Published:Updated:

`விடியலைக் கொடுத்திருக்கிறோம் - திமுக; விடியல் காணாமல்போய்விட்டது - அதிமுக!' - ஓர் அலசல்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் `ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தரப்போறாரு’ என்ற பிரசாரப் பாடல் திமுக-வால் முன்னெடுக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மே 7-ம் தேதி பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் 100-வது நாள் ஆகஸ்ட் 15 அன்று முடிந்தது. அதேநாள் சுதந்திர தினம் என்பதும், கோட்டைக் கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றியதும் முதல்வர் ஸ்டாலினுக்குக் கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் `ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தரப்போறாரு’ என்ற பிரசாரப் பாடல் திமுக-வால் முன்னெடுக்கப்பட்டது. தமிழகத்திலுள்ள அத்தனை திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் தங்களது வீடு, வியாபாரத்தலம், கட்சி அலுவலகம் என அனைத்திலும் `ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தரப்போறாரு’ என்ற வாசகம் பதாகைகளாகத் தொங்கவிடப்பட்டிருந்தது. திமுக ஆட்சியமைத்து நூறு நாள்களைக் கடந்துவிட்டதால், மக்களுக்கு விடியலைக் கொடுத்துவிட்டதா தி.மு.க அரசு? என்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பி.டி.அரசகுமாரிடம் கேட்டோம்.

பி.டி.அரசக்குமார், திமுக
பி.டி.அரசக்குமார், திமுக

``நிச்சயமாக விடியலைக் கொடுத்திருக்கிறோம். `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் சுமார் நான்கு லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. அதற்காகத் தனித்துறையை ஒதுக்கி, ஐ.ஏ.எஸ் அதிகாரியை தனிச் செயலாளராக அதற்கு நியமித்து பரிசீலிக்கப்பட்டது. அதன்படி சுமார் 2.3 லட்சத்துக்கும் மேற்பட்ட தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ஒருவர் தனக்கு வீடு தேவை என்று சொல்லியிருந்தால், முதலில் அவருக்குச் சொந்தமாக வீடு இருக்கிறதா... வாடகை வீட்டில் வசிக்கிறாரா... சொந்த நிலமுள்ளதா போன்ற தகவல்களெல்லாம் அலசி ஆராயப்பட்டு, தகுதி இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டா வேண்டி விண்ணப்பம், மின் இணைப்பு, ரேஷன் அட்டை, விவசாய மின் இணைப்பு போன்றவற்றுக்க்கு உடனடித் தீர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்

முந்தைய கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டமான `அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்டம் மீண்டும் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்தச் சட்டத்தின் மூலம் முதன்முறையாக தமிழ்ப் பெண் ஒருவரும் அர்ச்சகராகியிருக்கிறார் என்பது பாராட்டப்படக்கூடிய விஷயம். மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் என்பது அவர்களது துயர் துடைக்கும் அற்புத திட்டம். உதாரணமாக, துன்புறுத்தும் கணவன்மார்களைவிட்டு மனைவிகள் தங்களது தாய் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்றால்கூட டிக்கெட்டுக்கு காசில்லாமல் சிரமப்பட்டனர். இப்போது அது நிவர்த்தியாகியிருக்கிறது. பணிக்குச் செல்லும் மகளிருக்குப் பேருந்துச் செலவு மட்டுமே மாதம் 1,500 ரூபாயைத் தாண்டும். குறைந்த சம்பளம் பெறும் பெண்களுக்கு இது பிரச்னையாக இருந்தது. தற்போது அதுவும் நீங்கியிருக்கிறது.

83 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்போகிறோம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்டிருந்த `அண்ணா மறுமலர்ச்சி’ திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளை மேம்படுத்துவது, கிராமங்களுக்கும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கும் இடையே இணைப்புச் சாலைகளை அமைப்பது போன்றவை இதன் மூலம் நிறைவேற்றப்படும். 1996-2001 வரையிலான கருணாநிதி ஆட்சியில் பட்டியலினத்தவருக்காகக் காலனி வீடுகள் கட்டப்பட்டன. அவையெல்லாம் புனரமைக்கப்படும். 2.9 லட்சம் வீடில்லாத மக்களுக்கு 87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகட்டும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. அரசுப் பேருந்துகள் இயக்குவதில் ஒரு கிலோமீட்டருக்கு 59 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இருந்தபோதும் பேருந்து டிக்கெட் விலை உயர்த்தப்படவில்லை. ஆறு மாதங்களாக இருந்த கர்ப்பிணிகளுக்கான பேறுகால விடுப்பை, 12 மாதங்களாக உயர்த்தியிருக்கிறார் முதல்வர். இந்திய அளவில் ஊழலுக்கு அப்பாற்பட்ட, எஃபிஷியன்ட்டான அதிகாரிகளை நியமித்திருப்பது தமிழகத்தில்தான். இது போன்று இன்னும் எண்ணற்ற விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். சொன்னது சொன்னபடி விடியலைக் கொடுத்திருக்கிறோம், கொடுத்துக்கொண்டும் இருக்கிறோம்” என்றார்.

நாஞ்சில் அன்பழகன், அதிமுக
நாஞ்சில் அன்பழகன், அதிமுக

தி.மு.க இப்படிக் கூற, அ.தி.மு.க-வின் கருத்தென்ன? என்பதையறிய அந்தக் கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் நாஞ்சில் அன்பழகனிடம் பேசினோம். ``தி.மு.க கூறிய வாக்குறுதிகளில் அதிகப்படியானவை பொய்களே அன்றி வேறில்லை. அரியணையில் ஏறுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பொய்களை அள்ளித் தெளித்தனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. மக்களே இது குறித்துக் கேள்வியெழுப்பத் தொடங்கிவிட்டனர். இலவசப் பேருந்து பயணத்தால் மகளிருக்கு நன்மை என்று அவர்கள் சொன்னாலும், அது மனவேதனையைத்தான் பெண்களுக்குக் கொடுத்திருக்கிறது. ஏனெனில், பெண்கள் பேருந்துகளில் ஏற முயன்றாலே பேருந்தை நகர்த்துவதும், `ஓசியில் பயணிக்கிறார்கள்’ என நடத்தநர்கள் திட்டுவதும்தான் நடக்கிறது. அரசு உத்தரவு என்றால் அதை அரசு ஊழியர்கள் மதிக்க வேண்டும். அவ்வாறு மதிக்காதவர்கள் மீது தி.மு.க அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஸ்டாலின் அரசின் 100 நாள் ஆட்சி:  வளர்ச்சிப் பாதையா, கசப்பான அனுபவமா?

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அறநிலையத்துறை இந்து சமய கோட்பாட்டில் கைவைத்து உரிமையைப் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுவருகிறது. பல இடங்களில் இது பற்றிய புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. கோயில் இடங்களில் தி.மு.க-வினருக்கு மட்டுமே கடை ஒதுக்கும் போக்கு நடந்துவருகிறது. மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பார்களை கைப்பற்றும் வேலையில் தி.மு.க இறங்கியுள்ளது. ஆற்று மணலை தான்தோன்றித்தனமாக அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்தது. இப்போது மின் பகை மாநிலமாக மாறிவிட்டது. தினமும் எங்காவது மின் வெட்டு இருந்துகொண்டே இருக்கிறது. உயிரைக் காக்கும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும், உடன் வரும் செவிலியர்களும் அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி, மக்களிடம் 1,500 முதல் 3,000 ரூபாய் வரை வசூலித்துவருகிறார்கள். இலவச ஆம்புலன்ஸுக்கு எதற்குப் பணம் கொடுக்க வேண்டும்? இது போன்ற செயல்கள் அரசுக்குத் தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.

வெறும் இரண்டு சதவிகித வித்தியாசத்தில், விபத்து போன்று வென்றுவிட்டது தி.மு.க. சிறுபான்மையினரைவைத்து பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தித்தான் அரியணையில் ஏறியிருக்கிறது. `ஒருவரது உண்மையான குணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவருக்கு அதிகாரத்தையும் பணத்தையும் கொடுத்துப்பாருங்கள்’ என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கம் சொல்லியிருக்கிறார். அது நிரூபணமாகிவிட்டது, தி.மு.க-வின் கோர முகம், குணம் தெரியத் தொடங்கிவிட்டது. 2006-ல் வெற்றிபெற்றபோது நிலமில்லாத ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாகக் கொடுக்கப்படும் என கருணாநிதி சொன்னார். ஆனால், யாருக்குமே கொடுக்கவில்லை. அதுபோலதான், அப்பாவை விஞ்சுமளவுக்குப் பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு, அதை நிறைவேற்ற முடியாது என்று தெரியும்போது முந்தைய அ.தி.மு.க அரசைக் குறை சொல்வதும், நிதியில்லை, கடன்சுமை என்று சொல்வதுமாக காலத்தைக் கழிக்கிறது தி.மு.க. எனவே, என்று தி.மு.க ஆட்சிக்கு வந்ததோ அன்று முதல் தமிழகத்தில் விடியல் காணாமல்போய்விட்டது!” என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு