Published:Updated:

சாதியைத் தூக்கிப் பிடிக்கிறதா தி.மு.க? - ஒரு விரிவான அலசல்!

அறிவாலயம்
அறிவாலயம்

அதற்கு ஒப்புதல் தரும் விதமாக இரண்டு நாள்களுக்கு முன்பாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.கவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேசியதை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

"மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை. ஆனால், தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, வரதராஜனை உட்கார வைத்தார். அதன் பின்னர் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த ஏழெட்டுப் பேர் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" எனக் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சென்னை அன்பகத்தில், நடந்த நிகழ்ச்சியொன்றில் தி.மு.க அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பி-யுமான ஆர்.எஸ்.பாரதி பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

"பட்டியலின மக்கள் நீதிபதிகள் ஆவது யார் தந்த பிச்சையும் அல்ல; அரசியல் சட்டம் தந்த உரிமை. அப்படியிருக்க திராவிட இயக்கம் போட்ட பிச்சையால்தான் பட்டியலினத்தவர்கள் முன்னேறியிருக்கிறார்கள் என ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. திராவிடம் என்கிற கருத்தியலும் உதயசூரியன் சின்னமும்கூட பட்டியலினத்தைச் சேர்ந்த தலைவர்கள் கொடுத்ததுதான்'' என அவரின் பேச்சுக்கெதிராக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார் ஆர்.எஸ்.பாரதி.

ஆர்.எஸ்.பாரதி ட்விட்
ஆர்.எஸ்.பாரதி ட்விட்

இருந்தபோதும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. தொடர்ந்து அவருக்கெதிராக விமர்சனங்களும் வசவுகளும் நீண்டு கொண்டே இருந்தன. அதே நேரத்தில் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் விதமாக, ''என் கூட இருக்கவங்க எல்லாம் அரிஜனம்தான்... என் டிரைவரும் அரிஜன்தான்... என் பி.ஏவும் அரிஜன்தான்... என்னைச் சுத்தி இருக்கவங்க பூரா அரிஜன்ஸ்தான்... அது எல்லோருக்கும் தெரியும்'' என வீடியோ பேட்டி ஒன்றில் ஆர்.எஸ்.பாரதி விளக்கமளிக்க, அது இன்னும் கடுமையான விவாதத்தை உண்டாக்கியது. சாதிய மனநிலையோடு நடந்துகொள்கிறார் ஆர்.எஸ்.பாரதி... தி.மு.கவில் இருந்தாலும் அவரின் மனதிலிருந்து இன்னும் சாதிய எண்ணம் போகவில்லை எனவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

மேற்கண்ட விமர்சனங்கள் சரியா... பெரியார் வழியில் செயல்படுவதாகச் சொல்லிக்கொள்ளும் தி.மு.கவிலும் சாதிய பாகுபாடுகள் இருக்கின்றனவா, கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதைப் பற்றி விரிவாக அலசுவதே இந்தக் கட்டுரை.

ஆர்.எஸ்.பாரதியிலிருந்தே மீண்டும் தொடங்குவோம்.

பிப்ரவரி 14-ம் தேதி அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் பேசியதற்கு விளக்கமளித்த ஆர்.எஸ்.பாரதி, ''அன்று நான் எமோஷனலாகப் பேசிவிட்டேன். என் தலைவரையும், பெரியாரையும் பற்றி ஹெச்.ராஜா மரியாதை இல்லாமல் பேசியதைப் பார்த்த கோபத்தில் இருந்தேன். அதனால்தான் அந்தத் தவறு நடந்துவிட்டது. என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதைப் புண்படுத்துவது அல்ல. கலைஞர் அம்மக்களுக்காகச் செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறுவதே ஆகும்'' என விளக்கமளித்திருந்தார். ஆர்.எஸ்.பாரதியின் இந்த விளக்கத்துக்கு, ''அவர்தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே, தி.மு.கவுக்கு எதிராக இருப்பவர்கள்தான் வேண்டுமென்றே இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்துகிறார்கள்'' என்று அவருக்கு ஆதரவாகவும் பல குரல்கள் ஒலித்தன.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி
MEJS_RTO-01

அன்று அவர் எமோஷனலாக இருந்தார்... மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஆர்.எஸ்.பாரதியின் விளக்கத்தை ஒரு வாதத்துக்குச் சரி என எடுத்துக்கொண்டாலும் அதற்கு அடுத்த நாள் மிகப் பொறுமையாக ஒரு தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அதைவிட படு பயங்கரமான கருத்தைத் தெரிவிக்கிறார் அவர். அது, அவரின் மனதில் இன்னும் சாதிய சிந்தனைகள் வேரூன்றியிருக்கின்றன என்பதையே வெளிச்சமிட்டுக் காட்டியது. ஆர்.எஸ்.பாரதி, ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தொடங்கி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது வரை சமூக வலைதளங்களில் அவரைக் கொண்டாடிவர்களில் பெரும்பாலானவர்கள் அவரின் சாதியைச் சேர்ந்தவர்களே. அவரின் சாதியின் பெயரைக் குறிப்பிட்டே அந்த வெற்றியைக் கொண்டாடினார்கள். இதுஒருபுறமிருக்க, அவரின் பேச்சு சர்ச்சையான அதே நேரத்தில், அவர் ஒரு சாதி சங்க நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படமும் வெளியானது. அதற்கு ஆர்.எஸ்.பாரதி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

தி.மு.க-வில் ஆர்.எஸ் பாரதி மட்டுமல்ல இரண்டாம் கட்டத் தலைவர்களாக, இருக்கும் பலரின் செயல்பாடுகளும் மனநிலையும் இப்படித்தான் இருக்கின்றன. பெருவாரியான தலைவர்களிடம், மாவட்டச் செயலாளர்களிடம் சாதிய மனநிலை வேரூன்றிக் கிடக்கிறது. தொடர்ந்து தங்களின் சாதிக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள், தி.மு.க-வின் முதன்மைச் செயலாளராக இருக்கும் கே.என்.நேருவும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும்.

வட தமிழகத்தில் சாதிப்பெயரைப் பின்னொட்டாக வைத்தே பல தி.மு.க வேட்பாளர்களுக்குத் தேர்தல் நேரத்தில் சுவர் விளம்பரங்கள் எழுதப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளராக இருப்பவர் என்ன சாதியோ, அதே சாதியைச் சேர்ந்தவர்களே கட்சிப் பொறுப்புகளுக்கும் இளைஞரணிப் பொறுப்புகளுக்கும் நியமிக்கப்படுகிறார்கள். அதன் மூலம் பெரும்பான்மை சாதியாக இருப்பவர்களின் ஆதிக்கமே ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவி வருகிறது என்கிற குற்றச்சாட்டு கட்சிக்குள்ளேயே உண்டு.

கே.என்.நேரு - கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்
கே.என்.நேரு - கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்

அதற்கு ஒப்புதல் தரும் விதமாக இரண்டு நாள்களுக்கு முன்பாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.கவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேசியதை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

''மாவட்டச் செயலாளர்கள் பெரும்பான்மை சமூகத்தில் இருப்பதால், தங்கள் உறவுக்காரர்களை உடன் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், கட்சியினர் மத்தியில் சாதி பார்க்காதீர்கள். குறிப்பாக சிறுபான்மைச் சமூகத்தினரையும் பட்டியல் இனத்தவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதுதான், கட்சி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். நான் சாதி பார்த்து ஆள்களை உடன் வைத்துக்கொண்டதில்லை. தி.மு.க காரனுக்கு சாதி ஏது?'' எனப் பேசியிருந்தார்.

தி.மு.க காரனுக்கு ஏது சாதி எனப் பேசும் நேருவே தன் சாதிக்கூட்டங்களில் கலந்துகொள்வதும் முக்கியமான நபராக வலம் வருவதும் மிகப்பெரிய முரண்பாடு. அதுஒருபுறம் இருந்தாலும், குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியிருக்கிறீர்கள், கட்சியினரிடம் சாதி பார்க்காதீர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள் என அவர் சொல்லுவதிலிருந்தே, அதற்கான சூழல் அங்கிருக்கிறது என்பது உறுதியாகிறது, அதற்கான எச்சரிக்கையாகவே நேருவின் குரலைப் பார்க்க முடிகிறது. தங்கள் கட்சிகளில் மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளில் இருக்கும் தன் சாதிக்கார அமைச்சர்களை பாராட்டிப் புளகாங்கிதம் அடையும் அவலமும் கொங்குப் பகுதியில் நடந்துவருகிறது.

திருச்சி என்றில்லை தமிழகம் முழுவதுமுள்ள ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பெரும்பான்மைச் சாதியைச் சேர்ந்தவர்கள்தான், தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். தவிர, தேர்தலில் வேட்பாளர்களாகவும் தனித்தொகுதிகளைத் தவிர பிற தொகுதிகளில் எல்லாம் அந்தப் பகுதிகளில் பெரும்பான்மையாக உள்ள சாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வாய்ப்பளிக்கப்படுகிறது. அதன்மூலம் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்கெனவே சமூக ரீதியாக ஆதிக்கமாக உள்ள சாதியைச் சேர்ந்தவர்கள், அரசியல் அதிகார ரீதியாகவும் வலுவாக மாறி பிற சாதியினரை ஒடுக்கும் சூழ்நிலையே நிலவுகிறது. பிற இடைநிலை, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களால் அரசியல் அதிகாரத்துக்கு வர இயலாத சூழ்நிலையே நிலவுகிறது. இப்படி ஒரு சாதிய வழியிலான கட்டமைப்பே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருக்கிறது. சாதி ரீதியாக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதும் சாதி வழியாக ஓட்டுக்களை ஒருங்கிணைப்பதும் தேர்தல் வெற்றிக்காக எனச் சொல்லப்பட்டாலும், அதற்குப் பின்னால் தி.மு.கவின் அடிநாதமான பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கை மிகப்பெரிய தோல்வியை, பின்னடவைச் சந்திக்கிறது என்பதைக் கவனிக்க மறந்துவிடுகிறார்கள்.

கனிமொழி
கனிமொழி

இரண்டாம் கட்டத் தலைவர்களிடத்தில் மட்டுமல்ல... கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பல தொகுதிகள் இருக்க, நாடார் சமுதாயம் பெரும்பான்மையாக உள்ள தூத்துக்குடியில் கழகத்தின் மகளிரணிச் செயலாளர், கலைஞர் கருணாநிதியின் புதல்வி கனிமொழி போட்டியிட்டதற்கான காரணம் சாதி வாக்குகள்தான் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்து. தேர்தலுக்கு முன்புவரை கனிமொழியின் ட்விட்டர் பக்கத்தின் கவர் போட்டாவாக தந்தை பெரியாரின் படம் இருந்ததும் பிறகு அது பனைமரமாக மாறியதும் எதார்த்தமாக நடந்த ஒரு விஷயமல்ல என்கிறார்கள். ஆனால், "நான் எந்தக் காலத்திலும் பெரியார் கொள்கையிலிருந்து விலக மாட்டேன். அதுமட்டுமன்றி, தூத்துக்குடியைப் பிரதிபலிக்கும் விதமாகவே ட்விட்டர் பக்கத்தில் பனைமரத்தை வைத்துள்ளேன், வேறு காரணங்கள் கிடையாது." என அப்போது விளக்கமளித்தார் கனிமொழி.

கனிமொழி எந்த தைரியத்தில் இங்கு வந்து போட்டியிடுகிறார்?நேற்று, தி.மு.க., ட்விட்டர் பக்கத்தில் தந்தை பெரியாரின் படத்தை எடுத்துவிட்டு பனைமரத்தின் படத்தினை வைத்திருக்கிறார்கள். தேர்தல் என்று வந்ததும் தி.மு.க.வின் கொள்கை எல்லாம் பறந்துவிட்டது. இதே செயலை வேறொரு தலைவர் செய்திருந்தால் தற்போது ஏகப்பட்ட கண்டன அறிக்கைகள் வந்திருக்கும்.
- தமிழிசை (தூத்துக்குடி பிரசாரக் கூட்டத்தில்)

அதுபோகட்டும்... கடந்த டிசம்பர் 23-ம் தேதி, சென்னையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்டப் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் 89-வயதான நாராயணப்பா எனும் வயதான தி.மு.க தொண்டர் ஒருவரும் கலந்துகொண்டார். அவரை அறிவாலயத்துக்கு அழைத்து வந்து பெருமைப்படுத்த நினைத்தார் மு.க.ஸ்டாலின். அதுவரையிலும் எந்தத் தவறும் இல்லை. அடிமட்டத் தொண்டர்களிடத்தும் பேதமில்லாமல் பழகும் தி.மு.க தலைவர்களின் வழக்கமான குணம்தான் அது. ஆனால், அவரிடம் எந்த ஊர் என ஸ்டாலின் கேட்க, அவர் ஒசூர் எனச் சொல்ல, கவுடாவா என சாதி குறித்து ஸ்டாலின் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலானாது.

இதுதான் பெரியார் வழிவந்த கட்சியின் லட்சணமா என அப்போது கடுமையான விமர்சனங்கள் ஸ்டாலினின் மீது முன்வைக்கப்பட்டன. "ஊரைச் சொன்னால், சாதியைச் சொல்லும் அளவுக்கு சாதி அரசியலில் ஊறி திளைத்துள்ளார்.. ஸ்டாலின்.. சாதி பார்த்து தேர்தலில் போட்டியிட சீட் வழங்கி 'சாதி ஒழிப்பில்' தமிழகத்தில் முன்மாதிரியாகத் திகழ்ந்த அறிவாலயத்துக்கு இது எல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன?" எனத் தமிழக பா.ஜ.கவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலின் - நாராயணப்பா சந்திப்பு
ஸ்டாலின் - நாராயணப்பா சந்திப்பு
சூடுபிடிக்கும் மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. - தி.மு.க  வேட்பாளர்கள் யார்?

கூட்டணியில் இருந்தால் பா.ம.க சாதிக்கட்சியில்லை... வி.சி.க சாதிக்கட்சியில்லை, புதிய தமிழகம் சாதிக் கட்சியில்லை. அதே கூட்டணியில் இருந்து விலகிய அடுத்த நிமிடமே அவர்கள் சாதிக்கட்சிகளாகி விடுவார்கள். இதுதான் கடந்த பல ஆண்டுகளாக தி.மு.க கடைப்பிடித்துவரும் கூட்டணிக்கொள்கை. அவர்களாலேயே சாதிக்கட்சி என முத்திரை குத்தப்பட்டவர்கள் பின்னர் அவர்களாலேயே உச்சி முகரப்பட்ட அவலமும் பலமுறை நடந்தேறியிருக்கிறது. அது மட்டுமா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க.வின் பிரசாரங்களுக்கு, வி.சி.கவினர் மட்டும் எந்தப் பகுதிகளுக்கும் பிரசாரம் செய்யவேண்டும், எந்தப் பாதை வழியாகப் போகவேண்டும் எனத் தனியாக அட்டவணை கொடுக்கப்பட்டதும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெயரை மட்டும் நீக்கிவிட்டு சுவர் விளம்பரம் எழுதப்பட்டதும் கண்கூடாக நடந்தது. கடந்த தேர்தலில் மட்டுமல்ல, தி.மு.கவுடன் வி.சி.க கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க நிர்வாகிகளின் சாதிய ஒதுக்கல்களுக்கு ஆட்பட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் கலங்கி நிற்பது அரங்கேறி வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் துரைமுருகனைக் கடந்து வி.சி.கவைக் கூட்டணியில் சேர்க்க தி.மு.க தலைமை படும்பாடு ஊர் அறியும்.

தி.மு.க மட்டுமே சாதியை ஊக்குவிக்கிறதா, அ.தி.மு.க சரியான கட்சியா என்றால் நிச்சயமாக இல்லை. தி.மு.கவைவிட படுபயங்கரமாக சாதியை ஊக்குவிக்கும் கட்சியாக சாதிய மனநிலையுடவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சியாக அது திகழ்கிறது. ஆனால், அ.தி.மு.க எப்போதும் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசியதில்லை. ஆனால், அப்படித் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும், அதற்கான வாக்குகளையும் அறுவடை செய்துகொள்ளும் தி.மு.க அப்படி நடந்துகொள்ளும்போதுதான் அது அதிர்ச்சியாகவும் விமர்சனத்துக்கும் உள்ளாகிறது. தற்போது மட்டும்தான் இது நடக்கிறதா, கருணாநிதி காலத்தில் இல்லையா என்றால், சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது; பா.ம.க விமர்சனத்தை முன்வைக்கும் போதெல்லாம் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை விட்டு அறிக்கை விடச் சொல்வது; கனிமொழியை ராஜ்யசபா எம்.பியாக்க, விஜயகாந்தை சந்திக்க எ.வ.வேலுவையும் அன்புமணியைச் சந்திக்க துரைமுருகனையும் ஜவாஹிருல்லாவைச் சந்திக்க காதர் மொய்தீனையும் அனுப்பியது... எனக் கருணாநிதி காலத்திலும் சில விஷயங்கள் நடக்கத்தான் செய்திருக்கின்றன. ஆனால், அது ‘திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்றும் ஒரு தி.மு.க பிரதிநிதியே பேசும் அளவுக்கு இல்லை.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு (ஜனவரி 31-ம் தேதி பேசிய உரை) நன்றி தெரிவிக்கும் அமர்வு நடைபெற்றது. அப்போது, மாற்று சபாநாயகராக தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா இருந்தார். அப்போது பேசிய தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவரும் தி.மு.கவின் மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு ''இன்று சி.என்.அண்ணாதுரையின் 51-வது நினைவு தினம். அதை இந்த அரங்கில் பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்'' எனப் பேசத் தொடங்கியவர், சபாநாயகர் இருக்கையில் இருந்த ஆ.ராசாவைப் பார்த்து.'' நீங்கள் இந்த இருக்கையில் இருப்பதைப் பார்க்க அண்ணா இல்லை, உங்களை வளர்த்தெடுத்த கருணாநிதி இல்லை. ஆனால் அவர்கள் வழிவந்த மு.க.ஸ்டாலின் இங்கு இருக்கிறார். அண்ணாவின், கலைஞரின் கொள்கைகளை தத்துவங்களை அவர் பாதுக்காப்பார்" என்று பேசி குடியரசுத் தலைவரின் உரை குறித்து பேசத் தொடங்கினார்.

பட்டியலின மக்களை நீதிபதி ஆக்கியது தி.மு.க போட்ட பிச்சை எனப் பெரியார் பாசறை வழிவந்த திராவிடப் பாரம்பர்யம் கொண்ட ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டியலின மக்கள் நீதிபதிகள் ஆவது யார் தந்த பிச்சையும் அல்ல; அரசியல் சட்டம் தந்த உரிமை. வெறும் கோஷம்போடும் கும்பலாக இருப்போம் எனக் கனவு காணாதீர்கள். கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கும்.
தொல்.திருமாவளவன்

ஆர்.எஸ்.பாரதியின் கருத்தோடு டி.ஆர்.பாலுவின் பேச்சை ஒப்பிடமுடியாது என்றாலும், பட்டியலின மக்களுக்கு நியாயமாக கிடைத்த உரிமைகளையும் அரசியலமைப்பு கொடுத்த அதிகாரத்தையும் எங்களால்தான் நடந்தது என்கிற தொனி அவரின் பேச்சில் இல்லாமல் இல்லை. இதே, ஆ.ராசா, தி.மு.க-வின் சார்பாக தமிழக முதல்வராகவோ, தி.மு.கவின் தலைவராகவோ வந்திருந்தால் டி.ஆர்.பாலு பெருமைப்பட்டுக்கொள்வதில் சிறிதளவு நியாயமாவது இருந்திருக்கும். இல்லை, பொதுத் தொகுதியில் நின்று எம்.பி ஆகியிருந்தாலும் அது பாராட்டுக்குரிய ஒன்றாக இருந்திருக்கும். ஆனால், தனித் தொகுதியில் நின்று வெற்றிபெற்று, ஐந்தாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகும் ஒருவருக்கும் நாடாளுமன்ற நடைமுறையின்படி கிடைத்த, மாற்று சபாநாயகர் பொறுப்பையெல்லாம் எங்களின் சாதனைதான் எனப் பெருமைப்பட்டுக்கொள்வதில் எந்த நியாயமும் இல்லை.

அம்பேத்கர் - பெரியார்
அம்பேத்கர் - பெரியார்
ரஜினி, கமல், ஸ்டாலின் Vs எடப்பாடி... எந்த 'பிராண்ட்' அபாரம்?  - அம்பி பரமேஸ்வரன் பதில்!
திராவிட இயக்கங்கள் பட்டியலின மக்களுக்காகப் போராடவே இல்லை என்பதல்ல நான் சொல்ல வருவது; ஆனால், திராவிட இயக்கங்களில் உள்ள உயர் சாதி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் மனநிலை எல்லாம், "நாங்கள் ஏற்கெனவே அனைத்து அதிகாரங்களோடு இருந்தோம், பட்டியல் இன மக்கள் மட்டும்தான் பின்தங்கி அரசியல் அதிகாரமற்றவர்களாக இருந்தார்கள். நாங்கள்தான் போராடி அந்த மக்களுக்கான உரிமைகளை வாங்கிக் கொடுத்தோம்'' என்று சொல்லிக்கொள்கிற அளவில்தான் இருக்கிறது.

சமூக ரீதியாக பெரியாரியக் கொள்கைகளையும் சட்ட அதிகார ரீதியாக அம்பேத்கரின் செயல்பாடுகளையும் உள்வாங்கிக் கொள்ளாதவர்களின் உளறல்களாகவே இது போன்ற பேச்சுக்கள் இருக்கின்றன. சமூக நீதி, இட ஒதுக்கீடு ஆகியவற்றைப் பற்றி தி.மு.கவின் உயர்மட்டத் தலைவர்களுக்கே, இந்த அளவில்தான் புரிதல் இருக்கிறது என்றால் தொண்டர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எனில், சாதி, மதமற்ற சமத்துவ சமூகத்துக்காக இவர்களை நம்பியிருக்கும் மக்களின் நிலை?

சமூக நீதி பற்றி அதிகம் பேசும் கட்சியான தி.மு.க இனிவரும் காலங்களிலாவது தன் தவறுகளைத் திருத்திக்கொள்ளுமா?

அடுத்த கட்டுரைக்கு