Published:Updated:

`நடராசனின் கோடிக்கணக்கான சொத்துகள் எங்கே?!'- தஞ்சை உதவியாளரை நெருக்கும் மன்னார்குடி உறவுகள்

நடராசனின் உதவியாளர் பிரபு
நடராசனின் உதவியாளர் பிரபு

சசிகலா தஞ்சையில் தங்கியிருக்கும்போது, பிரபு உள்ளிட்டவர்களை அழைத்து, `அத்தானை இவர்கள்தான் கவனித்துவந்தனர்' என அறிமுகம் செய்துவைத்தார் திவாகரன்.

சசிகலாவின் கணவர் ம.நடராசனின் உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர் பிரபு. இவரை வருமான வரித்துறையினர் சென்னையில் கைதுசெய்து விசாரித்துவருவதாக நடராஜனின் சொந்த ஊரான விளார் மற்றும் தஞ்சாவூரில் சில தினங்களாக தகவல்கள் பரவிவருகிறது.

ம.நடராசன்
ம.நடராசன்

`சசிகலாவின் கணவர் நடராசன், ஒரு காலத்தில் தமிழக அரசியலில் திரைமறைவில் பல மாயாஜாலங்களைப் புரிந்த வித்தைக்காரர்' என அவரைப் பாராட்டிப் பலரும் பேசியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரையில், அ.தி.மு.க-வின் அதிகார வளையத்துக்குள் அவரை நுழையவிடவில்லை. சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்களையும் ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார்.

இந்நிலையில், உடல்நிலை குறைபாட்டால் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் நடராசன் காலமானார். இதையடுத்து, இறுதிச் சடங்குக்காக 10 நாள்கள் பரோலில் வந்த சசிகலா, அதை முடித்துவிட்டு அருளானந்த நகர் அருகில் உள்ள பிரமாண்ட இல்லத்தில் தங்கியிருந்தார். நடராசன் உயிருடன் இருக்கும்போது, சென்னையில் கார்த்தி என்பவரும் தஞ்சாவூர் வந்தால் பிரபு என்பவரும் அவருக்கு உதவியாளர்களாக இருந்தனர்.

இதில், நடராசனுக்கு சொந்தமான தஞ்சையில் உள்ள அருளானந்த நகர் இல்லம், தமிழரசி மண்டபம் ஆகியவற்றை கவனித்துவந்தார் பிரபு. அத்துடன், நடராசன் தஞ்சை வந்தால் இவர்தான் ஆல் இன் ஆளாக இருந்து அவருக்கு வேண்டியதை செய்துகொடுப்பார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கவனிப்பார். நடராசன் நடத்தும் பொங்கல் விழா, தமிழக அரசியலில் வெகு பிரபலம். அந்த விழாவில் நடராசன் மைக் பிடித்ததுமே அரசியல் தொடர்பான கருத்துகளைப் பேசுவார். இதனால் அவருக்குப் பல சிக்கல்கள் ஏற்பட்டதும் உண்டு.

நடராசன் மரணம்
நடராசன் மரணம்

மூன்று நாள்கள் நடைபெறும் பொங்கல் விழாவில், வருகைதரும் வி.ஐ.பி-க்களை அழைப்பதில் தொடங்கி, கலை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் தங்குவது வரையில் அனைத்து ஏற்பாடுகளையும் உதவியாளர் பிரபு செய்து கொடுப்பார். இந்த விழாவுக்காக முன்கூட்டியே பிரபுவிடம் பணத்தைக் கொடுத்து விடுவார் நடராசன். நிகழ்ச்சி முடிந்த பிறகு வரவு-செலவு கணக்குகளைக் கச்சிதமாகக் கொடுப்பதுடன், மீதி பணத்தையும் கொடுத்துவிடுவார். இதனால் நடராசனின் நம்பிக்கைக்குரியவர்களில் முக்கிய இடம் பிடித்தார். `நடராசன் கண் அசைவில் சொல்லும் வேலைகளைக் கச்சிதமாக செய்துமுடிப்பதில் வல்லவர்' என்கின்றனர் பிரபுவை அறிந்தவர்கள்.

இந்த நிலையில், `நடராசனின் கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துகள் எந்தெந்த இடங்களில் உள்ளன என பிரபுவுக்கு நன்றாகத் தெரியும்' என அறிந்து, நடராசனின் மறைவுக்குப் பிறகு அவருடைய சகோதரர்கள் இவருக்கு தொல்லைகொடுத்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது, நடராசனின் சொத்துகள் சிலவற்றை இவர் வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறையினர் பிரபுவைக் கைதுசெய்து விசாரித்து வருவதாகவும் தஞ்சாவூர் மற்றும் நடராசனின் சொந்த ஊரான விளார் முழுக்க ஒரே பேச்சாக இருக்கிறது.

நடராசன் இறுதி சடங்கில்
நடராசன் இறுதி சடங்கில்

இதுகுறித்து பிரபுவுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம், ``நடராசன், தன் சொந்தங்களையே பல சமயங்களில் நம்ப மாட்டார். ஆனால், பிரபுவைப் பெரிதும் நம்புவார். அந்த அளவுக்கு அவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கினார். நடராசன் எந்த நாட்டில் இருக்கிறார், தஞ்சாவூர் எப்போது வருகிறார் என அவரின் சகோதரர்களுக்கே தெரியாது. ஆனால், பிரபுவுக்கு நன்றாகத் தெரியும். அத்துடன், நடராசனுக்கும் அவரின் சொந்தங்களுக்கும் பாலமாக இருந்துவந்தார். பல வாய்ப்புகள் கிடைத்தும் நடராசனிடம் எந்த உதவியையும் கேட்காதவர் இவர் மட்டுமே.

Vikatan

நடராசன் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர், அவரின் திடீர் மறைவால் சொந்தங்களைப் போலவே கலங்கித் துடித்தார். இறுதிச் சடங்குக்கு வந்த சசிகலா, தஞ்சையில் தங்கியிருக்கும்போது பிரபு உள்ளிட்டவர்களை அழைத்து, `அத்தானை இவர்கள்தான் கவனித்து வந்தனர்’ என அறிமுகம் செய்துவைத்தார் திவாகரன். அப்போது சசிகலா, `ரொம்ப நன்றிப்பா..' எனக் கண்கலங்கக் கூறிவிட்டு, ` அவர் இல்லையே என நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்ன வேண்டும் என்றாலும் என்னைக் கேளுங்கள்' எனத் தேற்றினார்.

உதவியாளர் பிரபு
உதவியாளர் பிரபு

பரோல் முடிந்து சசிகலா சிறை செல்லும்போது, பிரபு உள்ளிட்டவர்கள் வீட்டின் ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தனர். இதைக் கவனித்த இளவரசி மகன் விவேக், ` நீங்க ஏன் ஓரமா நிக்கறீங்க... இந்த வீட்டில் நீங்க எப்படியிருந்தீங்க... வாங்க உள்ளே' எனக் கூட்டிக்கொண்டு போய் சசிகலா முன் நிறுத்தினார். அத்துடன், சில மாதங்களுக்கு முன் நடந்த விவேக் மனைவியின் வளைகாப்பு நிகழ்வின்போதும், 'தஞ்சாவூரில் யார் யாருக்கு பிரபு அழைப்பிதழ் கொடுக்கச் சொல்கிறாரோ அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்' என விவேக் தனது உதவியாளரை அனுப்பிவைத்து கொடுக்க வைத்தார்.

சசிகலா குடும்பத்தினர் பிரபுவிடம் காட்டும் நெருக்கமும் தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொண்டிருப்பதும் நடராசன் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் நடராசனின் சில சொத்துகள் பிரபுவிடம் இருக்கிறது என்றும் அவரை வருமான வரித்துறையினர் கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள் என்றும் பல்வேறு தகவல்களைப் பரப்பி வருகின்றனர். `விசுவாசமாக இருந்ததற்கு இவர்கள் காட்டும் நன்றி இதுதானா?' எனத் தனது நண்பர்களிடம் மனம் கலங்கிப் புலம்பியிருக்கிறார். மேலும், இதுபோன்ற செய்திகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் பிரபு” என்றனர்.

நடராசன்
நடராசன்

பிரபுவிடம் பேசினோம், ``நான் சென்னையில் இருக்கிறேன். என்னை வருமான வரித்துறையினர் கைது செய்யவில்லை. அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை” என்றதோடு முடித்துக்கொண்டார்.

நடராசனின் சொந்தங்கள் சிலரோ, ``பிரபுவுக்கு யாரும் எந்தத் தொல்லையும் கொடுப்பதில்லை. நடராசன் இறந்த பிறகு, அவர் அவருடைய வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர்குறித்து பரவும் தகவலுக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். மற்றவர்களைக் காரணம் கூறக்கூடாது” என்கின்றனர் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு