுமே நிகழாது. ஆனாலும், அயராமல் உழைத்தேன். அதுவே, ஆளுநர் பொறுப்பு கிடைக்கக் காரணமானது. மக்கள் பிரதிநிதி ஆக முடியவில்லையே என்ற வருத்தம் தற்போது சற்றே குறைந்திருக்கிறது."

“குடியுரிமை திருத்தச் சட்டம், ரஜினியின் பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சு, 5 மற்றும் 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு சர்ச்சை எனப் பல்வேறு அதிரடி நிகழ்வுகள் தமிழகத்தில் சமீபத்தில் நடத்தன. அரசியல் நிகழ்வுகளையெல்லாம் தொடர்ந்து கவனித்து வருகிறீர்களா?”

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

(சிரிக்கிறார்) "நான் தெலங்கானா மாநிலத்தில் பணியாற்றினாலும் தினமும் தமிழகம் குறித்து யோசிக்கத் தவறியதில்லை. தமிழகம் உட்பட இந்திய அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்துவருகிறேன். அதில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் மரணம் என்னை மிகவும் பாதித்தது. அந்த நேரத்தில் தமிழ்ப் பெண் மற்றும் மருத்துவர் என்ற முறையில் சம்பவ இடத்தில் என்னால் இயன்ற உதவியைச் செய்திருக்க வேண்டும் என நினைத்தேன். அதேநேரம் அரசியல் நிகழ்வுகளைக் கவனித்து வந்தாலும், மரபுக்கு உட்பட்டு அதுகுறித்து தற்போது நான் பேசக்கூடாது. ஆனால், அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்த என் கருத்துகளைக் குறிப்பெழுதி வருகிறேன். அவற்றைத் தொகுத்து, ஆளுநர் பொறுப்பு முடிந்ததும் புத்தகமாக வெளியிடுவேன். அப்போது கேளுங்கள், இதுகுறித்து விரிவாகப் பேசுகிறேன்."

"விமர்சனங்கள் பலவற்றையும் கடந்து பலரும் பாராட்டும் நிலைக்கு உயர்ந்திருப்பது குறித்து..."

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

``என் இலக்குகளையும் ஆசைகளையும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அதற்கு நானும் என் தந்தையும் பயணிக்கும் அரசியல் பாதை ஓர் உதாரணம். பெண்களின் நியாயமான ஆசைகள்கூட அவ்வளவு எளிதில் நிறைவேறாது. ஆனால், போராடி வெற்றி பெற்றால், அதுவே பல பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் நம்பிக்கையாகவும் அமையும். எனவே, பெண்கள் தங்கள் இலக்குகளை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது."

கடவுள் மறுப்பு, கம்யூனிஸம், சாதியம்... மூவர் பகிர்ந்த மூன்று பதில்கள்!

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இதுவரை பகிராத பெர்சனல் பக்கங்கள், அவள் விகடனில்... படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/3axDdnS

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு