Published:Updated:

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றமா? பரபரப்பில் சீனியர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம் ( விகடன் )

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது குறித்து கட்சியின் சீனியர் நிர்வாகிகள் அவரிடம் பேசியிருக்கிறார்கள். அவரும் உத்தரவாதம் அளித்திருப்பதால், அ.தி.மு.க-வில் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் அமைப்புரீதியான மாற்றத்துக்குத் தயாராகிறது அ.தி.மு.க. செயல்பாடற்ற மாவட்டச் செயலாளர்களை மாற்றிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க அ.தி.மு.க தலைமை தீவிர ஆலோசனை நடத்திவருகிறதாம். சமீபத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது குறித்து கட்சியின் சீனியர் நிர்வாகிகள் அவரிடம் பேசியிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் என அவரும் உத்தரவாதம் அளித்திருப்பதால் அ.தி.மு.க-வில் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்

இது குறித்து அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். ``செயல்பாடற்ற, கட்சிக்கு செலவு செய்ய முடியாத மாவட்டச் செயலாளர்களை மாற்றுவதற்கு கடந்த ஒரு வருடமாகவே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சசிகலா, தினகரன் மீதான அச்சத்தால் அப்படியொரு முடிவை அ.தி.மு.க தலைமை செய்யவில்லை. 'ஒருவேளை மாவட்டச் செயலாளர்களை நீக்கினால் அவர்கள் சசிகலா, டி.டி.வி.தினகரன் பக்கம் சாய்ந்துவிடுவார்களோ?' என்கிற அச்சமே, அமைப்புரீதியாக அ.தி.மு.க-வை மாற்றியமைப்பதற்குத் தடையாக இருந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலோடு அந்த அச்சம் நீங்கிவிட்டது. அந்தத் தேர்தலில் 2.4 சதவிகித வாக்குகளை மட்டுமே அ.ம.மு.க பெற்றது. சசிகலா மீதான 'கிரேஸ்' குறைந்துவிட்டதால், அவர் பேச்சுக்கும் பெரிய அதிர்வு கட்சிக்குள் இல்லை. இந்தச் சூழலில்தான், மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது என்கிற திட்டம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.

பதறும் தி.மு.க... திணறும் அ.தி.மு.க... மிரளும் இதர கட்சிகள்... உள்ளாட்சி உச்சகட்டம்!

வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டச் செயலாளரான பாலகங்கா, வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளரான டி.ஜி.வெங்கடேஷ் பாபு ஆகியோர்மீது தலைமையில் அதிருப்தி நிலவுகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது கட்சிக்குச் சரியாக செலவழிக்கவில்லை, நிர்வாகிகளைத் துடிப்புடன் வைத்திருக்கவில்லை எனப் பல்வேறு புகார்கள் ரவுண்ட் கட்டுவதால், அவர்கள் இருவரையும் மாற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கத் தீர்மானித்திருக்கிறது கட்சித் தலைமை. அதேபோல, திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் பி.கே.வைரமுத்து ஆகியோர் மாற்றப்பட வாய்ப்புள்ளது. அமைப்புச் செயலாளராக உள்ள தளவாய் சுந்தரத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலும், துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்படலாம்.

அ.தி.மு.க.
அ.தி.மு.க.

இந்த மாவட்டச் செயலாளர் மாற்றத்தின் மூலம் கட்சிக்குள் புது ரத்தத்தைப் பாய்ச்ச கட்சித் தலைமை முடிவெடுத்திருக்கிறது. இது தொடர்பாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஓ.பி.எஸ் பேசியிருக்கிறார். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி தேர்தல் வருவதற்கு முன்னதாக அமைப்புரீதியாக கட்சியைp புனரமைத்துவிட்டு, தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிறது அ.தி.மு.க" என்றனர். நிதி பின்புலம் வலுவாக இருப்பவர்கள், துடிப்புடன் செயலாற்றுபவர்களுக்கு மாவட்டச் செயலாளர் வாய்ப்பளித்து, அடுத்த ஐந்து வருடங்களுக்கு கட்சியைத் துடிப்போடு வைத்திருக்கத் திட்டமிடுகிறது அ.தி.மு.க தலைமை. இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால், கட்சிக்குப் புத்துணர்ச்சி ஊட்டப்படுமா அல்லது கலகம் வெடிக்குமா என்பதெல்லாம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் தெரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு