Published:Updated:

ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைப் பிடித்திருக்கலாம்!

திருநாவுக்கரசர் திடீர் ஆரூடம்...

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்குவதற்கான சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி யிருந்தார் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசர். அவரின் அண்ணாநகர் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.

‘‘மக்களுக்கு கொரோனாகால நிவாரணங்கள் வழங்கும் பணிகளைத் தவிர, இந்த ஊரடங்கு காலத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க வேறு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’’

‘‘என்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுத ஆரம்பித்துள்ளேன். முதன்முதலாக 1977-ம் ஆண்டு எம்.எல்.ஏ-வாகி, நீண்டகாலம் பொதுவாழ்க்கையில் இருந்துவருகிறேன். அந்த அனுபவங்களை எழுத வேண்டும் என்று முடிவு செய்து எழுதத் தொடங்கி யிருக்கிறேன். தற்போது என் பள்ளி வாழ்க்கை அனுபவங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன்.’’

‘‘நீங்கள் பா.ஜ.க-வில் இருந்த அனுபவங்களும் சுயசரிதையில் இடம்பெறுமா?’’

‘‘நிச்சயமாக!’’

‘‘ஜெயலலிதாவுடன் நெருக்கமான உங்கள் அரசியல் பயணம் அப்படியே தொடர்ந்திருந்தால் இந்நேரம் நீங்கள் அ.தி.மு.க தலைமைக்கு வந்திருக்கலாம், முதல்வராகக்கூட ஆகியிருக்கலாம். எங்கே சிக்கல் வந்தது?’’

‘‘எம்.ஜி.ஆர் காலத்திலேயே ஜெயலலிதாவை ஆதரித்தேன். பலர் அவரைத் துரத்தத் துடித்தார்கள். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு எம்.ஜி.ஆர் சென்றிருந்தபோது, தேர்தல் பிரசாரத்துக்கு ஜெயலலிதாவைக் களமிறக்கியது நான்தான். அவர் என்னிடம் ஆலோசனைகள் கேட்பார். அடிக்கடி போயஸ் கார்டன் இல்லம் சென்று வருவேன். அவருக்குப் பாதுகாப்புக்காக ஆட்களை நியமித்திருந்தேன். சசிகலாவும் நடராசனும் உள்ளே வந்த பிறகுதான் சிக்கல் ஆரம்பித்தது.’’

‘‘உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடைவெளி ஏற்பட்டது சசிகலாவால்தானா?’’

‘‘ஆமாம்!’’

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

‘‘சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி வந்தால், அ.தி.மு.க-விலிருந்து பலர் அவர் பக்கம் போய்விடுவார்கள், அ.தி.மு.க-வின் தலைமைக்கு சசிகலா வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருக்கிறதே?’’

‘‘சசிகலா 70 வயதை நெருங்கிக் கொண்டி ருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். இனிமேல் அவர் வெளியே வந்து அரசியலுக்கு வருவார் என்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஜெயலலிதா இருந்தபோதே ‘சசிகலா ராஜ்யசபா எம்.பி ஆகப்போகிறார், எம்.எல்.ஏ ஆகி மந்திரி ஆகப்போகிறார்’ என்றெல்லாம் அவ்வப்போது பேச்சு அடிபடும். ஆனால், அவரை ஒரு கவுன்சிலராகக்கூட ஜெயலலிதா ஆக்கவில்லை. `ஜெயலலிதாவுக்குத் துணைக்கு இருந்தார்’ என்ற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு கட்சித் தலைமைக்கு வருவதோ, ஆட்சிக்கு வருவதோ ஒருபோதும் நடக்காது. அவர் இனிமேல் உடல்நிலையைப் பார்த்துக்கொண்டு, ஓய்வெடுத்துக்கொண்டு மீதியிருக்கும் காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கலாம்.’’

‘‘டி.டி.வி தினகரனை முன்னிறுத்தி அவர் செயல்படலாமே?’’

‘‘தினரனுக்கு என்னவெல்லாம் பில்டப் கொடுத் தார்கள். ‘சிரிச்சுக்கிட்டே பேசுறாருங்க...’, `எந்தக் கேள்விக்கும் எரிச்சல்படாம பதில் சொல்றாருங்க...’, `எடப்பாடியைவிடக் கவர்ச்சியா இருக்காருங்க, கிளாமரா இருக்காருங்க....’ என்றெல்லாம் டி.வி-யைப் பார்த்துவிட்டுப் பலரும் சொன்னார்கள். கடைசியில் என்ன ஆனது? நாடாளுமன்றத் தேர்தலில் ஆயிரம் கோடி ரூபாயை விட்டு விட்டார்கள். அதை 22 சட்டமன்றத் தொகுதியில் செலவு செய்திருந்தாலாவது சில எம்.எல்.ஏ-க்கள் கிடைத்திருப்பார்கள். அவரை நம்பிச்சென்ற எம்.எல்.ஏ-க்களும் இப்போது ரோட்டுக்குப் போய் விட்டார்கள்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘எம்.ஜி.ஆர் இருந்தபோது நீங்கள்தான் அ.தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளர். அப்போது உங்களால் பொறுப்புகளுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் இப்போது அமைச்சரவையில் இருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அப்போதுதான் வந்தாரா?’’

‘‘அவர் ஒன்றியச் செயலாளராக இருந்தார். 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டார். நான் தேர்வுக்குழுவில் இருந்தேன். அவருக்கு வேண்டிய சிலர், ‘பழனிசாமி நல்ல பையன். அவருக்கு சீட் கிடைக்க உதவுங்கள்’ என்று என்னிடம் சிபாரிசு செய்தார்கள். அவரும் சீட் கிடைத்து எம்.எல்.ஏ ஆனார். அப்போது நாங்கள் 26 பேர் வெற்றிபெற்றோம். அவர்களில் அவரும் ஒருவர். மிகவும் அமைதியாக இருப்பார்.’’

‘‘உங்களுக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக வந்திருக்கும் கே.எஸ்.அழகிரிக்கு, உங்களுக்கு ஆதரவான மாவட்டத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளதே?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. எனக்கு வேண்டிய மாவட்டத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. எனக்கு மட்டுமல்ல... தங்கபாலுவுக்கு வேண்டியவர்கள், இளங்கோவனுக்கு வேண்டியவர்கள், அழகிரிக்கு வேண்டியவர்கள், சிதம்பரத்துக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள். நான் தலைவராக இருந்தபோதுதான் அவர்களை யெல்லாம் நியமித்தேன். அழகிரியைக் கேட்டுத்தான் அவரின் மாவட்டத்தில் தலைவர்களை நியமித்தேன். ‘யார் மாநிலத் தலைவர் என்றாலும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று எனக்கு வேண்டிய மாவட்டத் தலைவர்களிடம் சொல்லியிருக்கிறேன். அவர்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள்.’’

‘‘நீங்கள் மாநிலத் தலைவராக இருந்தபோது உங்களுக்கு எதிராகக் கட்சிக்குள் பலர் செயல்பட்டார்கள். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளிப்படையாகவே உங்களுக்கு எதிராகப் பேசினாரே?’’

‘‘உண்மைதான். நான் தலைவராக இருந்தபோது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தினமும் என்னை விமர்சிப்பார். ஒரு கட்டத்தில், ‘திருநாவுக்கரசு என்றால் யாரென்றே எனக்குத் தெரியாது’ என்றுகூடச் சொன்னார். அவர் கொஞ்சம் எமோஷனலான டைப். ஆனால், எனக்கு நீண்டகால நெருங்கிய நண்பர். இப்போதும்கூட தினமும் பேசுவோம்.’’

“முன்பெல்லாம், ‘எடப்பாடி ஆட்சி இன்னும் பத்து நாள்களில் போய்விடும்... பதினைந்து நாள்களில் போய்விடும்’ என்று சொல்லிக்கொண்டிருந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் இப்போதெல்லாம் அப்படிப் பேசுவதில்லையே?’’

‘‘ஸ்டாலின் நினைத்திருந்தால் அப்போதே எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத் திருக்க முடியும். ஆனால், அதை அவர் விரும்பவில்லை. மேலும், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சிமாற்றம் என்பது வட மாநிலங்களைப்போல தமிழ்நாட்டில் நடப்பதில்லை. காரணம், உடைக்க விரும்பும் கட்சியும் உடைப்பதில்லை. வெளியே வர வேண்டியவர் களுக்கும் பல்வேறு தயக்கங்களும் கேள்விகளும் அச்சமும் இருக்கும். வர வேண்டியது மாதாமாதம் வந்துகொண்டிருக்கும்போது, அதைவிட்டுவிட்டு ஏன் எதிர்க்கட்சியில் போய் சேர வேண்டும் என ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் நினைப்பார்கள். மேலும், மீண்டும் தேர்தலை சந்திக்கும்போது கட்சி மாறியதற்கான காரணங்களை மக்களிடம் சொல்ல வேண்டிய சிக்கலும் அவர்களுக்கு இருக்கிறது. ஏழெட்டு மாதங்களில் தேர்தல் வரப்போகிறது என்ற சூழலில், அதை இப்போது ஸ்டாலின் பேசுவதில்லை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு