சமீபகாலமாக, சசிகலாவின் மறு அரசியல் பிரவேசம் பரபரப்பாக இருந்தது. டி.வி-களில் பேட்டி கொடுத்து அமர்களப்படுத்தினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றிய பழைய அரசியல் நினைவுகள் பற்றிப் பேட்டிகளில் பேசினார். அ.தி.மு.க-வை எடப்பாடி, ஓ.பி.எஸ் இருவரிடமிருந்து மீட்பேன் என்றெல்லாம் சொல்லிவந்தார். கொரோனா பரவல் முடிந்ததும், ஜெயலலிதாவின் சமாதிக்கு நேரில் போய் வணங்கிவிட்டு தமிழக ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் போகவிருப்பதாகச் சொன்னார். ஆனால், திடீரென்று அவர் சைலன்ட் மோடுக்குப் போய்விட்டார்.
இடையில், ஆகஸ்ட் 5-ம் தேதியன்று அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துவிட்டுப்போனதோடு சரி! அதன் பிறகு, சசிகலா எங்கே போனார்... அரசியல் அரங்கில் எங்கும் அவரை காணவில்லையே... அவரின் ஆடியோ பேச்சுக்கள் ஏதும் வெளிவரவில்லையே என்று பல்வேறு கோணங்களில் அதிமுக பிரமுகர்கள் குழப்பத்துடன் பேசிவருகிறார்கள். ஆகஸ்ட் 18-ம் தேதியன்று சசிகலாவுக்கு 67-வது பிறந்தநாள். தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி வழியில் சமூக சேவைகள் செய்ய சசிகலா தரப்பினர் தயாராக இருந்தார்கள். ஆனால், அதற்குக்கூட சசிகலாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆகஸ்ட் 16-ம் தேதி நிலவரப்படி, சசிகலா தரப்பில் மௌனம் நீடிக்கிறது.

என்னதான் நடந்தது என்று அ.தி.மு.க., அ.ம.மு.க நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசினோம்.
``ஜூலை 26-ம் தேதியன்று எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ஸும் டெல்லிக்கு விசிட் போனார்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரையும் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் விசிட்டின்போது, சசிகலா விஷயமும் பேசப்பட்டதாகக் கேள்விப்பட்டோம். அ.தி.மு.க-வில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சசிகலாவின் அரசியல் நடவடிக்கை இருக்கிறது. கொஞ்சம் தட்டி வையுங்கள் என்று கோரிக்கைவைத்ததாகத் தகவல். டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பியதும், தேனியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்., `சசிகலாவுக்குக் கட்சியில் இனி இடமில்லை' என்று முதன்முறையாக அறிவித்தார்.
இவர் இப்படிப் பேசியது டெல்லியில் கிடைத்த சிக்னலைத் தொடர்ந்துதான் என்று நினைத்தோம். ஆனாலும், சசிகலா தரப்பில் அசரவில்லை. அதைத் தொடர்ந்து, சசிகலா பெங்களூரு சிறைச்சாலையில் இருந்தபோது நடந்த முறைகேடுகள் என்னென்ன என்பது பற்றிய எஃப்.ஐ.ஆர். விவரங்களை கர்நாடகா உயர் நீதிமன்றம் திடீரெனக் கேட்டது. சமூக ஆர்வலர் போட்ட வழக்கின் எதிரொலியாக இந்த வினா எழுப்பப்பட்டதாகச் சொல்கிறார்கள். கர்நாடகாவில் தற்போது நடப்பது பா.ஜ.க ஆட்சி. இவ்வளவு காலமாக நிலுவையில் கிடந்த அந்த சிறைச்சாலை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை தூசுதட்டி எடுத்திருக்கிறது கர்நாடகா அரசு. அதன் எதிரொலியாக, தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் ஆர்ப்பாட்டமான ஆட்டம் பிரேக் அடித்து நின்றுவிட்டது. எடப்பாடி, ஓ.பி.எஸ் இருவரின் ராஜதந்திரத்துக்கு இது ஓர் உதாரணம் '' என்றார்கள்.
தினகரன் தரப்பில் என்ன ரியாக்ஷன்?
கடந்த மூன்று மாதங்களாக தினகரன் சைலன்ட் ஆகிவிட்டார். அ.தி.மு.க-வை எடப்பாடி, ஓ.பி.எஸ்-ஸிடமிருந்து மீட்டெடுப்பதில் சசிகலா நேரிடையாகக் களம் இறங்கிவிட்டதால், அவர் சொல்லித்தான் தினகரன் சைலன்ட் ஆகிவிட்டார் என்று அ.ம.மு.க-வினர் பேசிக்கொண்டனர். இடையில், ஆகஸ்ட் 6-ம் தேதியன்று தஞ்சையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொள்ள தினகரன் வருவதாக இருந்தார். ஆனால், போலீஸ் அனுமதி கொடுக்காததால், அந்த நிகழ்ச்சியும் தள்ளிப்போடப்பட்டது. சசிகலாவின் அண்ணி இளவரசியின் சகோதரர் அண்ணாத்துரை கோட்டூர் ஒன்றிய அ.ம.மு.க செயலாளராக இருந்தார். ஜூலை மாதக் கடைசியில் அண்ணாத்துரை காலமானார். அவரது படத்திறப்பு விழா அண்மையில் நடந்தது. தினகரன் நேரில் வந்திருந்தார். அவருடன் 10 மாவட்டங்களின் செயலாளர்களும் வந்திருந்தார்கள். அவர்களிடம் தினகரன் அரசியல் ஏதும் பேசவில்லை. மாவட்டச் செயலாளர்களும் ஏதாவது பேசுவார் என்று காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் தி.மு.க-வுக்கு மாறியபோதும்கூட ரியாக்ஷன் காட்டவில்லை. இதையெல்லாம் உற்று கவனித்துவரும் அ.ம.மு.க பிரமுகர்கள், ``சசிகலாவின் பிறந்தநாளன்று தினகரன் தன்னுடைய அரசியல் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அநேகமாக, அவர் விலகிக்கொள்வதாக அறிவிப்பு வெளியாகலாம். கட்சியினர் சசிகலா பின்னால் அணிவகுத்து அ.தி.மு.க-வில் ஐக்கியமாவார்கள்’’ என்கிறார்கள்.

இது நடக்குமா? என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம்...
``சசிகலா இல்லாமல் தமிழக அரசியலில் பல தடைக்கற்களைத் தாண்டி வந்துவிட்டோம். ஆரம்பத்தில் மைனஸ் தினகரன்... சசிகலா வரட்டும் என்று நினைத்தோம். அப்போது அவர் வரவில்லை. தினகரனின் வளையத்தில் இருந்தார். இப்போது தினகரனைவிட்டு வெளியே வர முடிவெடுத்து கடந்த சில மாதங்களாகத் தவிர்த்துவருகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலாவின் சொந்த பந்தங்களின் ஆட்டங்களைப் பார்த்து நாங்கள் மிரண்டோம். அதே சொந்த பந்தங்கள் சகிதம் அவர் மீண்டும் அ.தி.மு.க-வில் வர நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை. வயதாகிவிட்டது. அரசியலிலிருந்து அவர் ஓய்வு பெறுவதுதான் நல்லது. அ.தி.மு.க-வில் இனி இடமில்லை'' என்றார்.

அ.தி.மு.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பேசினோம்...
``சசிகலாவின் எதிர்ப்பு இருக்கிறவரையில் கட்சி எழுந்து நிற்கவோ, நடமாடவோ முடியாது. அவரைச் சேர்த்துக்கொண்டால்தான், கட்சி பலம் பெறும். சசிகலா தற்போது மாறிவிட்டார். தினகரனைக் கழற்றிவிட்டுவிட்டார். அவரின் சொந்த பந்தங்களைவிட்டு வரவும் தயார். அப்படி நிலைப்பாட்டை சசிகலா எடுக்கும்போது எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்-ஸுக்கும் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை? முதலில் தினகரனைவிட்டு சசிகலா வரட்டும் எனறார்கள். அதற்கும் சசிகலா தயார். தினகரன்தான் இழுத்துக்கொண்டிருக்கிறார். அ.ம.மு.க-வில் இருக்கிற தளபதிகளை தி.மு.க-வுக்குப் போகவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். உடனடியாகத் தனது கட்சியைக் கலைத்துவிட்டு சசிகலா பின்னால் தினகரன் அணிவகுத்து நிற்பதாக அறிவித்திருக்க வேண்டும். விரைவில் அப்படி ஓர் அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்” என்கிறார்.