Published:Updated:

கொரோனா: `அறிகுறி இருந்தும் அரசு நிகழ்ச்சி?!’ - ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வை சுற்றும் சர்ச்சை

கோவிந்தராசு எம்.எல்.ஏ
கோவிந்தராசு எம்.எல்.ஏ ( ம.அரவிந்த் )

பேராவூரணி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தராசு இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா பரவலைத் தடுக்கக்கூடிய வகையில் செயல்பட வேண்டிய ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவரே, விழிப்புணர்வுடன் செயல்படாததால் தன் தொகுதியில் கொரோனா பரவுதலுக்கு காரணமாகிவிட்டார் எனப் பேராவூரணி பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

கோவிந்தராசு எம்.எல்.ஏ
கோவிந்தராசு எம்.எல்.ஏ

பேராவூரணி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தராசு. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு கொரோனா அறிகுறி இருக்கு எனத் தெரிந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாதததுடன், பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார் எனக் கூறப்படுகிறது.

இதனால் அவருடைய மனைவி தேவி, உதவியாளர் கணேசன் மற்றும் கட்சியினர் எனக் கோவிந்தராசுவுடன் தொடர்பில் இருந்த பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இந்நிலையில் எம்.எல்.ஏ-வுடன் தொழில் பார்ட்னராக இருக்கும் ஆர்.நீலகண்டன் என்பவர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டார் எனப் பேராவூரணி அ.தி.மு.க வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேராவூரணி
பேராவூரணி

இது குறித்து அ.தி.மு.க வட்டத்தில் பேசினோம், எம்.எல்.ஏ கோவிந்தராசு கடந்த மாதம் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரை சந்திப்பதற்காகத் திருச்சிக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த தன்னுடைய நண்பர் ஒருவரை சந்தித்தார்.

அதன் பிறகு எம்.எல்.ஏ-வுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னை ஏற்பட்டதுடன் கொரோனா அறிகுறிகளும் தென்பட்டது. ஆனால், அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள தவறிவிட்டார். மேலும், கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி கோவிந்தராசு தனது ஆதரவாளர்களுடன் பேராவூரணி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை ஆய்வு செய்ததுடன்,கொரோனா பரிசோதனை மையத்தையும் தொடங்கி வைத்தார்.

பேராவூரணி
பேராவூரணி

அத்துடன் அப்போதே கோவிந்தராசு கொரோனா தொற்றுக்கான பரிசோதனையும் செய்துகொண்டார். அன்றைய தினமே கட்சி நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களைத் திரட்டி விலையில்லா கோழி வழங்கும் நிகழ்ச்சியை விமரிசையாக நடத்தினார். அதன் பின்னர் இரண்டு தினங்களுக்குப் பிறகு, வந்த கொரோனா பரிசோதனை முடிவில் எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்ததுடன், 60-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பரிசோதனையும் செய்துகொண்டனர். இதில் எம்.எல்.ஏ-வின் மனைவி தேவி, உதவியாளர் கணேசன் ஆகியோருக்கு தொற்று உறுதியானது. அத்துடன் எம்.எல்.ஏ கோவிந்தராசுவுடன் இணைந்து நிதி நிறுவனம் நடத்தி வரும் நீலகண்டன் மற்றும் அவைத் தலைவரான ரவி ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தற்போது கோவிந்தராசுவும் அவர் மனைவி தேவியும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த எம்.எல்.ஏ-வின் பார்டனரான ஆர்.நீலகண்டன் கொரோனாவுக்குப் பலியாகிவிட்டார். இந்நிலையில், பேராவூரணி பகுதியில் கொரோனாவின் பாதிப்பு பெருகிவருகிறது. விலையில்லா கோழி பெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.

தினமும் சுமார் 5 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அறிகுறி தெரிந்த உடனேயே எம்.எல்.ஏ தனிமைப்படுத்திக் கொண்டிருந்தால் இத்தனை பாதிப்புகள் வந்திருக்க வாய்ப்பில்லை. எம்.எல்.ஏ-வே போதிய விழிப்புணர்வு இல்லாமல், அஜாக்கிரதையாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.

கோ.வி.இளங்கோ
கோ.வி.இளங்கோ

இது குறித்து எம்.எல்.ஏ கோவிந்தராசு மகன் கோ.வி.இளங்கோவிடம் பேசினோம், ``கொரோனா அறிகுறி ஏற்பட்ட உடனேயே அப்பா 3 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். இறந்த நீலகண்டன் என் அப்பாவுக்கு இன்னொரு பிள்ளை மாதிரி. அவர் இறந்ததே இன்னும் அப்பாவுக்குத் தெரியாது. கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததால் உறவினர்களே அருகில் வருவதற்கு அச்சப்பட்ட நிலையில் நான்தான் முன் நின்று இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தேன். இந்தச் சூழலிலும் அரசியல் செய்பவர்களை நினைக்கும்போது மனசுக்கு வேதனையைத் தருகிறது” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு