Published:Updated:

மகாராஷ்டிரா: `பாஜக-வுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியமைப்பதா?’ - முதல்வர் உத்தவ் தாக்கரே காட்டம்

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-வுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சியமைக்குமா என்ற கேள்விக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 30 ஆண்டுகளாக கூட்டணிக் கட்சிகளாக இருந்த சிவசேனா மற்றும் பாஜக இடையே கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விரிசல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு கட்சிகளும் பிரிந்துள்ளன. தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சியமைத்துள்ளது. இதில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், ஆளும் சிவசேனாவுக்கு அடிக்கடி குடைச்சல் கொடுத்துவருகிறது. சரத்பவார் துணையுடன் மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியமைத்துவிடலாம் என்று பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்திவந்தது. ஆனால் அந்தத் திட்டம் வெற்றிபெறவில்லை. எனவே, சிவசேனாவை நேரடியாகக் கூட்டணியில் சேர்க்கும் வேலையில் பாஜக இறங்கியிருக்கிறது.

சமீபகாலமாக, சிவசேனா மற்றும் பாஜக தலைவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசிவருகின்றனர். இதனால் இரு கட்சிகளும் சேர்ந்து மீண்டும் ஆட்சியமைக்கும் என்று செய்திகள் வெளியாகின. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயைத் தொடர்ந்து முதல்வராக இருக்கச்சொல்லிவிட்டு, இரண்டு துணை முதல்வர் பதவிகளை பாஜக-வுக்கு உருவாக்கிக்கொள்ளலாம் என்று பாஜக தரப்பில் திட்டம் முன்வைக்கப்பட்டது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

ஆனால் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்தத் திட்டத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. பட்னாவிஸை மத்திய அமைச்சராக்கிவிடலாம் என்றும் பாஜக திட்டம் தீட்டியது. எனவேதான், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இவ்வளவு தாமதமாக நடக்கிறது. இந்தச் செய்தி குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் கேட்டதற்கு, ``மீண்டும் பாஜக-வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. கடந்த 30 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தபோது நடக்காததா இப்போது நடந்துவிடப்போகிறது... சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் நடந்துகொண்டவிதம் ஆரோக்கியமான ஜனநாயகமாகத் தெரியவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் தயாரிக்க, மத்திய அரசிடம் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான அவணங்களைக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றியதில், பாஜக கத்திக் கூச்சல் போட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

பாஜக எம்.எல்.ஏ-க்களின் செயல்பாட்டால் வெட்கத்தில் எங்களது தலையைத் தொடங்கப்போட வேண்டிய நிலை ஏற்பட்டது. தீர்மானம் பிடிக்கவில்லையெனில், அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டியதில்லை. அதற்காக ஏன் அவையில் அமளியில் ஈடுபட வேண்டும்... மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தகவல்களைக் கொடுக்காதபோது, அதில் தவறு இருக்கிறது என்று எப்படி உங்களால் சொல்ல முடியும்? அதில் தவறு இருந்தால் 2019-ம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸ் அரசு இதே தகவல்களை மத்திய அரசிடம் ஏன் கேட்டது?. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தனர். அது முடியவில்லை. இதற்கு முன்பும் இதே போன்று முயன்று தோல்வி அடைந்தனர்.

மகாராஷ்டிரா அரசியல்
மகாராஷ்டிரா அரசியல்

எம்.எல்.ஏ-க்களை சஸ்பெண்ட் செய்ததை ஜனநாயகப் படுகொலை என்றும், கறுப்பு அத்தியாயம் என்றும் பாஜக கூறுகிறது. அப்படியென்றால், அமலாக்கத்துறையும், சி.பி.ஐ-யும் ஜனநாயகத்துக்கு வெள்ளையடிக்கின்றனவா?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார். சபாநாயகர் தேர்தல் குறித்துக் கேட்டதற்கு, ``நோய்த்தொற்று காலத்தில் மக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் குறுகியகாலத்தில் கொரோனா சோதனை செய்து அறிக்கை பெறுவது கடினம். அதோடு இரண்டு நாள்கள் மட்டுமே நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் தேர்தலை நடத்துவது கடினம்’’ என்று தெரிவித்தார். சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அடிக்கடி பாஜக-வைப் புகழ்ந்து பேசிவருகிறார் என்பதும், உத்தவ் தாக்கரே டெல்லி சென்றபோது பிரதமர் மோடியைத் தனியாகச் சந்தித்துப் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

அடுத்த கட்டுரைக்கு