Published:Updated:

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: கட்சிப் பதவி ராஜினாமா?! ; அமைச்சர் பதவியில் அடுத்த திட்டம் என்ன?!

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
News
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், அதிக ஃபாலோயர்களைக்கொண்ட அக்கவுன்ட்களை, தி.மு.க-வுக்காக விலை கொடுத்து வாங்கியிருந்தார் பி.டி.ஆர். அந்தக் கணக்குகளிலெல்லாம் தி.மு.க-வுக்குச் சாதகமான கருத்துகளைப் பரப்பிவந்தனர்.

2017-ம் ஆண்டு தி.மு.க-வில் ஐடி விங் உருவாக்கப்பட்டது. அதன் முதல் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்ற பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்தான் தற்போது ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் பின்னணி குறித்து அறிவாலய முக்கியப்புள்ளி ஒருவரிடம் பேசினோம். ``அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிபோலவே, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் மூன்றாம் தலைமுறை எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் இருக்கிறார். அ.தி.மு.க-வில் ஐடி விங் தொடங்கப்பட்டு, நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதைப் பார்த்துத்தான் தி.மு.க-விலும் ஐடி விங்கைத் தொடங்கினார்கள்.

ஸ்டாலின் - பி.டி.ஆர்
ஸ்டாலின் - பி.டி.ஆர்

மெத்தப் படித்தவரும், வெளிநாடுகளில் மிகப்பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்தவருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை அதன் மாநிலச் செயலாளராக அமர்த்தி, அண்ணா அறிவாலயத்தில் அவருக்கென தனி அறையும் ஏற்படுத்திக் கொடுத்தார் ஸ்டாலின். தி.மு.க-வின் கொள்கைகள், முந்தைய தி.மு.க அரசின் சாதனைகளை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தும் பொறுப்பு பி.டி.ஆருக்கு வழங்கப்பட்டது. தி.மு.க-வை விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் டிஃபென்ஸ் பணிக்காக மற்றொரு விங்கை ஏற்படுத்தி, அதை ஸ்டாலின் தனது நேரடி கன்ட்ரோலில் வைத்துக்கொண்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடிப்பதற்கு இவ்விரண்டு அணிகளின் செயல்பாடுகளும்கூட காரணிகளாக அமைந்தன. அதன் பரிசாக, தி.மு.க கேபினட்டில் பி.டி.ஆருக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகுதான் ஐடி விங்கில் பி.டி.ஆரின் செயல்பாடுகள் சுணக்கம் கண்டன. அ.தி.மு.க., நாம் தமிழர், பா.ம.க அளவுக்குக்கூட ஆளும் தி.மு.க-வினால் சமூக வலைதளங்களில் கோலோச்ச முடியவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது.

தி.மு.க-அண்ணா அறிவாலயம்
தி.மு.க-அண்ணா அறிவாலயம்

ஒரு யூடியூப் சேனல் விவகாரத்திலிருந்துதான் ஸ்டாலினுக்கும், பி.டி.ஆருக்குமான மோதல் தொடங்கியது என்கிறார்கள். பி.டி.ஆர் மீது இரண்டு வகையான புகார்களை வாசிக்கிறார்கள். ஒன்று, தி.மு.க ஐடி விங்கில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை உறுப்பினர்கள், நிர்வாகிகள் இருக்கிறார்கள்... எங்கிருந்து அவர்கள் எல்லோரும் வேலை செய்கிறார்கள்... என்ன மாதிரியான பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பது போன்ற எந்த டேட்டாவும் அறிவாலயத்தில் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையில் சி.ஐ.டி காலனியில் தனியாக ஓர் அலுவலகம் அமைத்தும், மதுரையில் ஓர் அலுவலகம் அமைத்தும் ஐடி பணிகளை மேற்கொண்டு வந்தார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். மொத்த டேட்டாக்களும் இந்த இரண்டு அலுவலகத்தில்தான் உள்ளன.

மு.க.ஸ்டாலின் -  டாக்டர் மகேந்திரன்
மு.க.ஸ்டாலின் - டாக்டர் மகேந்திரன்

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், அதிக ஃபாலோயர்களைக்கொண்ட அக்கவுன்ட்களை, தி.மு.க-வுக்காக விலை கொடுத்து வாங்கியிருந்தார் பி.டி.ஆர். அந்தக் கணக்குகளிலெல்லாம் தி.மு.க-வுக்குச் சாதகமான, திராவிட சித்தாந்தக் கருத்துகளைப் பரப்பிவந்தனர். கட்சி நிதியில் இது போன்று இன்னும் ஏராளமான ஹேண்டில்களை வாங்கியிருக்கிறார் பி.டி.ஆர். அதற்கான கணக்கு வழக்குகளை முறையாக செட்டில் செய்யவில்லை என்பதுதான் இரண்டாவது குற்றச்சாட்டு.

கொஞ்சம் கொஞ்சமாக பி.டி.ஆரின் நடவடிக்கைகள் தலைமைக்குப் பிடிக்காமல் போகவே, அவருக்கே தெரியாமல் எம்.எம்.அப்துல்லா, அண்ணாநகர் கார்த்தி உள்ளிட்டோரை ஐடி விங்கில் அமர்த்தியது தலைமை. இதன் காரணமாக பி.டி.ஆர் அப்செட் ஆனார். மேலும், அவரை வெறுப்பேற்றும்விதமாக மக்கள் நீதி மய்யத்திலிருந்து வெளியேறி, தி.மு.க-வில் இணைந்த டாக்டர் மகேந்திரனை ஐடி விங் இணைச் செயலாளராக நியமித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் ஸ்டாலின்.

வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்

கட்சிரீதியான சிக்கல் மட்டுமின்றி ஆட்சிரீதியான சிக்கல்களும் ஏற்பட்டன. அ.தி.மு.க அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியைக் கொடுத்தார் முதல்வர். அடுத்து இடைக்கால பட்ஜெட் சுமை ஏற்றப்பட்டது. மற்ற துறைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் நிதி தொடர்பாகவும் பல்வேறு அமைச்சகங்களுடன் பி.டி.ஆருக்கு மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையேதான், `2022-ல் தி.மு.க அரசின் முதல் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பதால், அதற்கான பணிகளில் கவனம் செலுத்துங்கள், கட்சிப் பதவியை விட்டுக்கொடுத்துவிடுங்கள்’ என்றும் பி.டி.ஆருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. விட்டா போதும்... என்பதுபோல மனமுவந்து அவரே ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டார் என்பது தகவல்.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

அடுத்ததாக ஐடி விங் மாநிலச் செயலாளர் பதவிக்கும் கட்சியில் போட்டி ஏற்பட்டது. அண்ணாநகர் கார்த்தி, டாக்டர் மகேந்திரன், டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா எனப் போட்டி கடுமையானது. இறுதியில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு யோகம் அடித்திருக்கிறதாம். டாக்டர் மகேந்திரனுக்கும், பி.டி.ஆருக்கும்கூட ஒத்துப்போகாததால், ஐடி விங் பணிகளை முழு மனதோடு கவனிக்காமல் இருந்தார் மகேந்திரன். தற்போது செயலாளராக ஆகியிருக்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் மகேந்திரனுக்கும் நல்ல பழக்கம் இருப்பதால் இனி முழுமையாகக் களத்தில் இறங்கப்போகிறார் மகேந்திரன்.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யும் பி.டி.ஆர்
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யும் பி.டி.ஆர்

`சரி, கட்சிப் பதவி பறிபோய்விட்டது, அமைச்சர் பதவிக்கு ஏதாவது சிக்கல் இருக்கிறதா?’ என்று சிலர் கேட்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட ஜெயலலிதா பாணியைத்தான் கையில் எடுத்திருக்கிறார். அமைச்சர்கள் இருந்தாலும், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார் ஸ்டாலின். அதனால், பி.டி.ஆரின் மேல் ஸ்டாலின் எதிர்பார்ப்பும் கண்காணிப்பும் அதிகமாக வைத்திருப்பார்.

எனினும், 2022-ன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி முடிந்துவிட்டது. அடுத்ததாக கொரோனா பரவல் சற்று அடங்கியதும் மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான பணிகளில் ஏற்கெனவே பி.டி.ஆர் ஈடுபட்டிருப்பதால், திடுதிப்பென அமைச்சர் பதவியைப் மாற்றும் சூழ்நிலையெல்லாம் தற்போது இல்லை என்பதே தெளிவாகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதியை கேபினட்டில் இணைக்கும் எண்ணம் முதல்வர் குடும்பத்துக்கு உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அப்படி உதயநிதிக்காக கேபினட் விரிவுபடுத்தப்படும்போது சரியாகச் செயல்படாத அமைச்சர்களை நீக்கவும் முடிவெடுத்திருக்கிறார் முதல்வர். நிதியமைச்சராகத் தனது பணிகளைச் சரியாகவே பி.டி.ஆர் செய்துவருவதால் 80 சதவிகிதம் அவருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. அப்படியே பி.டி.ஆரை மாற்றும் எண்ணம் இருந்தாலும், அவருக்கு வேறொரு துறை ஒதுக்கப்படுமே தவிர, ஒட்டுமொத்தமாக கேபினட்டிலிருந்து தூக்கி எறியப்பட வாய்ப்பில்லை என்பதே இதுவரையிலான தகவல். எனினும், எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்!” என்பதோடு முடித்துக்கொண்டார்.