Published:Updated:

திமுக-வுடன் அனுசரணை... 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அடித்தளமிடுகிறதா பாமக?

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

சட்டமன்றத்திலும், அறிக்கைகளிலும் திமுக அரசுக்கு அனுசரணையாக இருந்துவருகிறது பாமக. என்ன காரணம்...?

திமுக-வுடன் அனுசரணை... 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அடித்தளமிடுகிறதா பாமக?

சட்டமன்றத்திலும், அறிக்கைகளிலும் திமுக அரசுக்கு அனுசரணையாக இருந்துவருகிறது பாமக. என்ன காரணம்...?

Published:Updated:
பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

தமிழக அரசியல் கட்சிகளிலேயே பா.ம.க-வின் அரசியல்தான் மிகவும் வித்தியாசமானது. ஒவ்வொரு தேர்தலின்போதும் கூட்டணி மாறிக்கொண்டேயிருப்பது பா.ம.க-வின் வாடிக்கை. பா.ம.க கூட்டணி மாறப்போகிறது என்றால் அதற்கான சமிஞைகள் முன்னரே தெரியத் தொடங்கும்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அப்படித்தான், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், தி.மு.க-வுடன் கூட்டணி சேர முனைவதுபோல சில செயல்பாடுகளை நாம் பா.ம.க-விடம் காண முடிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பா.ம.க மாநில நிர்வாகி ஒருவர் நம்மிடம் இது குறித்துப் பேசுகையில் , ``கூட்டணி குறித்து பொதுக்குழு முடிவுசெய்யும் என்று எப்போதுமே அய்யா ராமதாஸ் சொல்வது வழக்கம். ஆனால், அவர்தான் பொதுக்குழு என்பது எங்களுக்குத்தான் தெரியும். முடிவுகளை அவர் எடுத்துவிட்டு, தீர்மானங்களைத் தயார் செய்துவிட்டு, அதை பிரின்ட் எடுத்துக்கொண்டுதான் பொதுக்குழுவுக்கே வருவார்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

சில சமயங்களில் மட்டும் பொதுக்குழுவிலேயே பெட்டிவைத்து, அனைவருக்கும் துண்டுச்சீட்டுக் கொடுத்து, கூட்டணி குறித்த எண்ணங்களை எழுதிப்போடச் சொல்லி, அதில் பெரும்பான்மையாக வந்திருக்கும் கருத்துகளைவைத்து முடிவெடுப்பார். அய்யாவே முடிவுசெய்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அப்படி ஏற்க மறுப்பவர்கள் தாராளமாகக் கட்சியிலிருந்து விலகலாம் என்பதுதான் அய்யாவின் எண்ணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு முறையும் கூட்டணி மாறுவதால் கட்சிக்கு இருக்கும் அவப்பெயர் கூடிக்கொண்டேதான் செல்கிறது. எனினும், கூட்டணி சேருவதால் கட்சி வளர்ச்சியடைகிறது என்பதால், நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து, 23 தொகுதிகள் பெற்று ஐந்தில் வெற்றி பெற்றோம். அடுத்து வந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஏழு மாவட்டங்கள் வடக்கில் வருவதால் அதை நம்பி கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவெடுத்தார்.

அதிமுக - பாமக
அதிமுக - பாமக

ஆனால், அந்தத் தேர்தலிலும், அதற்கடுத்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் செமத்தியான அடியைத்தான் வாங்கினோம். எனவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க-வுடன் இணைவதுதான் சரியான முடிவாக இருக்கும் என அய்யாவும் சின்னய்யாவும் முடிவெடுத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, வன்னியர் இட ஒதுக்கீடு என்கிற கத்தியும் எங்கள் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கிறது. இறுதி நேரம் என்றாலும், சட்டத்தை இயற்றியது அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் சட்டத்துக்கான அரசாணை வெளியிட்டு அமல்படுத்தியது தி.மு.க. ’வலுவான சட்டமாக இயற்றவில்லை, கடைசி நேரத்தில் தேர்தல் ஆதாயத்துக்காக இயற்றப்பட்டது’ என்று அ.தி.மு.க-வை, தி.மு.க குறைசொல்கிறது. அதேபோல, ‘வலுவான வாதங்களை நீதிமன்றத்தில் வைக்காமல் வேண்டுமென்றே இட ஒதுக்கீடு ரத்தாகும் நிலையை உருவாக்கியது’ என்று தி.மு.க மீது அ.தி.மு.க குறை கூறுகிறது. ஆனால், எங்களால் இருவரையுமே குற்றம் சொல்ல முடியாது. இருவரும் தங்களால் இயன்றளவு செய்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின்

இறுதி நேரமானாலும் ஒரு சமூகத்துக்கு ஆதரவாக ஒரு சட்டத்தை துணிச்சலுடன் நிறைவேற்றினார் எடப்பாடியார். ராமதாஸும் அன்புமணியும் சுட்டிக்காட்டிய சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்காடினார் முதல்வர் ஸ்டாலின். எனினும், தேர்தல் என்று வரும்போது ஒரு கட்சிக்குத்தான் ஆதரவாக இருக்க முடியும். அதன்படி, தற்போது ஆளுங்கட்சியாக இருப்பது தி.மு.க-தான் என்பதால், அக்கட்சியை நோக்கியே எங்களது பயணம் அமைந்திருக்கிறது. அதனால்தான், சமீப நாள்களாக வெளிவரும் இருவரின் அறிக்கைகளில் தி.மு.க ஆதரவு தொனி அதிகமாகத் தெரிகிறது.

அறிக்கை மட்டுமின்றி, சட்டமன்றச் செயல்பாடுகளிலும் தி.மு.க ஆதரவு நிலைப்பாடு அதிகமாகவே வெளிப்பட்டுவருகிறது. அ.தி.மு.க கூட்டணியில் நின்று வெற்றிபெற்ற பா.ம.க எம்.எல்.ஏ-க்கள் ஐவரும், முதலில் எதிர்க்கட்சித் தலைவரைச் சென்று பார்க்காமல், முதல்வரைப் பார்த்து வாழ்த்துப் பெற்றனர். பா.ம.க சட்டமன்றக்குழுத் தலைவர் ஜி.கே.மணி, தனது ஒவ்வொரு பேச்சிலும் தி.மு.க அரசு மீது ஐஸ் வைக்கிறார். விளையாட்டுத்துறை தொடர்பாக 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த அறிவிப்புகள் தொடர்பாக வரவேற்றுப் பேசிய ஜி.கே.மணி, ‘நான் என் மனதில் நினைத்தவற்றை, நான் சொல்லாமலேயே அறிவித்திருக்கிறார் முதல்வர்’ என்று கூறினார். ஜூவி-க்குப் பேட்டி கொடுத்த சட்டமன்றக் கொறடா அருளின் கருத்துகளில்கூட தி.மு.க ஆதரவு நிலைப்பாடு அப்பட்டமாகத் தெரிகிறது. துணைவேந்தர் நியமனம் குறித்த சட்ட திருத்துக்குக்கூட பா.ம.க ஆதரவளித்திருக்கிறது. ஆளுநர் விவகாரத்திலும் தி.மு.க அரசுக்கு ஆதரவாகவே இருந்துவருகிறது பா.ம.க.

ஜி.கே.மணி
ஜி.கே.மணி

வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. மீண்டும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் அறிக்கை பெற்று, வலுவான ஷரத்துகளுடன் சட்டம் இயற்றப்பட வேண்டும். அது தி.மு.க அரசால்தான் முடியும் என்பதும், அனுசரணைக்கான காரணங்களுள் ஒன்று என்றபோதிலும், தேர்தல் காரணங்களும் இல்லாமல் இல்லை! 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க-வுடன் கூட்டணியிலிருந்த பாரிவேந்தரின் ஐ.ஜே.கே உள்ளிட்ட சில கட்சிகள் இப்போது இல்லை என்பதால், அவ்விடத்தைப் பிடிக்கலாம் என்பது பா.ம.க தலைவர்களின் எண்ணம். அதனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகள் பெற்றுவிட வேண்டும் என்பதிலும் அய்யாவும் சின்னய்யாவும் குறியாக இருக்கிறார்கள்” என்றார். பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism