Published:Updated:

உடையும் சசிகலா அணி... கெடு விதித்த ஆதரவாளர்கள்?! - ரகசியக் கூட்டமும், அதன் பின்னணியும்

சசிகலா

சசிகலா வெளிப்படையாகச் செயலாற்றாமல் அமைதி காப்பதால், அவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் கூண்டோடு அவரை நிராகரிக்கத் தயாராகிவிட்டதாகச் செய்திகள் கசிகின்றன.

உடையும் சசிகலா அணி... கெடு விதித்த ஆதரவாளர்கள்?! - ரகசியக் கூட்டமும், அதன் பின்னணியும்

சசிகலா வெளிப்படையாகச் செயலாற்றாமல் அமைதி காப்பதால், அவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் கூண்டோடு அவரை நிராகரிக்கத் தயாராகிவிட்டதாகச் செய்திகள் கசிகின்றன.

Published:Updated:
சசிகலா

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, மீண்டும் அக்கட்சியில் இணைவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். அவரை ஆதரித்த அதிமுக நிர்வாகிகளைக் கட்சித் தலைமை தொடர்ந்து நீக்கிவருகிறது. இந்நிலையில், எவ்வளவு காலம்தான் சசிகலா அமைதியாக இருக்கப்போகிறார்? தனது எதிர்காலத் திட்டம் குறித்து உறுதியான முடிவை சசிகலா அறிவிக்க வேண்டும் என அவருக்கு ஆதரவாகப் பேசி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒரு முடிவை எடுத்துள்ளனர்.

அ.தி.மு.க முன்னாள் கர்நாடக மாநிலச் செயலாளர் பெங்களூரு புகழேந்தி, முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா, ஆவின் வைத்தியநாதன், முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் உள்ளிட்ட சிலர் சென்னை உட்லேண்ட்ஸ் ஓட்டலில் மார்ச் 12-ம் தேதி ரகசிய ஆலோசனைக் கூட்டம் கூட்டினராம். இதுவரை பன்னீர், எடப்பாடியை எதிர்த்துதான் ரகசியக் கூட்டம் நடைபெற்றது. முதன்முறையாக சசிகலாவின் செயல்பாடுகளை எதிர்த்து அவரின் ஆதரவாளர்களாலேயே ரகசியக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து விசாரித்தோம். ``சசிகலாவைச் சந்தித்ததாலும், அவருக்கு ஆதரவு கொடுத்ததாலும் இதுவரை அ.தி.மு.க-விலிருந்து 298 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமான தலைவர்கள் மட்டும் சந்தித்துப் பேசினார்கள். நாங்கள் ஒரு முடிவெடுத்தால் நீக்கப்பட்டவர்கள் எங்களை ஆதரிக்க முன்வருவார்கள். பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி பேரணியாக தமிழகம் வரும்போதே தலைமைக் கழகத்துக்கோ, போயஸ் கார்டனுக்கோ சென்றிருக்க வேண்டும். இல்லையெனில் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்து சூட்டோடு சூடாக நிர்வாகிகளை அரவணைத்திருக்க வேண்டும். ஆனால், எதையும் செய்யாமல் வீட்டில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.

சிறையிலிருந்து திரும்பியபோது...
சிறையிலிருந்து திரும்பியபோது...

எனினும், கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் படுதோல்வி அடைவதால், தலைமையேற்கத் தகுதியானத் தலைமை இல்லை என்பது நிதர்சனம். ஜெயலலிதா இருந்தபோதுகூட சசிகலாதான் மறைமுகத் தலைவராக இருந்ததால், அவரைத் தலைமையேற்க வைக்க அவருக்கு ஆதரவு கொடுக்கிறோம். சென்னையில் ரகசியமாகச் சந்தித்துப் பேசிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசியவர்கள். சமீபத்தில்கூட விழுப்புரம் செரிஃப், திண்டிவனம் சேகர் உள்ளிட்டோர் சந்தித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாகூட சந்தித்தார். சசிகலாவைச் சந்தித்த அனைவரையும் எடப்பாடி தரப்பு, பன்னீரைப் பெரும்பான்மை ஆதரவைக் காட்டி கையொப்பம் வாங்கி நீக்கிக்கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர்கூட சசிகலா தலைமையை ஏற்கத் தயார். அவரும் அவரின் ஆதரவாளர்களுடன் ரகசியக் கூட்டங்களை நடத்திவருகிறார். ஆனால், வெளிப்படையாக சசிகலாவை ஆதரிக்க முடியவில்லை அவரால். ஏனெனில், சசிகலாவை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சியைவிட்டு நீக்கிவிடுகிறார்கள். ’அப்படி நீக்கிவிட்டால் நான் எங்கே செல்வது?’ என்பதுதான் செங்கோட்டையனின் கேள்வி.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

அதே சூழ்நிலையில்தான் நாங்களும் இருக்கிறோம். சுமார் 25 எம்.எல்.ஏ-க்கள் எடப்படி-பன்னீர் அணியைச் சாராமல் நடுநிலை வகிக்கிறார்கள். அவர்களிடம் நாங்கள் பேசிப் பார்த்தோம். கட்சி எம்.எல்.ஏ-க்களில் மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ-க்கள் வெளியேறினால், கட்சித்தாவல் தடைச் சட்டம் பாயாது என்பதால் 25 பேரும் மொத்தமாகப் போட்டி அ.தி.மு.க-வை உருவாக்கத் தயாராகவுள்ளனர். எனினும், அவர்களுக்கு நிதி நெருக்கடி உள்ளதால், பெரிய ஸ்வீட் பாக்ஸ்களை எதிர்பார்க்கிறார்கள். அதேநேரம், ஆளுங்கட்சியின் அனுசரனையையும் கேட்கிறார்கள். அ.தி.மு.க உடைகிறது என்றால், தி.மு.க மறைமுக சப்போர்ட் செய்யும். ஆனால், நிதி என்பது சசிகலாதான் கொடுத்தாக வேண்டும்.

இது பற்றி நாங்கள் சசிகலாவிடம் ஏற்கெனவே சிலமுறை பேசிவிட்டோம். ’பணத்தை என்னால் எடுக்க முடியாது, சொத்துகளையெல்லாம் பிரித்துக்கொடுத்துவிட்டேன். வங்கிகளில் உள்ளவையும் ஃப்ரீஸ் ஆகிக்கிடக்கிறது.’ என்று அவரது தரப்பு வாதத்தை வைக்கிறார் சசிகலா. ஆனால், பணத்தை ரிலீஸ் செய்யாதவரை எம்.எல்.ஏ-க்கள் வெளியேற மாட்டார்கள். கோயில் கோயிலாக சசிகலா செல்வதற்கு பதிலாக மூத்த, சீட் கிடைக்காததாலும், அதிருப்தியிலும் ஒதுங்கியிருக்கும் கட்சி நிர்வாகிகளின் பட்டியலை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்றாலாவது எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும். இதையும் செய்வதில்லை.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

எந்த ஓர் அறிக்கை வெளியிடும்போதும் ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர்’ என்ற பெயரிலேயே வெளியிட்டு, அப்பதவியைக் க்ளெய்ம் செய்கிறார் சசிகலா. இதையொட்டிய வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது. பொதுச்செயலாளரே தான்தான் என்று சொல்லும்போது, நிர்வாகிகளை நியமிப்பதற்கு சசிகலாவுக்கு அதிகாரம் உள்ளது. வழக்கு தீர்ப்பு வெளிவரும் வரை இது சாத்தியம் என்கிறார்கள். அதனால், அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட 300 பேரும் எந்தெந்தப் பொறுப்புகளில் இருந்தனரோ, அதே பொறுப்புகளில் அமர்த்துவதற்கு சசிகலாவின் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை வாய்ப்புகள் உள்ளன. ஒருபக்கம் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு மாற்றாக பேரலலாக நிர்வாகிகளை சசிகலா நியமித்தால் நிச்சயம் ஒருங்கிணைப்பாளர்கள் அச்சப்படுவார்கள். அப்போதுதான் நிலுவையிலிருக்கும் வழக்கை சீக்கிரம் முடிக்கப் பார்ப்பார்கள். இதையும் செய்வதில்லை சசிகலா.

இப்படி எந்த முடிவுமே எடுக்காமல், எந்த மூவ்மென்ட்டுமே இல்லாததால் சசிகலா மீதிருந்த நம்பிக்கையும், ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. இதற்கு ஒரு முடிவுகட்டத் தயாராகிவிட்டோம். ஒன்று, வெளிப்படையாக ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிரான போரை அறிவியுங்கள். இல்லை, மொத்தமாக ஒதுங்கிவிடுங்கள் என்று நேரடியாக சசிகலாவிடம் சென்று கேட்கப்போகிறோம். சசிகலா ஒருவேளை ஒதுங்குவதாகவோ, மழுப்பலாகவோ பதிலளித்தால் அம்மா பேரவை போன்று எதையாவது ஒரு பெயரை வைத்துக்கொண்டு, நீக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். ஒருவேளை எங்களது எண்ணத்துக்கு சசிகலா ஒப்புக்கொண்டால், நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து போராட்டமோ, மாநாடோ போட்டு சசிகலாவுக்கு மேலும் ஆதரவு திரட்டுவோம்.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், மார்ச் 20-ம் தேதி சசிகலா தனது கணவர் எம்.நடராஜனின் நினைவுநாளில் தஞ்சை மாவட்டம், விளாரில் உள்ள அவரது நினைவிடத்துக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து தனது அடுத்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். எடப்பாடியின் சேலம் மாவட்டம் செல்லவும் முடிவு செய்திருக்கிறார். ஆனால், இதற்கு முன்பாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தபோது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சசிகலாவைச் சந்திப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், கடைசி வரை அது வதந்தியாகவே போனது. வெளிப்படையாக எடப்பாடி, பன்னீருக்கு எதிராக தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியை வைத்து ஒரு பேரலல் கட்சியை உருவாக்கவில்லையென்றால் எந்தச் சுற்றுப்பயணமும் வெற்றியே பெறாது” என்று முடித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism