Published:Updated:

திகார் சிறை; தனியறை! - ப.சிதம்பரத்தைப் பதறவைத்த ரோஸ் அவென்யூ நீதிமன்றம்

ராம் பிரசாத்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடிவடைந்தநிலையில் நீதிமன்ற காவலில் வைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

P Chidambaram
P Chidambaram ( All India Radio )

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

Chidambaram Arrest
Chidambaram Arrest

`சிதம்பரத்திடமிருந்து எந்த உண்மையையும் எங்களால் பெற முடியவில்லை. போதிய ஒத்துழைப்பு எங்களுக்குத் தரவில்லை’ எனக் கூறி சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் காவலை நீட்டிப்பு செய்து வந்தனர். சிபிஐ காவலுக்கு எதிரான மனு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், சிதம்பரத்துக்கு பாதுகாப்பு வேண்டும் என்றார். மேலும், அவரது வயதைக் காரணம் காட்டி, `திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் . வீட்டுக்காவலில் வையுங்கள்; நிபந்தனைகள் விதித்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்' என்றார். சிபிஐ தரப்பு இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சிதம்பரத்தை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறியதுடன், திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு இடைக்காலத்தடை விதித்தது நீதிமன்றம். சிபிஐ காவலை 3 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தீவிரம் காட்டியபோது கைதை தவிர்ப்பதற்காக டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் சிதம்பரத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை இரவில் கைது செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வந்தது.

p.chidambaram, karthi
p.chidambaram, karthi

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. வழக்கு சரியான பாதையில் செல்கிறது. முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமையில்லை. விசாரணை அமைப்புகளுக்கு சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பு ஜாமீன் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். இதற்கிடையில் சி.பி.ஐ காவல் மற்றும் கைதுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ப.சிதம்பரம் திரும்பப் பெற்றார். இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.

`சின்னம்மா வந்தால் நாங்களும் வந்துவிடுவோம்!' - ஜெய் ஆனந்த்துக்கு உறுதிகொடுத்த அ.தி.மு.க மா.செ

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவல் முடிந்த நிலையில் 6வது முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜரானார். இந்த வழக்கில் சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ``ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரிக்காதவரை போலீஸ் காவல் அல்லது நீதிமன்ற காவல் மட்டுமே ஒரே வழி. இந்த வழக்கில் பொருளாதாரக் குற்றங்கள் நடைபெற்றுள்ளன. வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைத் திரட்ட சிபிஐ அதிகாரிகள் இங்கிலாந்து, பெர்முடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர். சிதம்பரம் சாட்சிகளைக் கலைக்கவும் ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது” என வாதிட்டார்.

Bail application
Bail application

``அமலாக்கத்துறையின் காவலுக்குச் செல்லத் தயார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் எனக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் எந்த ஆதாரத்தை கலைக்கப்போகிறேன்?'' எனத் தனது வழக்கறிஞர் மூலம் ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவரது வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில், ``அமலாக்கத்துறை சிதம்பரத்தை வேண்டுமென்றால் கைது செய்துகொள்ளட்டும். எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நீதிமன்ற காவலுக்கான காரணங்களை சிபிஐ முன் வைக்க வேண்டும். சிதம்பரத்திடம் விசாரணை தொடர்கிறது. அவர் சாட்சிகளை கலைக்கவில்லை. நீதிமன்ற காவலுக்கு அனுப்பக் கூடாது. சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை'' என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. செப்டம்பர் 19-ம் தேதி வரை திகார் சிறையில் தனி அறையில் சிதம்பரத்தை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அமலாக்கத்துறையிடம் சரணடைய ப.சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. `திகார் சிறைக்கு மட்டும் அனுப்பிவிடாதீர்கள்' என்ற ப.சிதம்பரம் தரப்பு வாதம் ஏற்கப்படவில்லை.