Published:Updated:

மத்திய அமைச்சரவை வெட்டாட்டம்: தமிழகத்தில் யாருக்கு வாய்ப்பு, யாருக்கு கல்தா?!

அமித் ஷா - நரேந்திர மோடி
News
அமித் ஷா - நரேந்திர மோடி

விரிவாக்கம் செய்யப்படவிருக்கும் மத்திய அமைச்சரவையில், ஜோதிராதித்யா சிந்தியா, சர்பானந்த சோனவல், நாராயண் ரானே, ரீடா பகுகுணா ஜோஷி உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுகின்றன.

நாளை மத்திய அமைச்சரவை விரிவாக்கப்படவிருக்கும் நிலையில், தமிழகத்திலிருந்து பிரதிநிதித்துவம் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அமைச்சர் பொறுப்பைப் பெற்றே தீருவது என பா.ஜ.க மாநிலத் தலைவரான எல்.முருகன் டெல்லியில் முகாமிட்டிருப்பதால் பரபரப்பு எகிறியிருக்கிறது.

மத்திய அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் கடந்த ஆண்டு அக்டோபரில் மறைந்த பிறகு, அவர் வகித்துவந்த உணவுத்துறை கூடுதல் பொறுப்பாக பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதிருந்தே மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யப்படுவது குறித்த செய்திகள் டெல்லியில் பரபரக்கத் தொடங்கின. மத்திய சமூக நீதித்துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் சமீபத்தில் கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, விரிவாக்கம் செய்யப்படுவது உறுதியாகியிருக்கிறது. இந்த விரிவாக்கத்தில் தமிழகத்திலிருந்து யாருக்காவது அமைச்சரவையில் இடமளிக்கப்படுமா என பா.ஜ.க வட்டாரங்களில் விசாரித்தோம்.

எல்.முருகன்
எல்.முருகன்

நம்மிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர், ``சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறாததாலும், கட்சியின் கட்டமைப்பை வலுவாக்காததாலும், தமிழகத்தில் கட்சித் தலைமையை மாற்ற வேண்டும் என்பதில் பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் திட்டவட்டமாக இருக்கிறார். இது தொடர்பாக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் பேசியிருக்கிறார். மாநிலத் தலைவர் பொறுப்புக்கு எல்.முருகன் வந்து ஒன்றரை வருடம்தான் ஆகிறது. தவிர, சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு எல்.முருகன் மாற்றப்பட்டால், அது தேவையற்ற விமர்சனங்களையும் உருவாக்கும் என்று டெல்லி கருதுகிறது. அதனால், அவருக்கு மத்திய இணையமைச்சர் பொறுப்பு அளித்து கௌரவமாக வெளியேற்றத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மத்திய இணையமைச்சர் பொறுப்புக்கு பதிலாக, கேபினெட் அந்தஸ்துள்ள அமைச்சர் பொறுப்பை எல்.முருகன் எதிர்பார்க்கிறார். இதற்காக, தமிழக பா.ஜ.க இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியுடன் சேர்ந்து சில மூத்த தலைவர்களைச் சந்தித்துவருகிறார். எல்.முருகனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டால், மாநிலத் தலைவர் பொறுப்பில் நயினார் நாகேந்திரன் அல்லது முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்படலாம்" என்றார்.

விரிவாக்கம் செய்யப்படவிருக்கும் மத்திய அமைச்சரவையில், ஜோதிராதித்யா சிந்தியா, சர்பானந்த சோனவல், நாராயண் ரானே, ரீடா பகுகுணா ஜோஷி உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுகின்றன. இந்தக் கூட்டல் கழித்தல்களுக்கு மத்தியில் எல்.முருகனுக்கு கட்சிக்குள் குழிபறிக்கவும் சில கோஷ்டிகள் தீவிரமாகியிருக்கின்றன. ``எல்.முருகனுக்கு இந்த முறை அமைச்சரவையில் வாய்ப்பளிக்க வேண்டாம். மாநிலத் தலைவராக சிறப்பாகச் செயல்பட்டு நான்கு எம்.எல்.ஏ-க்களை சட்டமன்றத்துக்குள் அனுப்பியிருக்கிறார். அவரே தலைவர் பொறுப்பில் தொடரட்டும்" என்று எல்.முருகனுக்கு எதிரான கோஷ்டிகள் டெல்லியில் முட்டுக்கட்டை போடுகின்றனவாம். "பாராட்டுற மாதிரி அமைச்சர் ஆகும் வாய்ப்பைத் தட்டிவிடப் பாக்குறாங்களே..." என எல்.முருகன் கொதிப்பில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

மத்திய அமைச்சர் பொறுப்புக்கு நீண்ட மாதமாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் முயன்றுவந்தார். இந்த விரிவாக்கத்தில் அவருக்கு இடமிருக்காது என்றே டெல்லித் தகவல்கள் கூறுகின்றன.

எல்.முருகனை கழற்றிவிட்டுவிட்டு, மாநிலத் தலைவர் பொறுப்பில் துடிப்பாகச் செயல்படும் ஒருவரை நியமிக்க பி.எல்.சந்தோஷ் காய்நகர்த்துகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை பா.ஜ.க Vs தி.மு.க என்று களம் அமைக்க அவர் திட்டமிடுகிறார். அதேநேரத்தில், தமிழிசை சௌந்தரராஜன்போல கௌரவமான ஒரு பொறுப்புக்கு எல்.முருகன் ஆசைப்படுகிறார். இந்தத் திட்டத்தையெல்லாம் தடுத்து எல்.முருகனை தமிழ்நாட்டுக்குள்ளேயே முடக்கிவைக்க ஒரு கோஷ்டி தீவிரமாக டெல்லியில் முயன்றுவருகிறது. இந்த வெட்டாட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்!