Published:Updated:

Fact Check: `சபரிமலை `அரவணைப் பாயசம்' தயாரிக்கும் இஸ்லாமிய நிறுவனம்' - குற்றச்சாட்டு உண்மையா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சபரிமலை அரவணைப் பாயசம்
சபரிமலை அரவணைப் பாயசம் ( Vikatan Fact Check )

சபரிமலைப் பிரசாதமான அரவணைப் பாயசத்தை `AL ZAHAA' என்ற இஸ்லாமிய நிறுவனம் தயாரிப்பதாக `இந்து மக்கள் கட்சி'யின் சமூக வலைதளப் பக்கத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. உண்மை என்ன?!

சபரிமலை பிரசாதமான அரவணைப் பாயசத்தை இஸ்லாமிய நிறுவனம் ஒன்று தயாரித்துவருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகின்றன. இது குறித்து ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர், ``இது அரவணைப் பாயசம். சபரிமலை சந்நிதானத்தில் மட்டுமே கிடைக்கும் பிரசாதம். கேரளா தேவசம் போர்டு அரவணைப் பாயசம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை இஸ்லாமிய நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டதுபோலத் தெரிகிறது. அரபிக் மொழியில் பெயரிடப்பட்டிருக்கிறது. இது இந்து மதத்துக்கு ஏற்பட்ட அவமானம்'' எனப் பதிவிட்டு `AL ZAHAA SWEETS' என்ற பெயரோடிருக்கும் அரவணைப் பாயச டப்பாவின் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

அரவணைப் பாயசம் குறித்த ஃபேஸ்புக் பதிவு
அரவணைப் பாயசம் குறித்த ஃபேஸ்புக் பதிவு
Screen Shot
Fact Check: `உ.பி பந்தேல்கண்ட் பகுதியில் புதிய அணை' - பாஜக தலைவர்கள் பகிர்ந்த புகைப்படம் உண்மையா?!

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாவதற்குச் சில தினங்களுக்கு முன்னரே, இதே புகைப்படத்தைப் பகிர்ந்து, ``சபரிமலையின் பிரசாதமான அரவணைப் பாயசம் இப்போது இஸ்லாம் மதத்துக்கானது மட்டுமல்ல, ஹலாலும்கூட. அரபிக் மொழியில் பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது'' என்று இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.

‘RSS: Evolution from an Organization to a Movement’ என்ற புத்தகத்தை எழுதிய ரத்தன் ஷர்தாவும், `மிகவும் தொந்தரவை ஏற்படுத்திய தகவல்' என்று சொல்லி இதே புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

உண்மை என்ன?

கேரளா அரசின் இணையதளத்தில், `சபரிமலைப் பிரசாதம்' என்று அரவணைப் பாயசம் உள்ளிட்ட பிரசாதங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதில், `திருவாங்கூர் தேவசம் போர்டு', `அரவணைப் பிரசாதம்' என்று எழுதப்பட்டு, ஐயப்பன் படத்தோடு அரவணைப் பாயசம் அடங்கிய டப்பாவின் படம் இடம்பெற்றிருந்தது. கேரள அரசின் இணையதளத்திலிருந்த படத்திலிருப்பதுதான் சபரிமலைக் கோயிலில் வழங்கப்படும் அரவணைப் பாயசப் பிரசாதம்.

சபரிமலை பிரசாதம்
சபரிமலை பிரசாதம்

மேலும், `AL ZAHAA SWEETS' என்று கூகுளில் தேடிப் பார்க்கையில், அது துபாயில் அமைந்திருக்கும் ஓர் இனிப்புக் கடை என்பது நமக்குத் தெரியவந்தது. இது குறித்து `The Quint' ஆங்கில செய்தித்தளம் AL ZAHAA SWEETS-ன் வியாபார மேலாளரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டிருக்கிறது. அதற்கு, ``நாங்கள் தயாரிக்கும் அரவணைப் பாயசத்துக்கு எந்த மதம், கடவுள், சாதியுடனும் தொடர்பில்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலோ, கேரளாவிலோ இருக்கும் எந்தவொரு நிறுவனத்துடனும் நாங்கள் ஒப்பந்தத்தில் இல்லை'' என்றிருக்கிறார் அந்த மேலாளர். திருவாங்கூர் தேவசம் போர்டின் ஆணையர் பி.எஸ்.பிரகாஷும், ``சமூக வலைதளங்களில் சுற்றிவரும் தகவல்கள் போலியானவை'' என்று மறுத்திருக்கிறார்.

அரவணைப் பாயசம் தயாரிக்கும் பணிகளைக் கோயில் பணியாளர்கள்தான் செய்கிறார்கள். நாங்கள் வெளியிலிருக்கும் எந்தவொரு நிறுவனத்துக்கும் ஒப்பந்தத்துக்கு விடவில்லை.
பி.எஸ்.பிரகாஷ், தேவசம் போர்டு ஆணையர்

இதன் மூலம், `சபரிமலை கோயிலில் விற்கப்படும் அரவணைப் பாயசத்தை இஸ்லாமிய நிறுவனம் தயாரிக்கிறது' என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி போலியானது என்பது உறுதியாகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு