Published:Updated:

திருச்சிற்றம்பலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: மூட்டைக்கு ரூ.2 கமிஷன் கேட்ட திமுக நிர்வாகி?!

திமுக நிர்வாகி இளங்கோவன்
திமுக நிர்வாகி இளங்கோவன்

நெல் கொள்முதல் நிலையங்களில் அதன் ஊழியர்கள் மூட்டை ஒன்றுக்கு ரூ 40 லஞ்சம் வாங்குவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் திமுக நிர்வாகி மூட்டைக்கு 2 ரூபாய் கமிஷன் கேட்டுள்ளார்.

பேராவூரணி அருகே திமுக நிர்வாகி ஒருவர் தன் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் ஒன்றில் உள்ள ஊழியர்களிடம் தனக்கு நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ 2 கமிஷன் தர வேண்டும் என கேட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். தி.மு.கவில் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளராக இருக்கிறார். இவர் திருச்சிற்றம்பலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டை ஒன்றுக்கு ரூ 2 கமிஷன் கொடுக்க வேண்டும் எனக் கேட்டதாகவும், முதல் கட்டமாக அவருக்கு ரூ 5,000 கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் பேசினோம், " தி.மு.கவில் நிர்வாகியாக இருக்கும் இளங்கோவன் தன் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அவர் போக்கே மாறிவிட்டது. தொண்டரணியில் உள்ள மணிவண்ணன் உள்ளிட்ட சில ஆதரவாளர்களைத் தனக்கென வைத்துக்கொண்டு அவர்கள் மூலமாக அரசு தொடர்பான பணிகள் எது நடந்தாலும் அங்கு சென்று கமிஷன் கேட்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

நெல் மூட்டைகள்
நெல் மூட்டைகள்

தொடக்கத்தில் டாஸ்மாக் கடைக்கு சென்றவர்கள் அதன் ஊழியர்களிடம் நாங்கதான் பார் நடத்த அனுமதி வாங்க இருக்கிறோம் நீங்க எங்களுக்கு கமிஷன் தர வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அவர்கள் தர மறுத்து பிரச்னை செய்த நிலையில் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். இந்நிலையில் பம்ப் செட்டை பயன்படுத்தி பயிர் செய்திருந்த கோடை நெல் மற்றும் முன்ப்பட்ட குறுவைக்கான அறுவடை பணிகள் நடைபெற்றன. அந்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. திருச்சிற்றம்பலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 700 நெல் மூட்டைகள் வரை கொள் முதல் செய்யப்படும்.

இந்நிலையில் அந்த கொள்முதல் நிலையத்துக்கு சென்ற இளங்கோவன் தரப்பினர் தி.மு.க தலைமைக்கு தர வேண்டும் எனக் கூறி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டை ஒன்றுக்கு கமிஷனாக எங்களுக்கு ரூ 2 தந்து விட வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் முதலில் தர முடியாது எனக் கூறியுள்ளனர். பின்னர் யாரிடமும் இதனைத் தெரிவிக்காமல் தங்கள் வேலைக்கு எதாவது பிரச்னை வரும் என்ற எண்ணத்தில் பயந்தவர்கள் நம் கையிலிருந்து தர வேண்டாம் நாம் கொடுக்கும் பணத்தை விவசாயிகளிடமே வசூல் செய்துவிடலாம் என முடிவுசெய்து முதல் கட்டமாக இளங்கோவனிடம் ரூ 5,000 பணம் கொடுத்துள்ளனர். பின்னர் ரூ 5,000 தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் விவசாயிகளுக்குத் தெரியவர சர்ச்சை எழுந்தது. ஏற்கெனவே நெல் கொள் முதல் நிலையங்களில் அதன் ஊழியர்கள் மூட்டை ஒன்றுக்கு ரூ 40 லஞ்சம் வாங்குவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் இளங்கோவன் போன்ற நிர்வாகிகள் கூடுதலாக பணம் கேட்டால் அவை விவசாயிகள் தலையில் தான் விடியும் இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இளங்கோவன் உள்ளிட்டவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். இது குறித்து இளங்கோவனிடம் பேசினோம், " நான் நேரடி கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ 2 கேட்கவில்லை.ரூ 5,000 பணம் வாங்கியதாக சொல்வதும் பொய். என் வளர்ச்சியைப் பொறுக்காத சிலர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இது போன்ற தவறான தகவலைப் பரப்புகின்றனர் " என்றார்.

அடுத்த கட்டுரைக்கு