Published:Updated:

இந்தியாவிலும் வரப்போகிறதா அதிபர் ஆட்சி முறை?! - மம்தா சந்தேகமும் பின்னணியும்

மம்தா!

'இந்தப் போக்கு தொடர்ந்தால் நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிதான்' என, மம்தா ஆவேசமாகப் பேசியிருப்பதை மேற்கோள்காட்டும் அரசியல் நோக்கர்கள், இந்தியாவிலும் அமெரிக்க ஜனநாயகமுறை அதிபர் ஆட்சி வரப்போகிறதோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிலும் வரப்போகிறதா அதிபர் ஆட்சி முறை?! - மம்தா சந்தேகமும் பின்னணியும்

'இந்தப் போக்கு தொடர்ந்தால் நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிதான்' என, மம்தா ஆவேசமாகப் பேசியிருப்பதை மேற்கோள்காட்டும் அரசியல் நோக்கர்கள், இந்தியாவிலும் அமெரிக்க ஜனநாயகமுறை அதிபர் ஆட்சி வரப்போகிறதோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

Published:Updated:
மம்தா!

கொல்கத்தாவிலுள்ள தேசிய நீதியியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் 14-வது பட்டமளிப்புவிழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``தற்போதைய மற்றும் எதிர்கால நீதித்துறைத் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து நமது கூட்டாட்சி அமைப்பு அப்படியே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மக்கள் தேவையில்லாமல் துன்புறுத்தப்படுகின்றனர்.

அனைத்து ஜனநாயக அதிகாரங்களும் ஒரு பிரிவினரால் கைப்பற்றப்படுகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்தால், நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கி நகரும். ஜனநாயகம் எங்கே... தயவுசெய்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள். நீதித்துறைமீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக நான் கூறவில்லை. ஆனால், இப்போதெல்லாம் நிலைமை மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

உதய் உமேஷ் லலித்
உதய் உமேஷ் லலித்

நீதித்துறை மக்களைப் பேரழிவிலிருந்தும், அநீதியிலிருந்தும் காப்பாற்ற வேண்டும். மக்களின் குரலை நீதித்துறை கேட்க வேண்டும். மக்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அழுகிறார்கள்” என்று பேசினார்.

இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, இந்தப் போக்கு தொடர்ந்தால், இது நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கி நகர்த்தும் என்று கூறியதை மேற்கோள்காட்டும் அரசியல் நோக்கர்கள், பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது இந்தியாவிலும் அமெரிக்க ஜனநாயகமுறை அதிபர் ஆட்சி வரப்போகிறதோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், ``2014-ம் ஆண்டு பா.ஜ.க வந்த பிறகு பலவிதமான சட்டங்களை மிகவும் கடுமையாக மாற்றிவிட்டார்கள். என்.ஐ.ஏ., உபா சட்டம் ஆகியவை கடுமையாக்கப்பட்டுள்ளன. சி.ஏ.ஏ போன்ற சட்டங்களைக் கொண்டுவந்து சிறுபான்மையினரிடத்தில் பயத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள்.

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

மத்தியிலிருந்தே அனைத்து அதிகாரங்களையும் செலுத்த வேண்டும் என்பதற்காக புதிய கல்விக்கொள்கை போன்றவற்றைச் செயல்படுத்திவருவதைப் பார்க்கிறோம். கவர்னர்கள் மூலமாகப் பலவிதமான பிரச்னைகளை மாநில அரசுகளுக்குக் கொடுக்கிறார்கள். இதற்கு கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடக்கும் பிரச்னைகளை நாம் பார்க்கிறோம்.

அரசியல்ரீதியாக எம்.எல்.ஏ- க்களை விலைக்கு வாங்குவதைப் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் எதிர்க்கட்சியைக் கவிழ்க்கக்கூடியவை. ஒருபுறம் அரசாங்கரீதியில் பல்வேறு சட்டங்களைக் கொண்டுவந்து மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கிறார்கள். மற்றொருபுறம் எதிர்க்கட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்கக்கூடிய விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

என்.ஐ.ஏ (NIA)
என்.ஐ.ஏ (NIA)

இந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறுவிதமான சட்டங்களின் மூலமாகப் பல அதிகாரங்களைக் கையில் எடுத்திருப்பதைப் பார்க்கிறோம். ஏற்கெனவே ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுத்த பலரைச் சிறையில் வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியாவை டெல்லியிலிருந்து ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அவர்களின் நோக்கம் தெரியவருகிறது. அதைத்தான் மம்தா பானர்ஜி மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார்" என்றார்.

இது குறித்து தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, "எந்தவிதமான கடுமையான சட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பல கடுமையான சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த எட்டு ஆண்டுகளில் தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

கருத்து சுதந்திரம் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஜனநாயகம் என்பது அதிக அளவில் அரசாலும், நாடாளுமன்றத்தினாலும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. தாங்கள் நினைப்பதுபோல் ஊழல் செய்ய முடியவில்லை என்பதால், லஞ்சம் பெற முடியவில்லை, முறைகேடுகளில் ஈடுபடமுடியவில்லை என்று நினைப்பவர்கள் இதைச் சர்வாதிகாரம் என்று சொல்வார்கள். சொல்பவர்கள், சொல்லிவிட்டுப் போகட்டும்" என்கிறார்.