Published:Updated:

`சிறு புன்னகை; 2 நிமிட மெளனம்!’ -நடராசன் குடும்பத்தினரிடம் திடீர் நெருக்கம் காட்டும் தினகரன்?

நடராசன் சமாதியில் அஞ்சலி செலுத்தும் தினகரன்
நடராசன் சமாதியில் அஞ்சலி செலுத்தும் தினகரன்

இரண்டு நிமிடத்துக்குள் மலர் வளையம் வைத்து விட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டார் தினகரன். இந்த நிகழ்வில் அ.ம.மு.க நிர்வாகிகளில் ஒரு சிலர் மட்டும் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, சசிகலா கணவர் நடராசனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் தஞ்சாவூரில் எளிமையாக அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட தினகரன் இரண்டு நிமிடத்திற்குள் நடராசனின் சமாதிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டு கிளம்பிச் சென்றார்.

 நடராசன் சமாதி
நடராசன் சமாதி

சசிகலாவின் கணவர் ம.நடராசன் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு அருகே அமைந்துள்ள நடராசன் சமாதியில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதற்காக நேற்று இரவே தஞ்சை வந்த தினகரன் சங்கம் ஹோட்டலில் தங்கினார்.

இதையடுத்து நடராசனின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணியளவில் சமாதிக்கு வந்த தினகரனை நடராசனின் சகோதரர்கள் பழனிவேல் மற்றும் ராமசந்திரன் ஆகியோர் வரவேற்றனர். லேசான புன்னைகை ஒன்றை உதிர்த்த தினகரன் நேராக சமாதிக்குச் சென்று மலர் வளையத்தை வைத்து மரியாதை செலுத்தினார்.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

இதை வீடியோ எடுப்பதற்கு ஜெயா டி.வி குழுவினர் வந்திருந்தனர். ஆனால், அவர்களை வர வேண்டாம் என தினகரன் கூறிவிட்டார். அத்துடன் யாருடனும் எதுவும் பேசவில்லை. சுமார் இரண்டு நிமிடத்திற்குள் மலர் வளையம் வைத்து விட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டார். இதில் அ.ம.மு.க நிர்வாகிகளில் ஒரு சிலர் மட்டும் கலந்து கொண்டனர்.

நடராசனின் சகோதரர்களோ, ``அண்ணனின் நினைவு தினத்தை மிகப்பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டோம். ஆனால் கொரோனா தொற்று பரவாமல் இருக்க இதைத் தவிர்த்து விட்டோம். வேறு நிகழ்ச்சியாக இருந்தால்கூட தள்ளி வைத்திருக்கலாம். ஆனால், இதைத் தள்ளி வைக்க முடியாது என்பதால் மிகக் குறைந்த நபர்களைக் கொண்டு நடத்தினோம்'' என கலந்துகொண்டவர்களிடம் தெரிவித்தனர்.

 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

``முன்பெல்லாம் நடராசன் குடும்பத்தினரிடமிருந்து தள்ளியே இருப்பார் தினகரன். திவாகரன்தான் நடராசனுடனும் அவருடைய குடும்பத்தினருடனும் எப்போதும் நெருக்கமாக இருப்பார். ஆனால், சமீபகாலமாக தினகரன், நடராசன் குடும்பத்தினருடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

சிறையில் இருக்கும் சசிகலா தினகரனிடம் ஏதேனும் கூறி அதனால் நெருக்கம் காட்டுகிறாரா என்பது புரியவில்லை. தினகரனின் நடவடிக்கைகள் புரியாத புதிராகவே உள்ளன" என நடராசனுக்கு நெருக்கமானவர்கள் பேசி வருகின்றனர்.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

`சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக தினகரன் இருக்கிறார். அதனால்தான் அவர் சார்பாக தினகரனை அனுப்பி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தச் சொல்லியிருக்கிறார்’ என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள்.

அடுத்த கட்டுரைக்கு