Published:Updated:

`1977 டு 2020..!' - அ.தி.மு.க-வின் எஃகு கோட்டையா எடப்பாடி?

எடப்பாடி
எடப்பாடி

இங்கே தி.மு.க நேரடியாக வெற்றி பெற முடியாவிட்டாலும், கூட்டணி மூலம் வெற்றியடைந்திருக்கிறது. மேலும், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் அ.தி.மு.க தோல்வியடைந்தது.

வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, டிசம்பர் 19 -ம் தேதி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, ``எடப்பாடி தொகுதி அ.தி.மு.க-வின் எஃகு கோட்டை. முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எங்கள் எடப்பாடி-க்கு உண்டு. கடந்த 43 ஆண்டுக்கால வரலாற்றில் ஒரு முறைகூட எடப்பாடி தொகுதி-யில் தி.மு.க வெற்றி பெற்றதில்லை" என்று பரப்புரை செய்தார்.

அதேநேரத்தில் `இது உண்மைதான். ஆனால், இந்த 43 ஆண்டுக்கால வரலாற்றில் அ.தி.மு.க-வும் இங்கு தோல்வியைச் சந்தித்திருக்கிறாது. எடப்பாடி பழனிசாமியே தோல்வியடைந்திருக்கிறார்' என்கிறார்கள் சேலம் மாவட்ட அரசியலாளர்கள். இதைவைத்து விரிவாக விவாதங்களை கிளப்புகின்றனர் தி.மு.க-வினர்.

எடப்பாடி
எடப்பாடி

``1996 -ல் பா.ம.க சார்பாகப் போட்டியிட்ட ஐ.கணேசன் இதே எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க இரண்டாம் இடம் பிடித்தது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை எதிர்த்து பா.ம.க போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது மூன்றாம் இடம்பிடித்த அ.தி.மு.க வேட்பாளர், எடப்பாடி பழனிசாமிதான்.

அதேநேரம் யார் இந்த ஐ.கணேசன் என்றால், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து பா.ம.க-வில் இணைந்தவர். 1977 மற்றும் 1980 இரண்டு தேர்தல்களிலும் அ.தி.மு.க சார்பாக இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி... அடுத்து, 2006-ல் இதே எடப்பாடி தொகுதியில் பா.ம.க-வின் வை.காவேரி வெற்றி பெற்றார். யாரை எதிர்த்து வென்றார் என்றால், தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துதான். இந்தத் தேர்தலில் பா.ம.க., தி.மு.க கூட்டணியில் இருந்தது.

அ.தி.மு.க
அ.தி.மு.க

எனவே, இங்கே தி.மு.க நேரடியாக வெற்றி பெற முடியாவிட்டாலும், கூட்டணி மூலம் வெற்றியடைந்திருக்கிறது. மேலும், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் அ.தி.மு.க தோல்வியடைந்தது. அப்போது இதே சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் , தி.மு.க வேட்பாளரைவிட 8,088 வாக்குகள் குறைவாக அ.தி.மு.க வேட்பாளர் பெற்றார்" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஆனால், இரும்பு மாவட்ட அ.தி.மு.க ர.ர -க்களோ, `அ.தி.மு.க மற்றும் எங்கள் கூட்டணியிலுள்ள பா.ம.க தவிர்த்து இங்கு தி.மு.க நேரடியாக வெல்ல முடியவில்லை என்பதைத்தான் முதல்வர் சுட்டிக்காட்டுகிறார். நேருக்கு நேர் வெல்ல முடியாத கட்சியே தி.மு.க’ என பதில் விவாதங்களை முன்வைக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு