Published:Updated:

“12 வருடங்களுக்குப் பிறகுதான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது!”

Thamizhachi Thangapandian
பிரீமியம் ஸ்டோரி
News
Thamizhachi Thangapandian

தினம் ஒரு சட்டத்திருத்தம்’ என்ற அஜண்டாவோடு செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க-வுக்கு நாடாளுமன்றத்தில் ‘டஃப் ஃபைட்’ கொடுத்துவருகிறார்கள் தி.மு.க எம்.பி-க்கள்!

அந்த வகையில் சமீபத்திய பரபர அரசியல் நிகழ்வுகள் குறித்த கேள்விகளோடு தென்சென்னைத் தொகுதியின் தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியனைச் சந்தித்தேன்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என்று அ.தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது என்றால், என்.ஐ.ஏ சட்டத்திருத்தத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க., நாடாளுமன்றத்தில் அதே என்.ஐ.ஏ மசோதாவை ஆதரித்து வாக்களித்ததும் இரட்டை வேடம்தானே?’’

‘‘தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை சட்டத்தை முதலில் கொண்டுவந்ததே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். அந்தச் சட்டத்தில் சில குறிப்பிட்ட அம்சங்களைத்தான் இப்போது புதிதாகச் சேர்த்திருக்கிறார்கள். அந்தவகையில், எந்த ஒரு தனிநபரையும் தீவிரவாதியாகச் சித்திரிப்பது மற்றும் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கின்ற வகையில் சட்டம் கையாளப்படுவது ஆகியவற்றை தி.மு.க உறுதியாகவே எதிர்த்துதான் வாக்களித்தி ருக்கிறது. எனவே, இதில் இரட்டை வேடம் என்ற பேச்சுக்கே இடமில்லை!’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘தமிழகத்தில், என்.ஐ.ஏ சட்டம் சிறுபான்மையின மக்களை ஒடுக்கத்தான் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், சட்டத்தை முழுமையாக எதிர்க்காமல் ஆதரவளித்தது சரிதானா?’’

‘‘சட்டத்தைப் பயன்படுத்துகிறவர்கள் இதுபோல் தவறாகப் பயன்படுத்திவிடக்கூடும் என்றுதான், அந்தத் திருத்த மசோதாவில் உள்ள குறிப்பிட்ட ஷரத்துகளை எதிர்த்திருக்கிறது தி.மு.க. ஆனாலும் அசுர பலத்தோடு பா.ஜ.க-வை மத்தியில் அமரவைத்துவிட்ட வடமாநில மக்களையும் தமிழ்நாட்டில் உள்ள செயல்படாத அ.தி.மு.க அரசையும்தான் இதற்கு காரணமாகச் சொல்ல வேண்டும். மற்றபடி தி.மு.க ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இவ்விஷயத்தில், என்னென்ன விஷயங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுமோ, நாடாளுமன்றத்தில் எதைப் பதியவைக்க வேண்டுமோ அதையெல்லாம் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறது.’’

Thamizhachi Thangapandian
Thamizhachi Thangapandian

‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க., வேலூர்த் தேர்தலில் இழுபறியான வெற்றியைத் தக்கவைத்திருப்பது, அக்கட்சி மக்கள் நம்பிக்கையை இழந்துவருவதாகத்தானே உணர்த்துகிறது?’’

‘‘அப்படியில்லை. உண்மையில், இந்தத் தேர்தலிலும் தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஆளுங்கட்சியின் அதிகார பலம், அரசு இயந்திரம், பண பலத்தையும் தாண்டி தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது என்பதே ஒரு சரித்திர சாதனைதான். எனவே, வாக்கு சதவிகிதம் பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.’’

‘‘அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி இவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதே, அக்கட்சியின் தற்போதைய தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதைத்தானே காட்டுகிறது?’’

‘‘தலைமை என்ற வார்த்தையே தி.மு.க-வின் தலைவருக்கு மட்டும்தான் பொருந்தும். ஏனெனில், நாங்கள் மட்டும்தான் தலைமையை முன்னிறுத்தி இந்தத் தேர்தலை எதிர்கொண்டோம். ஆனால், முழுக்க முழுக்கப் பணபலத்தை மட்டுமே நம்பித் தேர்தலை எதிர்கொண்டவர்கள் அவர்கள்.

இரட்டைத் தலைமை எனும் இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்பவர்கள் அவர்கள். எந்தத் தலைமையின் கீழ் செயல்படுவது என்ற குழப்பமே அவர்களுக்கு இன்னும் தீரவில்லையே.’’

‘‘பெண்ணுரிமை முற்போக்கு பேசுகிற தி.மு.க., தனது வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லையே?’’

‘‘தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும்போது மட்டும் தி.மு.க-வைப் பார்த்து இப்படியொரு கேள்வியை எழுப்புகிறார்கள். தேர்தலின்போது, கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளில் ஆரம்பித்து, பல்வேறுவகையான நெருக்கடிகள் கட்சியைச் சூழ்ந்திருக்கும். தேர்தல் அரசிய லுக்கு வந்துவிட்ட ஒரு பெரிய கட்சிக்கு எல்லாவற்றையும் பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயமும் இருக்கும்.

பஞ்சாயத்துத் தலைவர் பொறுப்பிலிருந்து பல்வேறு சமூகத் தளங்களிலும் பெண்களின் பங்களிப்புக்காக பெரியாரும் கலைஞரும் ஆற்றியிருக்கும் சேவைகளை, 50 ஆண்டுக்கால திராவிட இயக்க வரலாற்றைப் புரட்டிப்பார்த்தாலே விடை கிடைத்துவிடும். ஆனால், பெண்ணுரிமை காக்க இந்தத் தமிழ் மண்ணில் தி.மு.க நடத்திய போராட்டங்களையும் இயக்கத்தினரின் உழைப்பையும் வேண்டுமென்றே மறந்துவிட்டுக் கேள்வி கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது?’’

‘‘சாதி ஒழிப்பை அடிப்படைக்கொள்கையாகக் கொண்ட

தி.மு.க-வும்கூட, தேர்தலின்போது சாதி பார்த்துதானே வேட்பாளர்களை நிறுத்துகிறது?’’

‘‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனித்தொகுதியில் மட்டுமே வேட்பாளரின் சாதி என்னவென்று பார்க்கப் படுகிறது. ஏனைய தொகுதிகளில், மக்கள் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது, எந்தளவு திறம்படப் பணிபுரிவார் என்ற தனிப்பட்ட திறன்களை மட்டுமே கருத்தில்கொண்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்துவருகிறது தி.மு.க!’’

‘‘ஆணவப் படுகொலை போன்ற கொடூரச் சம்பவங்களின்போது, உடனடிக் கண்டனம் தெரிவிப்பதில்கூட தி.மு.க-வில் ஒரு தயக்கம் தெரிகிறதே..?’’

‘‘இதுவும் ஒரு பொய்யான குற்றச்சாட்டுதான். இளவரசன் விவகாரத்தில்கூட தி.மு.க உடனடியாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. கொள்கைரீதியாக, பெரியார், கலைஞர் வழிவந்த தி.மு.க., சாதியப் படுகொலைகளை வன்மையாகக் கண்டிப்பதில் எப்போதும் முதலிடத்தில் நிற்கிறது.’’

‘‘சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொள்கிற தி.மு.க., கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இஸ்லாமியருக்குக்கூட சீட் கொடுக்கவில்லையே?’’

‘‘ஏற்கெனவே நான் கூறிய பதில்தான். கூட்டணிக்கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. எப்போதும் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக தி.மு.க இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில்கூட மத்திய அரசுக்கு எதிராக உரக்கக் குரல் கொடுத்த கட்சி தி.மு.க-தானே?’’

‘‘ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், ம.தி.மு.க - காங்கிரஸ் இடையிலான சலசலப்புகள் தி.மு.க கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?’’

‘‘தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. ம.தி.மு.க-வின் கருத்தாக வைகோ பேசியிருப்பதும், அதற்கு எதிர்வினையாக காங்கிரஸ் செயலாற்றியிருப்பதும் தனிப்பட்ட கட்சிகளின் நிலைப்பாடு. அதற்கான பதில்களை அவர்கள்தான் கூற வேண்டும்.’’

‘‘வாரிசு அரசியல் பற்றிய கேள்விகளின் போது, ‘வாரிசு என்பதாலேயே புறக்கணிக்கப் பட வேண்டுமா, அவர்களும் கட்சிப் பணி ஆற்றியிருக்கிறார்கள்தானே’ என்பதுதான் தி.மு.க தரப்பின் பதிலாக இருக்கிறது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எப்போதுதான் பதவிக்கு வரமுடியும்?’’

‘‘ஒரு மருத்துவரின் பிள்ளை மருத்துவராகும்போதோ, அல்லது, ஒரு வழக்கறிஞரின் மகன் வழக்கறிஞராகும் போதோ இதுபோன்ற கேள்விகள் வருவதில்லை. ஆனால், அரசியல் வாதிகளை மட்டும் நோக்கி இப்படியான கேள்விகள் கேட்கப்படுகின்றன. தகுதியில்லாமலோ, வலுக்கட்டாயமாகவோ கட்சிப்பதவிகளில் வாரிசுகள் திணிக்கப்படுவார் களேயானால் தாராளமாக நீங்கள் கேள்வி கேட்கலாம்.’’

‘‘மருத்துவர், வழக்கறிஞர் வாரிசுகள் அதே தொழிலுக்குள் வருவதென்பது தனிப்பட்ட விவகாரம். ஆனால், லட்சோப லட்சம் தொண்டர்களைக் கொண்ட ஓர் அரசியல் இயக்கத்தில் வாரிசுக்கு முன்னுரிமை என்பது கேள்விக்கு உட்பட்டதுதானே?’’

‘‘இந்தக் கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்பதாகவே எடுத்துக்கொள்கிறேனே... என் தந்தை 1949-ல் தி.மு.க-வுக்குள் அடிமட்டத் தொண்டனாகத்தான் வந்துசேர்ந்தார். எந்தப் பின்புலமும் இல்லாது, கொள்கை ஈடுபாட்டோடு வந்துசேர்ந்த அந்த சாதாரணத் தொண்டனுக்கு எம்.எல்.சி., எம்.எல்.ஏ என அடுத்தடுத்த பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்ததும் இதே தி.மு.க-தான். ‘சாதாரணத் தொண்டனுக்கு இப்படியெல்லாம் பதவிகள் கொடுக்கலாமா?’ என்று அப்போது யாரும் கேள்வி எழுப்ப வில்லையே...? திராவிடப் பாரம்பர்யத்தில் வந்த தி.மு.க எப்போதும் குடும்பக் கட்சிதான்; கட்சிக் கூட்டங்களிலும் போராட்டங்களிலும் குடும்பம் குடும்பமாகத்தானே தொண்டர்கள் நாங்கள் கலந்துகொண்டுவருகிறோம்.

“12 வருடங்களுக்குப் பிறகுதான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது!”

சிறையில் கொடுமைகளை அனுபவித்த எண்ணற்ற தி.மு.க தொண்டர்களில், என் தந்தையும் ஒருவர். எந்த ஜெயிலில் அடைக்கப் பட்டிருந்தார் என்பதுகூட எங்களுக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விவரம் கேட்டு வாரிசுகள் நாங்கள்தானே அலைந்துதிரிந்தோம்.

என்னைப் பொறுத்தவரையில், பிறந்ததிலிருந்து கட்சிக்கொள்கைகளில் ஈடுபாட்டோடு இருந்துவந்தாலும், 2007-ம் ஆண்டில்தான் நான் பார்த்துவந்த பேராசிரியைப் பணியிலிருந்து விலகி, முழுநேரக் கட்சிப்பணிக்குள் வந்தேன். அந்தவகையில், 12 வருடங்களுக்குப் பிறகுதானே எனக்குக் கட்சியில் இப்படியொரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.’’

‘‘முழுநேரக் கட்சிப்பணியாற்றிவந்த மு.க.ஸ்டாலின் ‘இளைஞர் அணிச் செயலாளர்’ ஆனார். ஆனால், சினிமா நடிகரான உதயநிதி ஸ்டாலின்?’’

‘‘அவர் முழுநேரக் கட்சிப்பணி ஆற்றவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? பகலில் நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதாலேயே நட்சத்திரங்கள் இல்லை என்றாகிவிடுமா?

சினிமா நடிகர் என்பது அவருடைய வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே. ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு கேள்வி கேட்காதீர்கள். அவரும் கட்சிக் கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள் என்று தீவிர கட்சிப் பணியாற்றிக்கொண்டிருந்தவர்தான்.’’

‘‘தலைமை என்ற வார்த்தையே தி.மு.க-வின் தலைவருக்கு மட்டும்தான் பொருந்தும். ஏனெனில், நாங்கள் மட்டும்தான் தலைமையை முன்னிறுத்தி இந்தத் தேர்தலை எதிர்கொண்டோம்.

‘‘பகுத்தறிவு பேசுகிற நீங்கள், உங்கள் மணிவிழாவின்போது யாகம் வளர்த்து சடங்கு சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்திருக்கிறீர்களே?’’

‘‘ ‘சம்ஸ்கிருத மந்திரங்கள் ஓத நடைபெறும் திருமணச் சடங்குகள் நம் தமிழ்ப்பண்பாட்டுக்கு எதிரானது’ என்று நானே பல மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால், நான் சிறுதெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடைய பெண் என்பது எல்லோருக்கும் தெரியும். வீட்டிலேயேகூட என் அம்மா, துளசி மாடம் அமைத்திருக்கிறார்.

குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்து நடத்துகிற ஓர் நிகழ்ச்சியில், அவர்களது விருப்பப்படி சில சடங்குகளைச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. யாருடைய நம்பிக்கைகளிலும் நாங்கள் குறுக்கீடு செய்வது கிடையாது. அந்தவகையில் குடும்பத்துப் பெரியவர்களது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு நிகழ்த்தப்பட்ட இந்த ஒரு விஷயத்துக்காக நான் என் கொள்கைகளிலிருந்து நீர்த்துப்போய்விட்டதாக யாரும் சொல்லிவிடவும் முடியாது.”