Published:Updated:

தொடரும் மாநிலத் தேர்தல் முடிவுகள்... சரியும் பா.ஜகவின் செல்வாக்கு!

2018-ம் ஆண்டில் 21 மாநிலங்கள், எனப் படிப்படியாக அதிகாரமையங்களைப் பெருக்கிக்கொண்டே வந்த பா.ஜ.கவின் ஏறுமுகம் ஒருகட்டத்தில் மெதுவாகச் சரியத் தொடங்கியது.

தாமரை
தாமரை

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற பா.ஜ.கவின் பயணம், அதே வெற்றிக்களிப்போடு தொடரவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய இடங்களில் நடைபெற்ற மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது பா.ஜ.க. ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகளை அடுத்து வரக்கூடிய பீகார் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. ஹேமந்த் சோரன் கூட்டணி ஆட்சியின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். பா.ஜ.க முதல்வர் ரகுபார் தாஸ் உட்படப் பல அமைச்சர்களும் தோல்வியைத் தழுவி உள்ளனர். கருத்துக் கணிப்புகளின் படியே ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட்

நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 20 வரை ஐந்து கட்டமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தன. அதன் முடிவுகள் டிசம்பர் 23-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 81. இதில் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ.க 25 இடங்களையும் மற்ற கட்சிகள் 9 இடங்களையும் பெற்றுள்ளன. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பா.ஜ.க ஆட்சியை இழந்துள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் துவண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கும் ஜார்க்கண்ட் முடிவுகள் புத்துணர்ச்சியை அளித்துள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2014-ம் ஆண்டு தேர்தலில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்போடு கூட்டணியிலிருந்த பா.ஜ.கவின் மொத்த வாக்கு விகிதம் 45. ஆனால், 2019-ம் ஆண்டு தொகுதிப் பங்கீட்டில் கூட்டணி முறிந்து, தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க பெற்ற மொத்த வாக்கு சுமார் 34 சதவிகிதம் மட்டுமே. எனவே, பா.ஜ.கவின் தனித்துப் போட்டியிடும் முடிவு அவர்களுக்குப் பாதகமாகத்தான் முடிந்திருக்கிறது. கூட்டணியின்றித் தனித்துப் போட்டியிடும் பா.ஜ.கவும், பலமான எதிர்த்தரப்பு கூட்டணியுமே ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

கடந்த 2017-ம் ஆண்டு, இந்தியாவின் மாநில ஆட்சிகளில் 71 சதவிகிதப் பகுதிகள் பா.ஜ.க வசம் இருந்தது. ஆனால், 2019-ம் ஆண்டின் இறுதியில் அது குறைந்து தற்போது 40 சதவிகிதப் பகுதிகளில்தான் பா.ஜ.க ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இது இந்திய நிலப்பரப்பு சார்ந்த ஒரு குறியீடே. ஆனால், இந்தியாவில் உள்ள 17 மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சிகள்தாம் ஆட்சியில் இருக்கின்றன. பாண்டிச்சேரி உட்பட காங்கிரஸ் 7 இடங்களிலும் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், டெல்லி ஆகிய ஐந்து மாநிலங்களில் மாநிலக் கட்சிகளும் ஆட்சியில் உள்ளன. இதே பா.ஜ.க 2014-ம் ஆண்டு 7 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டில் 13 மாநிலங்கள், 2016-ம் ஆண்டில் 15 மாநிலங்கள், 2017 -ம் ஆண்டில் 19 மாநிலங்கள், 2018-ம் ஆண்டில் 21 மாநிலங்கள் எனப் படிப்படியாக அதிகாரமையங்களைப் பெருக்கிக்கொண்டே வந்த பா.ஜ.கவின் ஏறுமுகம் ஒருகட்டத்தில் மெதுவாகச் சரியத் தொடங்கியது.

2018-ம் ஆண்டு, 9 மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்தன. இவற்றில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியும் தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி எனும் மாநிலக் கட்சியும், கர்நாடகா மற்றும் திரிபுராவில் பா.ஜ.க தனித்தும், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து ஆகிய பகுதிகளில் பா.ஜ.க கூட்டணியும் வெற்றிபெற்றன. பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், 2018-ல் 21 என்ற எண்ணிக்கையிலிருந்து சரிந்து 2019-ல் 17 என்ற எண்ணிக்கையாகக் குறைந்திருக்கிறது. அதிலும் பா.ஜ.க அதிக பலம் பொருந்திய மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தோல்வி பெரும் அதிர்வலைகளைக் கட்சியின் உள்ளேயும் வெளியேயும் ஏற்படுத்தின.

இதற்காகத்தான், ஆகஸ்ட் மாதமே அமித் ஷா மற்றும் பா.ஜ.கவின் தேசியச் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வெற்றி பெறுவதற்கான யுக்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதன் விளைவாக மாநிலப் பிரச்னைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து, அதைப் பற்றியே பிரசாரங்களில் பேசும் என்ற எதிர்பார்ப்பினைப் பொய்யாக்கியது பா.ஜ.க. ஜார்க்கண்ட் உட்பட அனைத்து மாநிலங்களிலும், நாடாளுமன்றத் தேர்தலின் வியூகங்களை அடியொற்றி, தேசியப் பிரச்னைகளை முன்வைத்தே பா.ஜ.கவின் தேர்தல் பிரசாரங்கள் கையாளப்பட்டன.

அமித் ஷா - மோடி
அமித் ஷா - மோடி

அதேசமயம், பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகார் மற்றும் ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் டெல்லி ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றன. சமீபத்தில் நடந்த மூன்று தேர்தல்களில் ஹரியானாவில் வெற்றி, மகாராஷ்டிராவில் சரிவு, ஜார்க்கண்டில் தோல்வி என மதில்மேல் பயணிக்கிறது பா.ஜ.க. அடுத்தடுத்து வரும் பீகார், டெல்லித் தேர்தல்கள், பா.ஜ.கவின் பிம்பத்தை இந்தியாவில் காப்பாற்றிக்கொள்ள மிகவும் அவசியமானவை. அசைக்க முடியாத சக்தியாக அதன் பிம்பத்தைக் கட்டமைக்க விரும்பும் பா.ஜ.கவுக்கு இத்தேர்தல்கள் அதன் பலத்தைப் பரிசோதிக்கும் தராசுத் தட்டுகளாகவே செயல்படும்.

இந்திய அளவில் காங்கிரஸில் ஒரு வலுவான தலைவரும் பலமான கூட்டணியுமின்றி இருந்ததாலும், பாஜக, காங்கிரஸைத் தவிர்த்து தேசிய அளவில் மூன்றாவது பெரும் அணியோ, கட்சியோ அடையாளப்படுத்தும் படி அமையாத காரணத்தாலும் பா.ஜ.கவின் வெற்றி வாய்ப்பு நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமாகக் கூடியது. பா.ஜ.க லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மையில் சாதித்திருக்கிறது. ஆனாலும், மாநில ஆட்சிகளைப் பொறுத்தவரை, மக்கள் மத்தியில் மாநிலக் கட்சிகள் செல்வாக்கோடு இருக்கும்வரை பா.ஜ.க தன்னுடைய அதிகார பலத்தைக் கூட்டிக்கொள்வதற்குக் கூட்டணிகளைப் பலமாக அமைப்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது.

நடுவீட்டில் எரிந்த பிணம்,
காட்டிக் கொடுத்த ருத்ராட்சம்... என்ன காரணம்? #TamilnaduCrimeDiary

உதாரணத்துக்கு, தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, இரட்டை இலை என டிரேட்மார்க் பின்பலம் இருக்கும் அ.தி.மு.கவுடன் கூட்டணி என்பதே, பா.ஜ.க ஆளும் 17 மாநிலங்களில் தமிழகத்தையும் ஒன்றாகச் சேர்ப்பதற்கான காரணம். ஆனால், இருபது ஆண்டுகளாக, நவீன் பட்நாயக் ஆளும் ஒடிசாவில் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்தை மட்டுமே பா.ஜ.கவால் பெற முடிந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் கூட்டணிக் குழப்பத்தில் அடிபட்ட பா.ஜ.க, கூட்டணி வேண்டாம் எனத் தனித்துத் தேர்தல் களத்தைச் சந்திப்பதும் பா.ஜ.கவின் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல. ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகளே அதற்குச் சாட்சி. பா.ஜ.கவின் கூட்டணியிலிருந்து பிரிந்த அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு சுமார் 8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆனால், பா.ஜ.கவுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் சுமார் 1% வாக்கு வித்தியாசம் மட்டுமே உள்ளது. பா.ஜ.க தோற்றிருக்கிறது.

ஹேமந்த் சோரன் - ராகுல் காந்தி
ஹேமந்த் சோரன் - ராகுல் காந்தி

இப்படித் தேசிய அளவில், பெரும்பான்மை மாநில களங்களில் பா.ஜ.கவின் அசுர பலமே கூட்டணிதான். அதற்குச் சரியான போட்டியாகப் பிற கட்சிகளின் பலமான கூட்டணி அமையும் பட்சத்தில், பா.ஜ.க அடுத்தடுத்த தேர்தல்களிலும் பெரும் சரிவுகளைச் சந்திக்கக் கூடும் என்பதே அரசியல் எதார்த்தம்.