Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: விஜயகாந்த் பாணி... நிர்வாகிகளுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த நடிகர் விஜய்?!

மக்கள் இயக்கக் கொடியையும், நடிகர் விஜய்யின் படத்தையும் பயன்படுத்தித் தேர்தலை சந்திக்க விஜய் கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் குஷியுடன் கூறிவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் தனித்துக் களம் காணவிருப்பதாகவும், அதன் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், கொடி மற்றும் தன் படத்தைப் பயன்படுத்த விஜய் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் குஷியாகத் தேர்தலில் களம் காண தயாராகிவருவது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகள்
தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகள்

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மும்மராகத் தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. ஆளுங்கட்சியான திமுக-வும், எதிர்க்கட்சியான அதிமுக-வும் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என கடும் போட்டியுடன் களம்காணத் தயாராகிவருகின்றன.

இந்தநிலையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமும், இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு நேரடியாகக் களம்காணவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் இயக்கக் கொடியையும், விஜய்யின் படத்தையும் பயன்படுத்தி, தேர்தலைச் சந்திக்க விஜய் கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் குஷியுடன் கூறிவருகின்றனர். விஜய் வெளிப்படையாக இதற்கு ஒப்புதல் அளித்ததுபோல் இல்லாமல், தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் போட்டியிடுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிப் போட்டியிட வேண்டும் எனவும் நடிகர் விஜய் தரப்பில் கூறப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் அகில இந்திய பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதில் கலந்துகொண்டனர். அதில் நடைபெற்ற விவதாங்களைப் பார்க்கும்போது ஒன்பது மாவட்டத் தேர்தலை நடிகர் விஜய் தரப்பு முன்கூட்டியே எதிர்பார்த்துக் காத்திருந்ததுபோலவே தெரிகிறது என விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``தளபதி விஜய் தன்னுடைய ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார். பின்னர் அதற்கான தனிக்கொடி, கொள்கைகளை உருவாக்கினார். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிக்கு உரிய அனைத்துக் கட்டமைப்புகளுடன் பல வருடங்களாகவே களத்தில் செயல்பட்டுவருகிறது. மக்கள் பணி செய்ய வேண்டும் என்றே விஜய், நிர்வாகிகளான எங்களிடம் தெரிவித்திருந்தார்.

விஜய்
விஜய்

அதற்கு முன்னுரிமை கொடுத்து திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு இணையாகத் தங்களது சொந்தப் பணத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்துவருகின்றனர். இதனால் தமிழகத்திலுள்ள முக்கியக் கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் எங்கள்மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவிவந்தது. கடந்த சில தேர்தல்களாகவே மக்கள் இயக்கத்தின் ஆதரவைப் பெற முக்கியக் கட்சிகள் போட்டி போட்டதையும் எங்களுடைய வளர்ச்சியாகவே பார்க்கிறோம்.

இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்கம் எப்போது அரசியல் கட்சியாக மாறும் என்கிற எதிர்பார்ப்பும் பலதரப்பில் நிலவிவந்தது. மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிடுவார்களா, விஜய் தன்னுடைய ஆதரவை எந்தக் கட்சிக்குத் தரப்போகிறார் என்பது போன்ற கேள்விகளும் தேர்தல் நேரத்தில் எழுந்து அடங்கும். ஆனால் விஜய் எதையும் வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதும் வாடிக்கையாக இருந்தது. அதேநேரத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தனது பெயர், படத்தைப் பயன்படுத்தாமல் தங்களுக்குப் பிடித்த கட்சியில் தேர்தல் வேலை செய்வதற்கான சுதந்திரத்தையும் கொடுத்திருந்தார்.

மதிய உணவளிக்கும் புஸ்ஸி ஆனந்த்
மதிய உணவளிக்கும் புஸ்ஸி ஆனந்த்

அதனால் தேர்தல் பணிகள் செய்வது என்பது விஜய்யின் படைக்கு புதிதல்ல. அத்துடன் அவர் படிப்படியாக கட்டமைப்பை உருவாக்கி பெரிய அரசியல் கட்சிக்கு நிகராகத் தன்னுடைய இயக்கத்தை வளர்த்திருக்கிறார் என்றாலும் மிகையாகாது. இந்தச் சூழ்நிலையில் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தளபதி விஜய், நாங்கள் தேர்தலில் நேரடியாகத் தனித்து போட்டியிட அனுமதி கொடுத்திருக்கிறார்.

மக்கள் இயக்கக் கொடி, விஜய் படத்தைப் பயன்படுத்தவும் ஒப்புதல் வழங்கிவிட்டாராம். இனி நாம தேர்தலில் போடியிட்டு பெரும்பான்மையான வெற்றியைப் பெற்று, தலைவர் விஜய் வசம் ஒப்படைத்து அவரை குஷி படுத்த வேண்டும். யாரும் காசு கொடுத்து ஓட்டு வாங்கக் கூடாது என்று விஜய் சொல்லியிருக்கிறார். மக்கள் இயக்கம் சார்பாக நாம செஞ்ச நலத்திட்ட உதவிகள், என்ன செய்யப்போறோம் என்பதை எடுத்துக் கூறி வாக்குகளைப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவித்த புஸ்ஸி ஆனந்த், உற்சாகமாகக் காணப்பட்டதுடன் அனைவருக்கும் தன் கையாலேயே மதிய உணவு வழங்கி விருந்தளித்தாராம்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இன்னொறையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை என்கிறார்கள். அதாவது, `விஜய் ஒப்புதல் தெரிவித்து தேர்தலில் போட்டியிடுகிறோம் என்பதை எந்த இடத்திலும் வெளிப்படையாகப் பேசாதீங்க’ எனவும் கூறினார். கூட்டத்தில் ஒன்பது மாவட்டங்களில் முக்கியப் பதவிக்கு போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் ஒரு மாவட்டத்துக்கு ஐந்து வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் எனத் தேர்தல் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

வரும் திங்கள்கிழமை முதல் தேர்தல் பணியையும் தொடங்கவிருக்கிறோம். இவை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றுதான். சொல்லப்போனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியை விஜய் பின்பற்றிவருகிறார். அவர் அரசியல் கட்சி தெடங்குவதற்கு முன்பு ரசிகர் மன்றங்களாகச் செயல்பட்ட போது மன்ற நிர்வாகிகளை உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கவைத்து தன்னுடைய பலத்தைத் தெரிந்துகொண்டார். அப்போது விஜயகாந்த் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு பதவிகளில் கணிசமான இடங்களைப் பிடித்தனர்.

விஜய்
விஜய்

அதேபோல் விஜய் மக்கள் இயக்கத்தினரும் இதற்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு விஜய்யின் பெயரை வெளிப்படையாக எந்த இடத்திலும் தெரிவிக்காமலேயே கணிசமான இடங்களைப் பிடித்தனர். உள்ளாட்சி அமைப்புகளில் தன் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இருந்தால் இயக்கத்தின் அடித்தளம் ஸ்ட்ராங்காக இருக்கும் என விஜய் கருதுகிறார். அதனால் இந்த ஒன்பது மாவட்டத் தேர்தலை ஒரு டிரெய்லராகக் கருதி வெளிப்படையாக, நேரடியாகக் களம் காணுவதற்கு மறைமுகமாக அனுமதி கொடுத்திருக்கிறார்.

மதுரை: நடிகர் விஜய் பிறந்தநாள்! - ஏழை மாணவர்களின் ஒரு வருடக் கல்விக்கு உதவிய மக்கள் இயக்கத்தினர்

ஆனால் விஜய் வாய்ஸ் கொடுக்க மாட்டார், பிரசாரத்துக்கும் வர மாட்டார். அவர் இடத்திலிருந்து புஸ்ஸி ஆனந்த் அதைச் செய்யவிருக்கிறார். இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். தளபதி விஜய் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார். அது போதும் எங்களுக்கு. அவரது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக் களமிறங்கிவிட்டோம். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனின் தலையீடு இல்லாமல் நாங்கள் செயல்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நிச்சயம் நம்பிகையான தொடக்கத்தை ஆரம்பிப்போம்’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு