Published:Updated:

`தூண்டிவிட்டாரா தமிழ்மகன் உசேன்?!' -அதிர்ச்சி கொடுத்த தலைமைக் கழக போராட்டம்

தமிழ்மகன் உசேன் முன்னிலையில் கோஷம்போடும் அ.தி.மு.க-வினர்
தமிழ்மகன் உசேன் முன்னிலையில் கோஷம்போடும் அ.தி.மு.க-வினர்

ஜெயலலிதா அணியிலிருந்து ஜானகி அணிக்கு மாறியபோது, `ஜெயலலிதாவின் காகித வீட்டை நம்பி ஏமாந்தேன்' என தமிழ்மகன் உசேன் அளித்த பேட்டியின் பத்திரிகை பிரதியையும் சிலர் பதிவேற்றம் செய்திருந்தனர்.

அ.தி.மு.க-வின் வளர்ச்சிப்பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அப்போது சில நிர்வாகிகள், தங்களை உள்ளே விடவில்லை எனக்கூறி பிரச்னை செய்தனர். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பழைய நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை இல்லை எனவும் கூறி ராயப்பேட்டை கட்சி அலுவலகம் முன்பு நின்று கோஷம் எழுப்பினர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க-வினர் சிலர், தங்கள் முகநூல் பக்கத்தில், `அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த ஒருசில வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு தமிழ்மகன் உசேன்தான் காரணம். தமிழ்மகன் உசேன் அம்மாவுக்குச் செய்த துரோகங்கள் பல, அவை இன்னும் விரைவில் வெளிவரும்' என பதிவேற்றம் செய்தனர்.

மேலும் தமிழ்மகன் உசேன் ஜெயலலிதா அணியிலிருந்து ஜானகி அணிக்கு மாறியபோது, `ஜெயலலிதாவின் காகித வீட்டை நம்பி ஏமாந்தேன்' என அளித்த பேட்டியின் பத்திரிகை பிரதியையும் பதிவேற்றம் செய்திருந்தனர்.

தமிழ்மகன் உசேன்
தமிழ்மகன் உசேன்

ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி நாஞ்சில் கோலப்பனிடம் பேசினோம், ``கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன். அவர் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். நாங்கள் ராயப்பேட்டை அலுவலகம்முன் நிற்கும்போது அவர் கூட்ட அரங்கிலிருந்து வெளியே வந்தார். `நீங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையா?' என கேட்டதற்கு, `நான் சென்னைக்காரன் என்பதால் என்னை அனுமதிக்கவில்லை' என சொல்லி வருத்தப்பட்டார். உடனே அங்கிருந்தவர்கள் தளவாய் சுந்தரத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர் அவர்களை சமாதானப்படுத்திவிட்டுச் சென்றார்" எனக்கூறினார்.

தளவாய் சுந்தரம் தரப்பில் சிலரிடம் பேசினோம், ``மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, மாநகர, நகரச் செயலாளர்களுக்குத்தான் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அழைப்பு இல்லாத சிலர் அங்கு வந்து தங்களை உள்ளே விட வேண்டும் என்று வேண்டுமென்றே பிரச்னை செய்தனர். தமிழ்மகன் உசேனின் வீடு சென்னை முகவரியில் உள்ளது. அதுவே அந்தக் கூட்டத்தின்போதுதான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவந்தது. கூட்டம் முறைப்படிதான் நடந்துள்ளது" என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசும் தமிழ்மகன் உசேன்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசும் தமிழ்மகன் உசேன்

ஆனால், ராயப்பேட்டை அலுவலகத்தில் நடந்த சம்பவத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என தமிழ்மகன் உசேன் தரப்பு மறுக்கிறது.

இதுகுறித்து தமிழ்மகன் உசேன் கூறுகையில், ``ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் சிலர் அவர்களை உள்ளே விடவில்லை என கோஷம் போட்டார்கள். அந்தந்த மாவட்டத்தில் இருப்பவர்களை அந்தந்த மாவட்டப் பட்டியலில் போடுவார்கள். நான் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் செட்டில் ஆகிவிட்டேன். அதனால் தென்சென்னை வடக்கு மாவட்டக் கட்சிக் கணக்கில் இருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்ட லிஸ்டை நான் முதலிலே பார்த்தேன். எனவே, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு நான் போக விரும்பவில்லை. வரும் 15-ம் தேதி சென்னை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடக்க இருக்கிறது. அப்போது நான் செல்வேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு