Published:Updated:

`டொனேஷன் கொடுத்ததை இப்படி ரூட் மாத்திட்டாங்களே!’ -பா.ஜ.க-வினர் மீது பாயும் தி.மு.க பிரமுகர்

நிதியளிக்கும் திருத்தணி எம்.பூபதி
நிதியளிக்கும் திருத்தணி எம்.பூபதி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தி.மு.க பிரமுகர் நிதியளித்ததாகப் பரவும் தகவலால் தி.மு.க வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோயில் கட்டுவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மூன்று மாடிகள், ஐந்து குவிமாடங்கள், 360 தூண்கள், 161 அடி உயரம் என பிரமாண்டமாக எழுப்பப்படும் இந்தக் கோயிலைக் கட்டுவதற்கு மொத்தம் 1,100 கோடி ரூபாய் செலவாகும் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கோயில் கட்டுமானத்தை கவனிக்கும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை, கடந்த ஜனவரி 15-ம் தேதி முதல் கோயில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கும் பணியை ஆரம்பித்தது. பிப்ரவரி 27-ம் தேதி வரை இந்த நன்கொடை வசூலிக்கும் பணிகள் நடைபெறவிருக்கின்றன. நன்கொடை வசூல் செய்ய ஆரம்பித்த மூன்றாவது நாளிலேயே 100 கோடி ரூபாய் நிதி திரட்டிவிட்டதாக அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் பேட்டியளித்து பரபரப்பூட்டினார்.

கட்டப்படவிருக்கும் அயோத்தி ராமர் கோயில்
கட்டப்படவிருக்கும் அயோத்தி ராமர் கோயில்

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டும் பணி தமிழகத்திலும் முழுவீச்சில் நடைபெறுகிறது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., ராமஜென்ம பூமி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரான திருத்தணி எம்.பூபதி, ராமர் கோயில் கட்டுவதற்கு 50,000 ரூபாய் நிதியளித்திருப்பதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கிறது. அயோத்தி விவகாரத்தில், பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை தி.மு.க எடுத்திருக்கும் நிலையில், தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் ஒருவரே ராமர் கோயில் கட்டுவதற்காக நிதி அளித்திருப்பதாக பரவும் செய்தியால், தி.மு.க வட்டாரங்கள் சலசலப்பில் இருக்கின்றன.

பொங்கிய ஸ்டாலின்... பம்மிய பொன்முடி!

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதியளித்த சர்ச்சை குறித்து பூபதியிடமே பேசினோம். ``கடந்த பிப்ரவரி 17-ம் தேதி, கோயிலுக்கு நிதி திரட்டுவதாகச் சொல்லி பா.ஜ.க பிரமுகர்களுடன் சிலர் வந்து என்னைச் சந்தித்தனர். அவர்களில் ஒருவர் என் வீட்டுக்கு அருகில் வசிப்பவர். கோயில் காரியங்களுக்கு எப்போதுமே கொடையளிப்பது என்னுடைய வழக்கம். கடவுளைக் கும்பிடக் கூடாது என்று எங்கள் கட்சித் தலைமை எங்கும் சொன்னதில்லை. அதனால், என்னுடைய கடவுள் வழிபாட்டை நான் வெளிப்படையாகத்தான் வைத்திருக்கிறேன். இந்த வகையில், கோயிலுக்கு நிதி திரட்டுவதாக என்னைச் சந்தித்தவர்கள் சொன்னவுடன், அவர்களிடம் 5,000 ரூபாய் நன்கொடை அளித்தேன். நன்கொடை ரசீதை என் பிள்ளைகள் பெயரில்தான் பதியச் சொன்னேன்.

நிதியளிக்கும் திருத்தணி எம்.பூபதி
நிதியளிக்கும் திருத்தணி எம்.பூபதி

அன்றைய தினம் மதுரையில் தலைவரின் பிரசாரம் இருந்ததால், அதை டி.வி-யில் கவனித்துக்கொண்டிருந்தேன். இந்தப் பரபரப்பில், வந்திருந்தவர்கள் எந்தக் கோயிலுக்கு நிதி திரட்டினார்கள் என்கிற விவரத்தை நான் கேட்கவில்லை. பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்றவர்கள், சமூக வலைதளங்களில் நான் ராமஜென்ம பூமியில் ராமருக்குக் கோயில் கட்ட 50,000 ரூபாய் நிதியளித்ததுபோல ஒரு தவறான தகவலைப் பரப்பிவிட்டார்கள். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி. கடவுள் காரியங்களுக்குச் செய்வது புண்ணியம் என்பதால்தான் நிதியளித்தேனே தவிர, அதைவைத்து இப்படி ஓர் அரசியல் விளையாட்டு நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. டொனேஷன் கொடுத்ததை இப்படி ரூட் மாத்திட்டாங்களே” என்றார் வேதனையுடன்.

சமீபத்தில், திருத்தணியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் பரிசளிக்கப்பட்டது. அந்த வேலைப் பரிசளித்தவர்தான் திருத்தணி எம்.பூபதி.

அடுத்த கட்டுரைக்கு