ரகசிய சந்திப்பு... தூதுவிட்டாரா சசிகலா?! - சைலன்ட் மோடு வைத்திலிங்கம்; பரபரப்பில் தஞ்சை அ.தி.மு.க

வைத்திலிங்கம், மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலரிடம், `அ.ம.மு.க-வை இணைக்கவில்லையென்றால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், டெல்டாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்’ எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
சசிகலா கணவர் நடராசனின் அக்கா மகன் ஒருவரை தஞ்சாவூரிலுள்ள சுற்றுலா மாளிகைக்கு ரகசியமாக வரவழைத்து, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலாவின் கணவர் நடராசனின் அக்கா வனரோஜாவின் மகன் தனசேகரன். இவர் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் வசித்துவருகிறார். அ.ம.மு.க-வில் தஞ்சை மாநகர எம்.ஜி.ஆர் மன்றப் பேரவைச் செயலாளராக இருக்கிறார். தனசேகரன் மாரியம்மன் கோயில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்.
தற்போது அவர் மனைவி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. நடராசன் குடும்பத்தில் தனசேகரன் மட்டுமே நேரடி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு செயல்பட்டுவரக்கூடியவர். ஏற்கெனவே நடராசன் குடும்பத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தனசேகரன், அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளரும், ராஜ்யசபா எம்.பி-யுமான வைத்திலிங்கத்தை நேற்று இரவு தஞ்சாவூரிலுள்ள சுற்றுலா மாளிகையில் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து விவரம் அறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம். ``சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா தற்போது சென்னை திரும்பியிருக்கிறார். அப்போது அவருக்கு அ.ம.மு.க தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளப்படுவார். அ.தி.மு.க., அ.ம.மு.க இணைவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது எனப் பரவலாகப் பேசப்பட்டது.

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில அமைச்சர்கள் சசிகலாவுக்கு எதிராகப் பேசிவருகின்றனர். அதேநேரத்தில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் சசிகலா குறித்து எந்தப் பேட்டியும் கொடுப்பதில்லை. குறிப்பாக, தஞ்சாவூரில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வைத்திலிங்கத்திடம் இரண்டு முறை செய்தியாளர்கள் பேட்டி கேட்டதற்கு, `பேட்டி கொடுக்கும் மனநிலையில் நான் இல்லை’ என்று கையெடுத்துக் கும்பிட்டதுடன் `சசிகலா பற்றி நேரம் வரும்போது பேசுவேன்’ என்றும் கூறி நழுவிவிட்டார்.
எப்போதும் சசிகலாவைப் பற்றிக் காரசாரமாகப் பேட்டி கொடுக்கும் வைத்திலிங்கம், தற்போது அமைதியாக இருப்பது தஞ்சை அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பயிருக்கிறது. இந்தநிலையில், நேற்று இரவு சுமார் 9 மணியளவில் சுற்றுலா மாளிகைக்கு அருகிலுள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே தனசேகரன் தன்னுடைய காரில் காத்திருந்தார்.
அப்போது சுற்றுலா மாளிகையின் முதல் பிளாக்கில் வைத்திலிங்கம் இருந்தார். இதையடுத்து வைத்திலிங்கம் தரப்பிலிருந்து தனசேகரனுக்கு போன் வந்திருக்கிறது. பின்னர் தனசேகரனின் கார் சுற்றுலா மாளிக்கைக்குள் சென்றது. இதையடுத்து முதல் பிளாக் வாசலில் கையில் பேப்பர் கட்டுகளுடன் காரிலிருந்து இறங்கிய தனசேகரன் விருட்டென உள்ளே சென்றுவிட்டார்.
வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர்களான பால்வளத் தலைவரும், மாவட்ட மாணவரணிச் செயலாளருமான காந்தி, தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் துரை.வீரணன் ஆகியோர் தனசேகரனை உள்ளே அழைத்துச் சென்றனர். சுமார் பத்து நிமிடங்கள் வரை வைத்திலிங்கமும், தனசேகரனும் அறையில் தனியாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தான் கொண்டு சென்ற பேப்பர் ஃபைலை வைத்திலிங்கத்திடம் கொடுத்திருக்கிறார்.
அதன் பிறகு வெளியே வந்தவரை காந்தி வாசல் வரை வந்து வழியனுப்பிவைத்தார். இந்தத் தகவல் மெல்ல கசிந்த நிலையில் அ.தி.மு.க-வினர் மத்தியில் இது பேசுபொருளாக மாறியது. நடராசன் அப்பா மருதப்பா பெயரில் செயல்படும் அறக்கட்டளை சார்பிலேயே சொத்துக்குவிப்பு வழக்கில் அபாரத் தொகையான ரூ.10 கோடி செலுத்தப்பட்டது.
இதற்கான பணியை மேற்கொண்டது நடராசனின் தம்பி பழனிவேல், ராமச்சந்திரன் ஆகியோர். அதுமட்டுமல்லாமல் இவர்களே சசிகலாவின் அருகிலிருந்து அனைத்தையும் கவனித்துவருகின்றனர். எனவே, தங்கள் அக்கா மகனான தனசேகரன் மூலமாக வைத்தியைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவதற்காகவே இந்தச் சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது.

வைத்திலிங்கம், மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலரிடம், `அ.ம.மு.க-வை இணைக்கவில்லையென்றால், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், டெல்டாவில் வரும் சட்டமன்றத் தேர்தலின் வெற்றியை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். யோசித்துச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். முதல்வரிடமும் இதைத் தெரியப்படுத்துங்க’ எனக் கூறியிருக்கிறார்.
இதைவைத்துப் பார்க்கும்போது அ.ம.மு.க இணைப்பை வைத்திலிங்கம் விரும்புகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. அவரின் முக்கிய ஆதரவாளர்களும் இதைத்தான் பேசிவருகின்றனர். இந்தநிலையில்தான் சசிகலா சார்பிலேயே தனசேகரன் வைத்தியைச் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சசிகலா, தனசேகரன் மூலமாக சில தகவல்களைச் சொல்லி, அவற்றை வைத்திலிங்கம் தரப்பில் கொண்டு சேர்க்கச் சொல்லியிருப்பதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன. என்ன நடக்கிறது எனப் போகப் போகத்தான் தெரியும்” என்றனர் விரிவாக.
இது குறித்து தனசேகரன் தரப்பில் விசாரித்தோம். அவர்களோ, ``மாரியம்மன் கோயில் ஊராட்சி தொடர்பான விஷயத்துக்காகவே வைத்தியைச் சந்தித்தார்” என தெரிவிக்கின்றனர்.
வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம். ``வைத்தி, தனசேகரனைச் சந்தித்ததாக வெளியான தகவல் கிட்டத்தட்ட உண்மைதான். சாதரணமான அந்தச் சந்திப்பு பரபரப்புக்காகப் பெரிதாக்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வைத்திலிங்கம் அவரது சொந்தத் தொகுதியான ஒரத்தநாட்டில் தோல்வியைத் தழுவியதற்கு சசிகலா குடும்பமே காரணம் என நினைக்கிறார். இதை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துக் கூறியே உடனடியாக எம்.பி பதவியும் பெற்றார்.

தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, அவரது அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவர் சந்தித்த சிக்கல்கள் வைத்தியின் மனதில் ஆறாத வடுவாக உள்ளன. எனவே, சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாகவும், இணைப்பு குறித்து அவர் பேசுவதற்கும் வாய்ப்பே இல்லை” எனத் தெரிவித்தனர்.