Published:Updated:

`80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு; முறைகேடுகள் நடக்க வாய்ப்பு!’ - முத்தரசன்

முத்தரசன்
முத்தரசன் ( ம.அரவிந்த் )

``வரும் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு முறையை நடைமுறைப்படுதினால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்த முறையை நிராகரிக்க வேண்டும்’’ என முத்தரசன் தெரிவித்தார்.

``80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு முறை அளித்தால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பிருக்கிறது. எனவே, அதை நிராகரிக்க வேண்டும்.அ.தி.மு.க-வினர் பணத்தின் மூலமாக வெற்றி பெற்றுவிடலாம் என நம்பிக்கையோடு இருக்கிறார்கள்’’ எனத் தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் பேசிய முத்தரசன்
தஞ்சாவூரில் பேசிய முத்தரசன்

தஞ்சாவூரில் சி.பி.ஐ கட்சியின் மாவட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கட்சியின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்ட அறிக்கைகள் குறித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், `` `வேளாண் சட்டங்களால் பாதிப்பு இல்லை’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார். இனியும் அது போன்ற கருத்தை அவர் கூறக் கூடாது. தன் நிலையை அவர் மாற்றி்க்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஒரே நாளில் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 கோரிக்கைகளை தேர்தல் பார்வையாளர்கள் குழுவினரிடம் வழங்கியிருக்கிறோம். தமிழகத்தில் ஜனநாயகபூர்வமாக, நியாயமாக, பண பலமின்றி தேர்தல் நடத்த வேண்டும். இதற்குத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

`ராகுலுக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்தீர்களா?!' - மத்திய அரசை விமர்சித்த முத்தரசன்

`தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுத்து நிறுத்துவோம். அதை அனுமதிக்க மாட்டோம்’ எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இது வழக்கமாகச் சொல்வதுதான். தஞ்சாவூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளின் தேர்தல் செலவுக்காக மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பெரும் தொகை கொடுத்துவைக்கப்பட்டிருந்தது.

அந்தப் பணத்தைக் கைப்பற்றுவதற்காக, அவர் உயிரிழந்து இரண்டு நாள்கள் கழித்தே இறப்பு அறிவிக்கப்பட்டதாகவும், இன்னும் முழுமையாகப் பணம் கைப்பற்றப்படவில்லை எனவும் செய்திகள் வெளியாகின. அ.தி.மு.க பணத்தை நம்பியே இருக்கிறது.

சி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
சி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்

மக்களிடம் ஆதரவு, செல்வாக்கு இருப்பதாகக் கருதவில்லை. எனவே, பணத்தின் மூலமாக வெற்றி பெற்றுவிடலாம் என நம்பிக்கையோடு இருக்கிறார்கள். தமிழக மக்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். கொராோனாவைக் காரணம்காட்டி 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு முறையை நடைமுறைப்படுத்தினால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த முறையை நிராகரிக்க வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு