Published:Updated:

தூத்துக்குடி: `கு.க.செல்வத்தைத் தொடர்ந்து பா.ஜ.க-வுக்கு தூது?!’ என்ன சொல்கிறார் அனிதா?

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

தி.மு.க-வில் கு.க.செல்வத்தைத் தொடர்ந்து திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனும் பா.ஜ.க-வில் இணைய தூது விடுகிறார் எனக் கிளம்பியது. `நான் தி.மு.க-வின் உண்மை விசுவாசி என்பது தலைவருக்கு நன்றாகவே தெரியும்’ என்கிறார் அனிதா.

தூத்துக்குடி தி.மு.க-வின் தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். அ.தி.மு.க-வில் இருந்தபோது மாவட்டச் செயலாளர், அமைச்சர் பதவி வகித்தவர். அ.தி.மு.க, தி.மு.க எனக் கட்சி மாறிய போதிலும், தொடர்ந்து 5வது முறையாகத் திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக உள்ளார். அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வில் இணைந்த போதிலும், மறைந்த முன்னாள் தி.மு.க மாவட்டச் செயலாளரான பெரியசாமியை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் ஒதுக்கப்பட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இதனால், அதிருப்தியில் அனிதாவும் சில காலம் ஒதுங்கியே இருந்தார். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையானதும் தீர்ப்பை வரவேற்று பேட்டி அளித்ததாலும், ”ஜெயலலிதா விரும்பினால், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார்” எனப் பகிரங்கமாகக் கூறியதாலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், கட்சித் தலைமையிடம் வருத்தத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததால் மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அத்துடன், கட்சித்தலைமையின் கண்காணிப்பு வளையத்திலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தது தெற்கு மாவட்டம்தான். அதேதேர்தலுடன் நடந்த ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க-வை வெற்றி பெறச் செய்ததால் ஸ்டாலினின் குட் புக்கில் இடம் பிடித்தார். அதேநேரத்தில் அனிதா அ.தி.மு.க-வில் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.4,90,29,040 மதிப்பில் சொத்துகள் வாங்கியதாக அவர் மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

கடந்த 10 ஆண்டுகளாக, தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கில் முக்கிய தீர்ப்பு அளிக்கப்பட இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் இருந்து தன்னையும் குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ளவதற்காகக் கொங்கு மண்டல அமைச்சர்கள் மூலம் அ.தி.மு.க-வில் இணைய இருப்பதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் கசிந்தது.

இதையடுத்து கட்சித் தலைமை, அனிதாவின் நடவடிக்கைகளை மிக நெருக்கமாகக் கண்காணிக்கத் தொடங்கியது. இந்நிலையில், கட்சியில் சில ஒன்றியங்களைப் பிரித்து, புதிய ஒன்றியச் செயலாளர்களை நியமித்தார். ’தெற்கு மாவட்டத் தி.மு.க-வில் காரணமே இல்லாமல் நிர்வாகிகளை மாற்றியுள்ளார். பணம் வாங்கிக்கொண்டுதான் பதவிகளை போட்டுக் கொடுக்கிறார் அனிதா.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

தெற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பணம் இருந்தால்தான் பதவி” என நீக்கப்பட்ட ஒன்றிய செயலாளர்கள் அறிவாலயத்திற்குப் புகார் அனுப்பியதுடன், தூத்துக்குடி எம்.பி-யான கனிமொழியிடமும் புகார்களைக் கொட்டியிருக்கிறார்கள். இதையடுத்தே, தலைமைக் கழக முதன்மைச் செயலாளரான கே.என்.நேரு தூத்துக்குடிக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுமட்டுமல்லாமல் அனிதா மீது அறிவாலயத்தை நோக்கிப் பறக்கும் புகார்களையும் தலைமை கவனித்து வருகிறதாம்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தென்சென்னை மேற்கு மா.செ-வாக இருந்த ஜெ.அன்பழகனின் பதவியைப் பிடிக்க ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் காய்நகர்த்தி வந்தார். ஆனால், இளைஞரணி நிர்வாகியான சிற்றரசு அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம், பா.ஜ.க-வில் இணைய உள்ளார் என்ற தகவல் கசிந்து வருகிறது. ``கு.க.செல்வத்தைப்போல அடுத்ததாக திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனும் இணைய உள்ளார்” என சமூக வளைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணனும் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம், “நான் தி.மு.க-வின் விசுவாசமிக்க தொண்டன் என்பது கட்சியின் தலைவருக்கே தெரியும். கட்சியின் வளர்ச்சிக்காக இதய சுத்தியோடு தீவிரமாகப் பணியாற்றி வருவதையும் அவர் நன்கறிவார். கட்சியிலிருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது. நான் கட்சி மாறப்போகிறேன் எனச் சிலர் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி அவதூறு பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு