Published:Updated:

ஆறுமுகசாமி ஆணையம்: அரசின் சம்பிரதாய காலநீட்டிப்பா... உண்மையான அக்கறையா?

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 11-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். இதையடுத்து, முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் தனியாகப் பிரிந்து தர்மயுத்தம் தொடங்கினார். ஊழல் வழக்கில் சசிகலாவுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படவே, எடப்பாடியை முதல்வராக அமரவைத்துவிட்டுச் சென்றார் சசிகலா. பிறகு தினகரன் ஒதுக்கப்பட்டு, பன்னீர் எடப்பாடியுடன் இணைந்தார். இணையும்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அது குறித்து விசாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார் பன்னீர். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய அதிமுக அரசு அமைத்தது. இதையடுத்து, விசாரணையைத் தொடங்கிய ஆணையம், ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், சசிகலா, அவரின் உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்தது. விசாரணை ஆணையம் தொடங்கப்பட்டபோது, மூன்று மாதங்களுக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அடுத்தடுத்து ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வந்ததே தவிர, விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

அப்போலோ மருத்துவமனை
அப்போலோ மருத்துவமனை

இந்தநிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், தடை விதிக்க மறுத்துவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் 2019 ஏப்ரல் மாதம் மேல்முறையீடு செய்தது. விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை விதித்தது. தடை விதிக்கப்பட்டதால், ஆறுமுகசாமி ஆணையத்தால் விசாரணையைத் தொடர முடியவில்லை. ஆணையத்துக்காக சேப்பாக்கம் எழிலகத்தில் ஒதுக்கப்பட்ட அலுவலகமும் மூடப்பட்டது, அதில் பணிபுரிந்தவர்களும் விடுவிக்கப்பட்டனர். எனினும், ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமிக்கான மாதச் சம்பளத்தை அரசு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. இதுவரை ஆணையத்துக்கான செலவு 3 கோடி ரூபாயைத் தாண்டிச் சென்றிருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்தச் சூழ்நிலையில், கடந்த ஜூலை 2-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தைக் கலைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ``மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது?’' எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது தொடர்பாக ஆறு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்தது. ஒருபக்கம் உச்ச நீதிமன்றம் ஆணைய விசாரணைக்குத் தடை விதித்துள்ளது. இன்னொரு பக்கம், உயர் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் ஏன் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யக் கூடாது என்று கேள்வியெழுப்பியிருக்கிறது. இரண்டுக்கும் மத்தியில், ஜூலை 24-ம் தேதியோடு ஆணையத்தின் ஆயுட்காலம் முடிவடையும் தறுவாயில், ஜூலை 23-ம் தேதி ஆணையத்துக்கான கால அவகாசத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

ஸ்டாலின் பிரசாரம்
ஸ்டாலின் பிரசாரம்
நா.ராஜமுருகன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க அரசுக்கு இதில் உண்மையிலேயே அக்கறை உண்டா என அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பேசினோம். ``ஜெயலலிதா மரணத்திலிருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வருவதால் தி.மு.க-வுக்கு எந்தவித லாபமும் இல்லை. இருந்தபோதிலும், அதில் பன்னீரோ, அமைச்சர்களோ சிக்கக்கூடும் என்பதால் அரசியலுக்காக ஸ்டாலின் பேசிவந்தார். சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பல இடங்களிலும் இதைப் பேசிக்கொண்டேதான் இருந்தார் ஸ்டாலின்.

திமுக தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கை

அதுமட்டுமன்றி, தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 22-வது அத்தியாயத்திலும், அதைச் சுருக்கி ‘முத்தான முத்துக்கள்’ என வெளியிட்ட அறிக்கையில், 10-வது இடத்திலும் விசாரணை ஆணையம் தனது அறிக்கையை விரைந்து தந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், 11-வது முறையாக கால நீட்டிப்பு செய்ததுடன் விட்டுவிட்டனர். கால நீட்டிப்பின்போது மூன்று மாதங்களுக்குள் அறிக்கை கொடுக்க வேண்டும் என நிர்பந்திக்கவில்லை. இதற்கு ஒரு காரணம் சொல்வார்கள், அதாவது உச்ச நீதிமன்றத்தில் தடையாணை இருக்கிறது என்று. தடையாணை இருப்பது தெரிந்தால், ஆணைய அறிக்கையை விரைந்து தந்திட விரும்பினால், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு அந்தத் தடையை நீக்க அரசு முயன்றிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. மேலும், ஜூலை 2-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆறு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான பணிகளில் அரசு இறங்கிவிட்டதா என்று தெரியவில்லை. எனினும், பதில் மனுவில் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் தடையாணையும், அதை நீக்க அரசு எடுக்கப்போகும் முயற்சி குறித்தும் சொல்லியாக வேண்டும். இதுவரையில் பார்க்கும்போது, ஜெயலலிதா மரணம் குறித்தோ, ஆறுமுகசாமி ஆணையம் குறித்தோ முதல்வர் ஸ்டாலின் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சம்பிரதாயத்துக்காக நீட்டிப்பு செய்திருக்கிறார். கோவிட் பிரச்னை, முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கை என நிறைய வேலைகள் இருப்பதால் ஆணையத்தை கவனிக்கவில்லை என்றே தெரிகிறது. ஸ்டாலின் எப்போது கவனம் செலுத்துவாரோ அப்போது துரிதமான முறையில் மீண்டும் விசாரணை தொடங்கும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு