Published:Updated:

கோயில் பெயரில் நிதி... மோசடிப் புகார்; கைது - குறிவைக்கப்படுகிறாரா கார்த்திக் கோபிநாத்?

கார்த்திக் கோபிநாத் ( ட்விட்டர் )

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளராக அறியப்படும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத், கோயில் பெயரில் பணம் வசூல் செய்ததாக எழுந்த புகாரின்பேரில், அவரை போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

கோயில் பெயரில் நிதி... மோசடிப் புகார்; கைது - குறிவைக்கப்படுகிறாரா கார்த்திக் கோபிநாத்?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளராக அறியப்படும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத், கோயில் பெயரில் பணம் வசூல் செய்ததாக எழுந்த புகாரின்பேரில், அவரை போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

Published:Updated:
கார்த்திக் கோபிநாத் ( ட்விட்டர் )

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் உள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் கோயில் மிகவும் அவலநிலையில் உள்ளதாகக் கூறி, யூடியூபர் கார்த்திக் கோபிநாத் தனியார் நிதிச் சேர்க்கை வலைதளத்தில் கடந்த ஆண்டு விளம்பரப்படுத்தியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட சில தலைவர்களும் ஆதரவு அளித்து, விளம்பரத்தைப் பகிர்ந்தனர். இதன் மூலம் பல லட்சங்கள் நிதி திரண்டதாகத் தகவல் வெளியானது.

சிறுவாச்சூர்
சிறுவாச்சூர்

அதேபோல, திரண்ட நிதியை இன்னும் செலவு செய்யவில்லை, முறைகேடு நடந்திருப்பதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு, "என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதரமும் இல்லை. தற்போது வரை ரூ.31 லட்சம் நிதி திரண்டுள்ளது. அவை அனைத்துக்கும் முறையான கணக்கு உள்ளது. கோயிலுக்காக நிதி முறையாகச் செலவு செய்யப்படும்" என்று யூடியூப் சேனலில் மே 3-ம் தேதி கார்த்திக் பேட்டியளித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகவே, "இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தனிநபர்கள் யாரும் வசூல் செய்ய முடியாது. சிறுவாச்சூர் கோயில் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை கேட்டிருக்கிறார்" என்று துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேகர் பாபு
சேகர் பாபு

இந்நிலையில், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் கார்த்திக் கோபிநாத்திடம் இன்று (30-ம் தேதி) காலை முதல் ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் மற்றும் உதவி ஆணையர் கந்தகுமார் ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக புகார் அளித்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ்ஷிடம் விசாரித்தோம்.

``அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் பெயரில் நிதி வசூல் செய்வதே தவறு. அதேபோல, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிதி வசூல் செய்யப்பட்டது. இதையடுத்து, எவ்வளவு நிதி, யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற எந்த விவரமும் இல்லாமல், கோயிலுக்கு நிதி கொடுக்க விரும்புவதாக அறநிலையத்துறைக்கு டிசம்பர் மாதம் கார்த்திக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், தற்போது வரை அந்தக் கோயிலில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. அந்த நிதி என்ன ஆனது என்றும் தெரியவில்லை. இது குறித்து டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குப் புகார் அளித்தேன். அதன்படி, வசூலான பணம் ஆவடி வங்கிக் கணக்குக்குச் சென்றிருப்பதால், அங்கு புகார் அளிக்க, சென்னை போலீஸ் கமிஷனர் பரிந்துரைத்தார். அதன்படி, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவடியில் புகார் அளித்தேன்" என்றார் விவரமாக.

பியூஸ் மனுஷ்
பியூஸ் மனுஷ்

இந்து சமய அறநிலையத்துறை வட்டாரத்தில் கேட்டபோது, "அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலைச் சீரமைக்க, முறையாக அனுமதி வாங்க வேண்டும். ஆனால், கார்த்திக் எந்த அனுமதியும் பெறாமல் நிதி திரட்டியுள்ளார். ஆனால், தனது சொந்தச் செலவில் சிலைகளை சீரமைத்துத் தருவதாக விண்ணப்பம் வழங்கினார். எனவே, மதுர காளியம்மன் கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கார்த்திக் கோபிநாத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், கோயில் சீரமைப்பு செய்வதாகக் கூறி திரட்டப்பட்ட நிதியை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். நிதியை ஒப்படைக்கவில்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தோம். ஆனால், முறையாக பதில் எதுவும் வராததால், போலீஸில் புகார் அளித்தோம்” என்றனர்.

கார்த்திக் கோபிநாத் கைது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''மத்திய குற்றப் பிரிவில் மதுர காளியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் அரவிந்தன் அளித்துள்ள புகாரில், 'தான் மேற்கண்ட கோயிலில் செயல் அலுவலராகப் பணிபுரிவதாகவும், சென்னை முத்தாபுதுப்பேட் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் கோபிநாத் என்பவர் 'இளையபாரதம்' என்ற பெயரில் யூடியூப் வலைதளத்தில் 'Milaap fund raiser' என்ற தளம் மூலமாக கோயிலில் பழுதடைந்துள்ள சிலைகளைப் புனரமைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறையிடம் முறையான அனுமதியைப் பெறாமல், பொதுமக்களை ஏமாற்றி, நிதி திரட்டி தனது சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்' என்று கொடுத்த புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு குற்ற எண்: 4/2022 U/s 406, 420 IPC and 66 (D) OF I.T Act ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டது. மேற்கண்ட வழக்கில் கார்த்திக் கோபிநாத் என்பவர் கைதுசெய்யப்பட்டு அம்பத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் கோபிநாத்
கார்த்திக் கோபிநாத்

ஆவடி, மிட்டனமல்லியில் உள்ள கார்த்திக் கோபிநாத்தின் அலுவலகத்தில்வைத்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். அதன்படி, காவல் ஆணையர் அலுவலகத்தில்வைத்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

அண்ணாமலை எதிர்ப்பு

கைது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டரில், "திமுக-வினர் கார்த்திக் கோபிநாத் மீது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது கண்டனத்துக்குரியது. தேசியவாதியான கார்த்திக் கோபிநாத்துக்கு தமிழ்நாடு பா.ஜ.க துணை நிற்கும். அவரின் அப்பாவிடம் அவருக்குத் தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

தற்போது கைதுசெய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் இருக்கும் கார்த்திக் கோபிநாத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்தபோது, அவரை கார்த்திக் சந்தித்துப் பேச அண்ணாமலை ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலையின் ஆதரவாளர் என்பதால் கார்த்திக் குறிவைக்கப்படுவதாக பா.ஜ.க-வினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர்.