Published:Updated:

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி எம்.பி?

கனிமொழி எம்.பி

``மகளிர் பிரதிநிதித்துவம் என்கிற அடிப்படையில், அந்தப் பதவி கனிமொழிக்கு வழங்கப்படவிருக்கிறது" என அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி எம்.பி?

``மகளிர் பிரதிநிதித்துவம் என்கிற அடிப்படையில், அந்தப் பதவி கனிமொழிக்கு வழங்கப்படவிருக்கிறது" என அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published:Updated:
கனிமொழி எம்.பி

தி.மு.க மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர்களுள் ஒருவராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் சமீபத்தில் கட்சியிலிருந்து விலகியதையடுத்து, அந்த இடம் காலியாக இருந்தது. ``மகளிர் பிரதிநிதித்துவம் என்கிற அடிப்படையில், அந்தப் பதவி கனிமொழிக்கு வழங்கப்படவிருக்கிறது. இதன் மூலம், ஆ.ராசா, பொன்முடி, ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியவர்களுடன் இனி கனிமொழியும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகச் செயல்படவிருக்கிறார்" என அறிவாலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல் கடந்த சில மாதங்களாக நடந்துவருகிறது. வட்டம் முதல் மாவட்டம் வரை தேர்தல் முடிந்து பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக, பொதுக்குழு அக்டோபர் 9-ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரேயுள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி 'விங்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.

மனுத்தாக்கல்
மனுத்தாக்கல்

இது ஒருபுறமிருக்க, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர்களுள் ஒருவராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகியதையடுத்து அந்தப் பதவி காலியாக இருந்தது. துணை பொதுச்செயலாளர் பதவிக்கான மகளிர் ஒதுக்கீட்டில், தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, தி.மு.க கொள்கை பரப்பு இணைச் செயலாளர் புதுக்கோட்டை விஜயா, பூங்கோதை, ஆலடி அருணா, டாக்டர் கனிமொழி சோமு, கீதா ஜீவன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. சுப்புலட்சுமி ஜெகததீசன் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்தப் பகுதியிலிருந்தே ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், கனிமொழி எம்.பி தேர்ந்தெடுக்கப்படவே அதிக வாய்ப்பிருப்பதாகக் கடந்த சில நாள்களாகத் தகவல்கள் வெளியாகின.

அதேவேளையில், `தி.மு.க மகளிரணிச் செயலாளர் பொறுப்பில் தனித்துவமாகச் செயல்பட்டுவரும் நிலையில், ஐந்து பேரில் ஒருவராக இருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை கனிமொழி ஏற்க மாட்டார். பொதுக்கூட்டத்தில் மேடையில் அமர்வதற்கு இடம் கிடைப்பதைத் தவிர, துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை' என்கிற தகவல்களும் அவர் ஆதரவாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டன. ஆனால், முதல்வர் ஸ்டாலினே தனிப்பட்ட முறையில் அழைத்து இந்தப் பொறுப்பை ஏற்கச் சொல்லியிருப்பதால் கனிமொழியும் ஒப்புக்கொண்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. தி.மு.க சட்டவிதிகளின்படி ஐந்து பேர் துணைப் பொதுச்செயலாளர்களாக இருக்கலாம். அவர்களில் மூன்று பேர் பொதுவாகவும் மகளிருக்கு ஓர் இடம், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு ஓர் இடம் என பிரிக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரதிநிதித்துவ அடிப்படையில் தற்போது கனிமொழி துணைப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்.

கனிமொழி
கனிமொழி

தி.மு.க-வில் கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவையின் தலைவர் பொறுப்பை வகித்தவந்த கனிமொழி, 2015-ம் ஆண்டு மகளிரணிச் செயலாளர் ஆக்கப்பட்டார். தற்போது துணைப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவராக சமீபத்தில் கனிமொழி மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவிருக்கும் நிலையில், அவர் ஆதரவாளர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்.

``சற்குண பாண்டியனின் அம்மா மறைந்தபோதே கனிமொழி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வருவார் என எதிர்பார்ப்போடு இருந்தோம். அந்த அம்மாவும் மேடமை பரிந்துரை செய்திருந்தார். ஆனால், மகளிரணியை வலுப்படுத்தும் நோக்கம் இருந்ததால் அப்போது அவருக்கு அந்தப் பொறுப்பு தரப்படவில்லை. ஆனால், மகளிரணியை ஒரு வலுவான கட்டமைப்போடு உருவாக்கிவிட்டார் . கட்சியிலும் தேர்தல் நேரங்களில் மிகக் கடுமையாகச் சுற்றுப்பயணம் செய்து கட்சிக்காக உழைத்திருக்கிறார். நாடாளுமன்றத்திலும், தி.மு.க-வின் கொள்கைகளை எடுத்துவைப்பதிலும் கட்சியில் பெரியார், அண்ணா கொள்கைகளை எடுத்துச் செல்வதிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். மகளிர் பிரதிநிதித்துவம் என்பதைத் தாண்டி, அவரின் உழைப்புக்கான மரியாதையாகவே இதைப் பார்க்கிறோம். அவருடைய திறமைக்கும் உழைப்புக்கும் இன்னும் பல முக்கியப் பொறுப்புகளை அடைய வேண்டும்'' என்கிறார்கள்.

ஹெலன் டேவிட்சன்
ஹெலன் டேவிட்சன்

கனிமொழி துணைப் பொதுச்செயலாளராகும் பட்சத்தில் அவர் வகித்த மகளிரணிப் பொறுப்பு காலியாகும். இப்போதே அதற்கு பலத்த போட்டி நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. கனிமொழியிடம் இது குறித்து ஆலோசித்த பிறகு ஸ்டாலின் முடிவெடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மகளிரணிச் செயலாளர் பொறுப்புக்கு எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் முயன்றுவரும் நிலையில், முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சனுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.