Election bannerElection banner
Published:Updated:

ஐபேக்கில் இருந்து விலகுகிறேன்; இனி அரசியல் ஆலோசகராக பணியாற்றப் போவதில்லை - பிரசாந்த் கிஷோர் முடிவு!

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

பிரபல அரசியல் உத்தி வகுப்பாளார் பிரசாந்த் கிஷோர், தான் இனிமேல் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகராக பணியாற்றப் போவதில்லை என்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் நிறுவனமான ஐபேக் நிறுவனத்தின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க-வுக்கும், மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டார்.

இந்தத் தேர்தலில் தமிழகத்தில், தி.மு.க மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சுமார் 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என்று அவர் சொல்லி வந்தார். அதுவும் தி.மு.க தனித்துப் போட்டியிட்டாலே இந்த அளவுக்கான இடங்களைப் பெற்று விட முடியும் என்றும், முடிந்தால் கூட்டணி இல்லாமல் தனித்தே கூட போட்டியிடலாம் அல்லது 200 க்கும் அதிகமான இடங்களில் தி.மு.க போட்டியிட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியிருந்தார். அனால், தமிழக தேர்தல் களத்தில் அ.தி.மு.க 80 தொகுதிகளுக்கும் மேலாக முன்னிலை வகித்து வருகிறது. பிரசாந்த் கிஷோர் சொன்ன 200 இடங்களில் வெற்றிபெறும் என்ற கணிப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

ஐ-பேக் -  ஸ்டாலின்
ஐ-பேக் - ஸ்டாலின்

இந்த நிலையில், தான் இனி அரசியல் ஆலோசகராக பணியாற்றப் போவதில்லை எனப் பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், `` ஐ-பேக்கில் இருந்து விலக விரும்புகிறேன். வாழ்க்கையில் இனி நான் வேறு எதையாவது செய்ய நினைக்கிறேன். இனிமேல் அரசியல் ஆலோசகராக பணிபுரிய மாட்டேன். குடும்பத்துடன் நேரம் செலவிடலாம் என்றிருக்கிறேன். தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வின் கிளை அமைப்பாக மாறிவிட்டது. இதற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில், " ஐபேக் நிறுவனத்தை இனிமேல் எனது கம்பெனி ஊழியர்கள் கவனித்துக் கொள்வார்கள். மேற்கு வங்க தேர்தலில் மக்கள் மம்தாவுக்காகத் தான் வாக்களித்துள்ளனர். இந்தத் தேர்தலில் மம்தாவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுதான் அவரது பலமே.

தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்தவில்லை. பா.ஜ.க-வுக்கு இந்தத் தேர்தலில் எத்தனை இடங்கள் கிடைத்தாலும், அதற்கு இதுதான் காரணமாக இருக்க முடியும்.

தமிழகத்தில் தவறிய ஐபேக் கணிப்பு... மேற்கு வங்கத்தில் உண்மையானது!

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வின் தேர்தல் பிரசாரம் மதத்தின் பெயராலும், மதச் சின்னத்தின் அடிப்படையிலுமே இருந்தது. தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பா.ஜ.க-வுக்கு ஆதரவாக செயல்பட்டது. பா.ஜ.க-வுக்கு எந்தெந்த வழிகளிலெல்லாம் உதவ முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் தேர்தல் ஆணையம் உதவியது" எனத் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு