Published:Updated:

பழனிசாமிக்குப் பெருகும் ஆதரவு; இருமுனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறாரா பன்னீர்?

எடப்பாடி, பன்னீர்

மாவட்டச் செயலாளர்கள் முதல் தலைமைக் கழக நிர்வாகிகள் வரை கட்சியின் மொத்த ஆதரவையும் பழனிசாமி பெற்றிருக்கும் நிலையில், வக்கீல் தரப்பை மட்டுமே நம்பி, காய்களை நகர்த்திவருகிறார் பன்னீர்...

பழனிசாமிக்குப் பெருகும் ஆதரவு; இருமுனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறாரா பன்னீர்?

மாவட்டச் செயலாளர்கள் முதல் தலைமைக் கழக நிர்வாகிகள் வரை கட்சியின் மொத்த ஆதரவையும் பழனிசாமி பெற்றிருக்கும் நிலையில், வக்கீல் தரப்பை மட்டுமே நம்பி, காய்களை நகர்த்திவருகிறார் பன்னீர்...

Published:Updated:
எடப்பாடி, பன்னீர்

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி மூன்று துண்டாக உடைந்தது. பழனிசாமி, பன்னீர் அணிகள் இணைந்தாலும், ஆதரவாளர்கள் மனங்கள் இணையாமலேயே இருந்தன. இந்த நிலையில்தான், ஒற்றைத் தலைமை என்ற கோஷம் பூதாகரமாகி, மிகப்பெரிய அளவில் பிளவும், வார்த்தைப் போர்களும் நடந்துகொண்டிருக்கின்றன. கட்சியின் அனைத்து மட்டங்களுக்குமான தேர்தலில் தேர்வான நிர்வாகிகளை அங்கீகரிக்கும் பொதுக்குழுவை ஜூன் 23-ல் நடத்த அ.தி.மு.க தலைமை முடிவுசெய்தது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அதற்கான தீர்மானங்கள் தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்துப் பேசப்பட்ட விவகாரம் வெடித்தது. இந்த விவகாரம் போஸ்டர் போரில் தொடங்கி, நீதிமன்றத்தில் முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேல் நடைபெற்ற விவகாரத்தில், அ.தி.மு.க-வுக்கு எடப்பாடி ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பெருவாரியான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வமே வெளிநடப்பு செய்யும் அளவுக்குப் பிரச்னை தீவிரமடைந்தது. "அம்மாவால் அடையாளம் காணப்பட்டவன் நான், இதைவிட என்ன தகுதி வேண்டும்" என்று பன்னீர் தொடர்ந்து கூறிவந்தாலும், கட்சியின் நிர்வாகிகள் அனைவரையும் தன் பக்கம் இழுக்க `லட்டுகளை’ எடப்பாடி தொடர்ந்து வீசிவருகிறார்.

அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி
அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி

எடப்பாடிக்கு ஆதரவு எப்படி?

அ.தி.மு.க-வில் அமைப்புரீதியாக 75 மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் 69 மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார்கள். 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 69 பேரும், 2,400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதற்காக வைட்டமின்கள் செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்படியிருந்தும், பன்னீர் தைரியமாக எடப்பாடித் தரப்பை எதிர்ப்பதற்கு, அவரது சமூகப் பின்னணியும், அவரிடமிருக்கும் வக்கீல் அணியும்தான் காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இது குறித்து அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``அதிமுக-வின் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் எனப் பெரும் படையை எடப்பாடி வைத்திருக்கிறார். இருப்பினும், பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று பன்னீர் கோர்ட்டுக்குச் சென்று வெற்றிபெற்றிருக்கிறார். அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் பன்னீர்தான் வைத்திருக்கிறார். சின்னத்தைப் பன்னீரிடமிருந்து பறிக்க, எடப்பாடி தரப்பு வேலையைத் தொடங்கிவிட்டது. இதற்காக வெளியிலிருந்து பல லட்சங்கள் செலவு செய்து வக்கீல்களை நியமிக்க எடப்பாடி முடிவு செய்திருக்கிறாராம்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

அதேபோல, பன்னீரின் சமூகம் அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய வாக்குவங்கியாக இருக்கிறது. அதையும் பறிக்க, இரண்டாம் கட்ட தலைவர்களான ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் சீனிவாசன், தச்சை ராஜா, செந்தில்நாதன், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், காமராஜ் எல்லோரையும் பன்னீருக்கு எதிராகப் பேச அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம். இந்த இருமுனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பன்னீர் தரப்பு சற்றுத் தடுமாறிவருகிறது" என்றனர்.

ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழுவுக்கு எடப்பாடி நாள் குறித்திருக்கும் நிலையில், அதைத் தடுக்க பன்னீர் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.