Published:Updated:

‘செந்தில் பாலாஜிக்கு செக்!’

செந்தில் பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
செந்தில் பாலாஜி

கொசுவலை கம்பெனியில் ஐ.டி ரெய்டு

‘செந்தில் பாலாஜிக்கு செக்!’

கொசுவலை கம்பெனியில் ஐ.டி ரெய்டு

Published:Updated:
செந்தில் பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
செந்தில் பாலாஜி

கரூரில் கொசுவலை கம்பெனியில் நடைபெற்ற ஐ.டி ரெய்டு, தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது. மொத்தம் 32 கோடி ரூபாய் ரொக்கம், 435 கோடி ரூபாய் சொத்துக்கான ஆவணங்கள், 10 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ‘செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கத்தான் இந்த ரெய்டு’ என்று கசியும் தகவலால் விவகாரம் இன்னும் பரபரப்பாகியிருக்கிறது.

கரூர், ராம்நகரைச் சேர்ந்தவர் சிவசாமி. வெண்ணைமலைப் பகுதியில் ‘ஷோபிகா இம்பெக்ஸ்’ என்ற கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்திவருகிறார். வருடத்துக்கு 600 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் இந்த கம்பெனிக்கு, கரூர் - சேலம் பைபாஸில் உள்ள சிட்கோ, சின்னதாராபுரம் சாலை, மதுரை, கோவை என தமிழகத்திலும், பல்வேறு மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன. வெளிநாடுகளுக்கு கொசுவலைகளை ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனம், 2014-2015 மற்றும் 2015-2016 காலகட்டங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவில் ஏற்றுமதியில் முதல் இடம் பிடித்தது. கடந்த 2017-ம் ஆண்டில் மத்திய அரசின் ‘எக்ஸ்போர்ட் எக்ஸலென்ஸ்’ விருதைப் பெற்றது.

செந்தில் பாலாஜி, சிவசாமி
செந்தில் பாலாஜி, சிவசாமி

காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் தொழிலிலும் சிவசாமி கால் பதித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொள்ளும் அளவுக்கு இந்தியாவின் டாப் தொழிலதிபர்களில் ஒருவர் சிவசாமி. இவருக்குச் சொந்தமான இடங்களில்தான் இப்போது ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. வரி ஏய்ப்புப் புகாரின்பேரில் நவம்பர் 15-ம் தேதி கரூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள், ‘ஷோபிகா இம்பெக்ஸ்’ கம்பெனி தொடர்பான அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இரவு பகலாக நடந்த சோதனையில், கரூர் ராம்நகர் பகுதியில் உள்ள சிவசாமியின் வீட்டு அலமாரியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். மொத்தம் 32 கோடி ரூபாய். அத்தனையும் கணக்கில் காட்டாத பணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நவம்பர் 18-ம் தேதி மதியம் வரை சோதனை தொடர்ந்தது. முடிவில், கணக்கில் காட்டாத 32 கோடி ரூபாய் ரொக்கத்துடன், கணக்கில் வராத 435 கோடி ரூபாய் சொத்துகளுக்கான ஆவணங்களும் 10 கிலோ தங்கமும் கைப்பற்றப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், விசாரணைக்காக திருச்சி மண்டல வருமானவரித் துறை அலுவலகத்துக்கு வருமாறு சிவசாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஐ.டி ரெய்டு
ஐ.டி ரெய்டு

சிவசாமி குறித்து கரூர் தொழிலதிபர்கள் சிலரிடம் விசாரித்தோம். ‘‘சாதாரண அரசு ஊழியரின் மகன் சிவசாமி. 1989-ம் ஆண்டு டெக்ஸ்டைல் பிரிவில் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு, அவரின் தந்தை கொடுத்த ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் 1990-ம் ஆண்டு கொசுவலை தயாரிப்புத் தொழிலைத் தொடங்கினார். சுமார் 15 வருடங்கள் உள்நாட்டில் மட்டுமே வர்த்தகம் செய்தார். 2005-ல் ஆண்டுக்கு 70 கோடி ரூபாய் அளவுக்கு அவரது வர்த்தகம் பெருகியது. அதன் பிறகு ஆல்ஃபா சைபர் மெத்திலின் என்கிற கெமிக்கல் கலந்த கொசுவலையைத் தயாரிக்க உலக சுகாதார நிறுவனத்திடம் அனுமதி பெற்றார். இந்த வகை கொசுவலைகள் வெளிநாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதன் பிறகு, இவரின் வளர்ச்சி ஜெட் வேகமெடுத்தது’’ என்று விவரித்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘இந்த அதிரடி ரெய்டே, செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கத்தான்” என்று வேறு சிலர் கூறவே, அவர்களிடம் விசாரித்தோம். ‘‘கரூரில் கட்சி வளர்ப்பதில் செந்தில் பாலாஜிதான் ஸ்பீடாக இருக்கிறார். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும், செந்தில் பாலாஜியே ஜெயித்தார். அதனால், செந்தில் பாலாஜியை முடக்க ஆளுங்கட்சி நினைக்கிறது. ஓராண்டுக்கு முன்பு, செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் கம்பெனிகளில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினர். அதில் சொல்லிக்கொள்ளும் படியான ஆதாரங்கள் அவர்களுக்குச் சிக்கவில்லை. பத்து நாள்களுக்கு முன்பு செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி நடத்திவரும் கொசுவலை கம்பெனியில், சுங்கம் மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதன் பிறகுதான் சிவசாமிக்குச் சொந்தமான கொசுவலை கம்பெனியில் ஐ.டி ரெய்டு நடந்துள்ளது. சிவசாமி நேரடியாக எந்தக் கட்சியிலும் இல்லை. ஆனால், செந்தில் பாலாஜிக்கு வேண்டியவர் என்று சொல்கிறார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலின்போது, கரூர் மாவட்ட தி.மு.க தேர்தல் செலவுக்கான கஜானாவாக இருக்கப்போவது சிவசாமிதான் என்று தகவல் கசிந்தது. இதை அறிந்த கரூர் மாவட்ட ஆளுங்கட்சிப் புள்ளி, சிவசாமியின் ‘ஷோபிகா இம்பெக்ஸ்’ கம்பெனியில் ஜாப் வொர்க்கைப் பெற்றுத்தான் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி கொசுவலை கம்பெனி நடத்துகிறார் என்கிற லிங்க்கைப் பிடித்து வருமானவரித் துறையை ஏவிவிட்டிருக்கிறார். ஆனால், ரெய்டில் இவ்வளவு சிக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ரெய்டை ஏவிவிட்ட அ.தி.மு.க புள்ளி, செந்தில் பாலாஜியின் கஜானாவை காலிசெய்துவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார். இதைவைத்து, செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது!’’ என்றார்கள்.

செந்தில் பாலாஜியிடம் கேட்டதற்கு, ‘‘சிவசாமிக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை. ஆளுங்கட்சியினர் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள்” என்றார் சுருக்கமாக.

கொசுவலை கம்பெனி ரெய்டு... யாருக்காக விரித்த வலை?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism