Published:Updated:

கன்னியாகுமரி: ` பா.ஜ.க போஸ்டர்களில் மிஸ் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்?!'

பொன்னார் புகைப்படம் புறக்கணிக்கப்பட்ட போஸ்டர்
பொன்னார் புகைப்படம் புறக்கணிக்கப்பட்ட போஸ்டர்

பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படம் இல்லாமல் ஒரு சிறிய பிட் நோட்டீஸ் கூட வெளியாகாத நிலை கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 27 ஆண்டுகளாக இருந்தது. ஆனால், இப்போது...

கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க-வை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தன் கண்ணசைவில் வைத்திருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். 1993-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவர் ஆனதில் இருந்து 2021 சட்டசபை தேர்தல் வரை கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க-வில் சிறு நிகழ்வாக இருந்தாலும் பொன்.ராதாகிருஷ்ணனின் கவனத்துக்கு வந்துதான் செல்லும். கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவர், இருமுறை மாநில தலைவர், இரண்டு முறை மத்திய இணை அமைச்சர் என பவர்புல் பதவிகளை வகித்தவர் பொன்.ராதாகிருஷ்ணன். 2021 சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலும் நடந்தது. கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பொன்.ராதாகிருஷ்ணனை அதன் பிறகு கன்னியாகுமரியில் காண்பது அரிதாகிவிட்டது. மத்திய அமைச்சர் பதவி அல்லது கவர்னர் பதவி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் எந்த பதவியும் அவருக்கு வழங்கப்படவில்லை. அவர் டெல்லியில் கட்சி நிர்வாகிகள் மீட்டிங்கில் கலந்துகொண்டார். அதன் பிறகு சென்னையில் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார், விரைவில் கன்னியாகுமரி மாவட்டம் வருவார் என கடந்த மாதமே நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் அவர் வந்தபாடில்லை.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் சிலரும், நாகர்கோவில் மாநகர 29-வது வார்டு பா.ஜ.க சார்பிலும் மத்திய அமைச்சராக பொறுப்பு ஏற்ற எல்.முருகன் மற்றும் மாநில பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து தனித்தனியாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில் பிரதமர் மோடி, அமித்ஷா, எல்.முருகன், அண்ணாமலை, எம்.எல்.ஏ-க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி ஆகியோரது புகைப்படங்கள் உள்ளன. ஆனால், முன்னாள் மத்திய அமைச்ச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படம் இல்லாமல் ஒரு சிறிய பிட் நோட்டீஸ் கூட வெளியாகாத நிலை கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 27 ஆண்டுகளாக இருந்தது. ஆனால், இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத நிலையில் அவரது புகைப்படத்தை போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளில் வைக்க வேண்டாம் என மேல்மட்ட நிர்வாகிகள் சிலர் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

பொன்னார் புகைப்படம் புறக்கணிக்கப்பட்ட போஸ்டர்
பொன்னார் புகைப்படம் புறக்கணிக்கப்பட்ட போஸ்டர்

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், "பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படத்தை புறக்கணிக்கச் சொல்லி யாரும் கூறவில்லை. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இப்போது பொறுப்புக்கள் எதுவும் இல்லை என்பதால் அவரது புகைப்படத்தை சிலர் தவிர்க்கிறார்கள் என நினைக்கிறோம். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனும், எம்.ஆர்.காந்தியும் பா.ஜ.க-வுக்காக தனிப்பட்ட வாழ்க்கையைத் துறந்தவர்கள். அவர்கள் புகைப்படங்கள் எப்போதும், எல்லா நிகழ்வுகளிலும் இடம்பெறவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். மாவட்ட பா.ஜ.க-வில் சில பிரச்னைகள் உள்ளன. அதை மாநில தலைவர் அண்ணாமலையும், மத்திய அமைச்சர் எல்.முருகனும் சரி செய்ய வேண்டும்" என்றார்.

இதற்குமுன்பும் தேர்தலில் தோல்வியடைந்து பொறுப்புக்கள் இல்லாமல் இருந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு குமரி மாவட்ட பா.ஜ.க-வில் முக்கியத்துவம் இருந்தது. ஆனால் இப்போது வேண்டும் என்றே பா.ஜ.க-வில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு