Published:Updated:

தமிழ்நாடு வருகிறாரா நித்தியானந்தா? - பரபர அப்டேட்ஸ்!

நித்தியானந்தா

பல்வேறு குற்றச்சாட்டுகளால் வெளிநாடு தீவு ஒன்றில் அடைக்கலமான சாமியார் நித்தியானந்தா, தமிழ்நாடு திரும்பவுள்ளார் என்கிற தகவல் அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு வருகிறாரா நித்தியானந்தா? - பரபர அப்டேட்ஸ்!

பல்வேறு குற்றச்சாட்டுகளால் வெளிநாடு தீவு ஒன்றில் அடைக்கலமான சாமியார் நித்தியானந்தா, தமிழ்நாடு திரும்பவுள்ளார் என்கிற தகவல் அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நித்தியானந்தா

சாமியார் நித்தியானந்தாமீது குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல்வேறு போலீஸ் புகார்கள் பதிவானதால், கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக 2019-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். இதைத் தொடர்ந்து, அவர் தென் பசுபிக் பெருங்கடலிலுள்ள தீவு ஒன்றில் அடைக்கலம் புகுந்ததாகவும், அங்கிருந்தபடியே சமூக வலைதளங்கள் மூலமாக பக்தி வகுப்புகளை நடத்துவதாகவும் கூறப்பட்டது. தான் இந்தியாவைவிட்டு வெளியேறியதை உறுதிப்படுத்தும்விதமாக, 'கைலாசா என்கிற தேசத்தைக் கட்டமைக்கிறேன். விருப்பப்படுபவர்கள் என் தேசத்துக்கு வரலாம்' என அறிவிப்பும் வெளியிட்டார் நித்தி. ஐ.நா சபையில் கைலாசா சார்பில், 'இந்தியாவில் இந்து மடாதிபதிகளுக்கு பாதுகாப்பு இல்லை' என ரிப்போர்ட்டும் அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில்தான், நித்தியானந்தாவின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும்விதமாக, தன்னுடைய முகநூல் பக்கத்தில் விரிவான அறிக்கையை வெளியிட்ட நித்தி, "பிரபஞ்ச சக்தியோடு என் ஆத்மாவைக் கலக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். எனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்றே மருத்துவர்களுக்குத் தெரியவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். ஆனால், நான் சாகவில்லை" என்று தன்னிலை விளக்கம் அளித்தார். நித்தியின் இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

நித்தியானந்தா
நித்தியானந்தா

இதைத் தொடர்ந்து, நித்தியானந்தா குணமாக வேண்டி திருவண்ணாமலையிலுள்ள அருணகிரி யோகேஸ்வரர் சமாதியில் அவரது ஆதரவாளர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். முகநூலில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு, உடல்நிலை பற்றிய அப்டேட்ஸ்களை அவ்வப்போது நித்தியானந்தாவும் கூறிவந்தார். இதற்கிடையே, "கரீபியத் தீவு ஒன்றின் வங்கியில் நித்தியானந்தா சேமித்துவைத்திருந்த தங்கமெல்லாம் கொள்ளைபோய்விட்டன. பணத்தைப் பறிகொடுத்த பரிதவிப்பில்தான், உடல்சோர்ந்துவிட்டார் நித்தியானந்தா. மீண்டும் பணத்தைத் திரட்டும் முயற்சியாகவே, தன் மீது அனுதாபம் ஏற்படுத்துவதற்கு நாடகம் ஆடுகிறார்" என நித்திக்கு எதிரானவர்கள் பேச ஆரம்பித்தனர். இந்தச் சூழலில்தான், நித்தியானந்தா தமிழ்நாடு திரும்பவிருப்பதாக நமக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து நித்தியானந்தாவுக்கு மிக நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம். "நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை அளித்தபோது, தன் உடல் உறுப்புகளை அகற்றுவதற்கு அவர் மறுத்துவிட்டார். 'திருவண்ணாமலையில்தான் என் உயிர் பிரிய வேண்டும்' எனத் தன் விருப்பத்தை நித்தியானந்தா திட்டவட்டமாகக் கூறியதால், அதற்கான முயற்சியில் தீவிரமாகக் களமிறங்கினோம். பா.ஜ.க-விலுள்ள சில முக்கியத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

நித்தியானந்தா
நித்தியானந்தா

`நித்தியானந்தா மீது பெரிய வழக்குகளெல்லாம் இல்லை. சட்டப்படி அந்த வழக்குகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார். தமிழ்நாட்டில் ஆன்மிகத்தை பரப்ப வேண்டுமென்பதுதான் அவரது ஒரே எண்ணம். ஆதீனப் பல்லக்கில் ஆரம்பித்து, இந்து மதச் சடங்குகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுவது வரை பல்வேறு பிரச்னைகள் தமிழ்நாட்டில் நிலவுகின்றன. அவற்றையெல்லாம் நித்தியானந்தா தன்னுடைய வாதத் திறமையால் சரிசெய்ய முடியும். அமைதியாக ஆன்மிகப் பணி செய்ய விரும்புகிறோம். இந்தியாவுக்குள் நித்தியானந்தா நுழைவதற்கு அனுமதி தாருங்கள்' என்றோம். மத்திய பா.ஜ.க-விடமிருந்து அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். விரைவில் நித்தியானந்தா தமிழ்நாடு திரும்புவார்" என நம்பிக்கையுடன் பேசினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே, நித்தியானந்தாவின் உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுவதெல்லாம், வழக்கிலிருந்து தப்பிப்பதற்கான யுக்திதான் என்கிறது அவருக்கு எதிரான தரப்பு. நித்தியானந்தாவின் ஆசிரமத்திலிருந்து வெளியேறிய அவரது முன்னாள் சீடர்கள் சிலரிடம் பேசினோம். "பா.ஜ.க பிரமுகர்களுடன் நித்தியானந்தா தரப்பு சமரசம் பேசுவது நிஜம். அவர் இந்தியாவிலிருந்து தப்பி ஓடுவதற்கு மூல காரணமே, இங்குள்ள சில சாமியார்களுடன் ஏற்பட்ட தொழில் போட்டிதான். 'அந்தப் போட்டி இனிமேல் இருக்காது. நாங்கள் ஆன்மிகம் மட்டும் பரப்புகிறோம். அதற்கு உரிய காணிக்கை தரவும் தயார்' என டீல் பேசுகிறது நித்தி தரப்பு. நித்தியானந்தா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளில் 'சரண்டர் பெயில்' பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'நித்திக்கு உடல்நிலை சரியில்லை. அதேநேரம் வழக்குகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார். அவர் சரண்டராகி, உடனே பெயிலில் விடுவிப்பதற்கு வேண்டியதைச் செய்ய வேண்டும்' என நீதிமன்றங்களை நாடவிருக்கிறார்கள். நீதிமன்றங்களை நம்ப வைப்பதற்காகத்தான், 'நித்திக்கு உடல்நிலை சரியில்லை; கோயிலில் விளக்கேற்றுங்கள்' என அவரது ஆதரவாளர்கள் மூலமாகத் தகவல் பரப்பப்படுகிறது" என்றனர்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

எது எப்படியோ... நித்தியானந்தா தமிழ்நாடு திரும்பவிருப்பதாகப் பரவும் தகவல் சமூக வலைதளங்களில் அலையடிக்க ஆரம்பித்திருக்கிறது. அவர் ஆசிரம விவகாரங்களை மேற்பார்வையிடுவதற்கு தனி கமிட்டியும் தயாராவதாகக் கூறப்படுகிறது. ஜூன் 14-ம் தேதி பெளர்ணமி வரவிருக்கிறது. அதற்குள்ளாக திருவண்ணாமலைக்கு நித்தியானந்தா வந்து சேர்வார் என்பதே அவரது தரப்பு ஆதரவாளர்களின் உத்தரவாதமாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism