Published:Updated:

`ஆவணங்களை எரிக்கச் சொன்னாரா சசிகலா?!' -ஐ.டி அறிக்கையின் அதிர்ச்சிப் பின்னணி

சசிகலா
சசிகலா

சசிகலா சிறையிலிருந்து வெளியில் வருவதைத் தடுக்க அ.தி.மு.க-வில் உள்ள சசிகலாவின் எதிரணியினர் டெல்லி செல்வாக்கைப் பயன்படுத்திவருகின்றனர்.

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா பரோலில் வந்த காலத்தில், தனக்கு வேண்டப்பட்ட ஒருவரைச் சந்தித்து அவரிடமிருந்த சொத்து ஆவணங்களை எரித்துவிடும்படி கூறியுள்ளார். எரிப்பதற்கு முன் அந்த ஆவணக் குறிப்புகளை சசிகலாவின் உறவுக்காரப் பெண், தன்னுடைய செல்போனில் எடுத்த போட்டோக்கள்தான் தற்போது சசிகலா தரப்புக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா
ஜெயலலிதா, சசிகலா

`சசிகலா அடுத்த ஆண்டு விடுதலையாக உள்ளார். அதன்பின்னர் தமிழக அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படும்' என சசிகலாவின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவுக்கு எதிராகப் பொதுக்குழுவில் போர்க்கொடி தூக்கியவர்களின் நிலைமை என்னவாகும் என்ற எதிர்பார்ப்பும் அ.ம.மு.க நிர்வாகிகளிடையே உள்ளது.

இந்தநிலையில். சசிகலாவுக்கு எதிராக வருமானவரித் துறையினர் வெளியிட்ட தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வருமான வரித்துறையின் அறிக்கையில், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தைக்கொண்டு சசிகலா சொத்துக்கள் வாங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், சசிகலா, தன்னுடைய பினாமி பெயர்களில் ஒரு ரிசார்ட், மதுரையில் இரண்டு வணிக வளாகங்கள், சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் ஐ.டி நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சர்க்கரை ஆலை, காகித ஆலை, விண்ட் மில்கள் ஆகியவற்றை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சொத்துக்களை சசிகலாவின் பினாமிகள் பெயரில் பணமதிப்பிழப்பு நடந்தபிறகு வாங்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறையினர் புள்ளிவிவரங்களோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

சசிகலா
சசிகலா

இதுதான் சசிகலா தரப்பினருக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் ஸ்டைலில் சசிகலா தரப்பு கையாளத் திட்டமிட்டுள்ளது. அதாவது அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வருமானவரித்துறை, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் சாட்சிகளிடம் விசாரிக்க அமைச்சர் தரப்பு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதைப்போல சசிகலா தரப்பிலிருந்தும் சாட்சிகளிடம் விசாரிக்க சட்டரீதியான முயற்சிகளை எடுத்துவருகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், `பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா பரோலில் வந்தபோது தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியிருந்தார்.

அப்போது சசிகலாவுக்கு வேண்டப்பட்ட ஒருவரை அவர் சந்தித்தார். அவரிடம் இருந்த சில ஆவணங்களை அழித்துவிடும்படி சசிகலா உத்தரவிட்டுள்ளார். அப்போது அந்த ஆவணங்களின் குறிப்புகளை சசிகலாவின் உறவுக்காரப் பெண் ஒருவர் தன்னுடைய செல்போனில் போட்டோ எடுத்து வைத்துள்ளார். ஐ.டி ரெய்டு குறித்து சசிகலா தரப்பினரிடம் விசாரித்தபோதுதான் எரிக்கப்பட்ட சொத்துக்களின் குறிப்புகள் அடங்கிய அந்த போட்டோ எங்களின் கையில் சிக்கியுள்ளது. அந்தத் துருப்புச் சீட்டை வைத்துக்கொண்டுதான் சசிகலாவுக்கும் அவரின் பினாமிகளுக்கும் எதிரான நடவடிக்கை எடுத்துவருகிறோம்' என்றனர்.

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ``சசிகலா சிறையிலிருந்து வெளியில் வருவதைத் தடுக்க அ.தி.மு.க-வில் உள்ள சசிகலாவின் எதிரணியினர் டெல்லி செல்வாக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக சசிகலாவின் உறவினர்கள் விசாரணைக்கும் அழைக்கப்பட்டிருந்தனர்.

சசிகலா தாக்கல் செய்த வருமானவரி விவரங்களை அதிகாரிகள் மறுமதிப்பீடு செய்தனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த ரிட் மனுவுக்குப் பதிலளித்த வருமான வரித்துறை அதிகாரிகள், பணமதிப்பு நடவடிக்கையின்போது ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளைப் பயன்படுத்தி 2016 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல இடங்களில் அசையா சொத்துக்களை வாங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தி திடீரென ஊடகங்களில் வெளிவர என்ன காரணம் என்று பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில் டெல்லியில் உள்ள வி.வி.ஐ.பி-க்களின் பேச்சுவார்த்தைக்கு சசிகலா தரப்பிலிருந்து சரியான பதில் இல்லாததே காரணம் என்கிறார்கள்.

கிருஷ்ணப்பிரியா
கிருஷ்ணப்பிரியா

சசிகலா தரப்பில் 50,000 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாகவும் வருமானவரித் துறையினர் கணக்கிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனைக் குறிவைத்தும் சிலர் காய்நகர்த்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு