Election bannerElection banner
Published:Updated:

`உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறாரா... இல்லையா?’ - தி.மு.க-வின் அடுத்த உத்தேசப் பட்டியல்

மு.க.ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. இளைஞரணி மாநிலச் செயலாளரும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறாரா? அடுத்தக்கட்ட உத்தேச பட்டியல் ரெடி!

”ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தி.மு.க. உத்தேச வேட்பாளர் பட்டியலை நீங்கள் வெளியிட வெளியிட, உ.பி.க்களின் ரத்தக்கொதிப்பு ஏறிக்கொண்டே இருக்கிறது. நாளை மார்ச் 10-ம் தேதி தி.மு.க.வின் முழுமையான அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாக இருக்கும் சூழலில், இன்றும் கொஞ்சம் பி.பி.யைக் கூட்டிவிடுங்கள்” என்றவாரே பட்டியலை விவரித்தார் அந்த தி.மு.க நிர்வாகி.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியை 2016 தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் மீண்டும் கேட்டு நிற்கிறார். இவரை நிறுத்தலாமா... சேகர் பாபுவை தொகுதி மாறச் சொல்லலாமா.. என்ற சிந்தனையில் இருக்கிறது தலைமை. நாளை இதற்கான விடை தெரிந்துவிடும்.

துறைமுகம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், மாவட்டச் செயலாளருமான சேகர் பாபு மீண்டும் இத்தொகுதியைக் கேட்கிறார். ஒருவேளை சேகர் பாபு ஆர்.கே.நகருக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டால், இங்கு இளைஞரணி நிர்வாகி ஜின்னாவை நிறுத்தலாம் என்ற யோசனை இருக்கிறதாம்.

சேகர்பாபு
சேகர்பாபு

பெரம்பூர் தொகுதியில் 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் வெற்றி பெற்றவர் ஆர்.டி.சேகர். இரண்டாண்டுகள் மட்டுமே ஆகிறதால் மீண்டும் சேகருக்கு வாய்ப்புள்ளது. அதேநேரம் நரேந்திரன் என்பவரும் சீட் கேட்கிறார்.

கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக ஸ்டாலினே வேட்பாளர்.

சைதாப்பேட்டை தொகுதிக்கு மாவட்டச் செயலாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான மா.சுப்ரமணியனே வேட்பாளர்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உதயநிதி ஸ்டாலினுக்குத்தான் என்று ஆரம்பத்திலிருந்து சொல்லப்பட்டு வந்தது. அதற்கேற்றார்போல விருப்ப மனுவும் கொடுத்து, நேர்காணலிலும் பங்கேற்றார். எனினும், உதய் போட்டியிட விரும்பவில்லை என்கிற தகவலும் உலா வருகிறது. அண்ணன் எப்போ போவார், திண்ணை எப்போ காலியாகும் என்று காத்துக்கிடக்கும் பகுதிச் செயலாளர்கள் சீட்டுக்கு மோதுகிறார்கள். இறுதி முடிவு நாளை தெரிந்துவிடும்.

எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வேட்பாளர்கள்? - 25 பேர் கொண்ட தி.மு.க வேட்பாளர் உத்தேசப் பட்டியல்
உதயநிதி - வேட்பாளர் நேர்காணல்
உதயநிதி - வேட்பாளர் நேர்காணல்

விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட முன்னாள் கவுன்சிலர் தனசேகரனுக்கும், இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் ராஜாவுக்கும் ரேஸ் நடக்கிறது. இறுதி முடிவு ஸ்டாலினிடமே!

சோழிங்கநல்லூர் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. ரமேஷ் அரவிந்தனுக்கே.

திருவண்ணாமலை தொகுதியில் மாவட்டச் செயலாளரும், தெற்கு மண்டலப் பொறுப்பாளருமான எ.வ.வேலுவுக்கு சீட்.

செய்யார் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்படலாம், அப்படி தி.மு.க.வே போட்டியிடுகிறது என்றால், ஒன்றியச் செயலாளர் மனோகரனுக்கு வாய்ப்புள்ளது.

போளூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. கே.வி.சேகரனுக்கே சீட்.

செங்கம் தொகுதியிலும் சிட்டிங் எம்.எல்.ஏ. மு.பெ.கிரிக்கே சீட் எனும் கிரீடம்.

திருவள்ளூர் தொகுதியில், சிட்டிங் எம்.எல்.ஏ. வி.ஜி.ஆருக்கும், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் குமரனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒரேயளவு பணபலமுடையவர்கள். தலைமையிடம் நெருக்கமாக இருந்தாலும், லோக்கலில் வி.ஜி.ஆருக்கு எதிராகவே உ.பி.க்கள் இருக்கிறார்கள். இதனால், கேப்பில் குமரன் கடா வெட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

திருத்தனி தொகுதிப் பெற, மாவட்டத் துணைச் செயலாளர் சந்திரன் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர் பூபதிக்கும் இடையே மோதல் நடக்கிறது. எனினும் இறுதிகட்ட நிலவரம் பூபதிக்குத்தான் வாய்ப்புள்ளதாம்.

பூந்தமல்லி தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமியே களம் காணவிருக்கிறார்.

பொன்னேரி தொகுதியில் மீஞ்சூர் பேரூர் செயலாளர் மோகன்ராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் கதிரவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், ஒன்றியச் செயலாளர் வள்ளூர் ரமேஷ் என பலமுனைப் போட்டி நிலவியது. இறுதிகட்டத்தில் மோகன்ராஜ் தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

கும்மிடிப்பூண்டி தொகுதியில் மாவட்டப் பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் போட்டியிடுவது உறுதியாம்.

ஆவடி தொகுதியில் மாவட்டப் பொறுப்பாளர் நாசர்தான் வேட்பாளர்.

திருப்பத்தூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. நல்லதம்பிக்கும், ஒன்றியச் செயலாளர் தாடி ராஜேந்திரனுக்கும் போட்டி நிலவியது. நல்லதம்பிக்கு நல்ல பெயர் இருப்பதால் மீண்டும் சீட் உண்டாம்.

கூடலூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. திராவிட மணிதான் மீண்டும் வேட்பாளர்.

குன்னூர் தொகுதி முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரனுக்கு முடிவாகிவிட்டதாம்.

வீரபாண்டி தொகுதி வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவுக்கு என்கிறார்கள்.

ராஜபாளையம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் தங்கபாண்டியனுக்கே.

அருப்புக்கோட்டை தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மகன் ரமேஷ் போட்டியிடுவதாக முதலில் சொன்னார்கள். தற்போதைய நிலவரம் தந்தையே மீண்டும் களம் காண்கிறார்.

ஆண்டிப்பட்டி தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. மகாராஜனுக்கா? தங்க தமிழ்ச்செல்வனுக்கா? என்பதில் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது.

இத்தோடு நமது தொகுதி உத்தேசப் பட்டியலை முடித்துக்கொள்ளூங்கள், நாளை அதிகாரப்பூர்வ பட்டியல் வந்தபிறகு அதிருப்தியாளர்கள் பற்றி தகவல் சொல்கிறேன்!” என்றவாறே விடைபெற்றார் அந்த அறிவாலயப்புள்ளி!

அ.தி.மு.க Vs தி.மு.க: தொகுதிப் பங்கீட்டைச் சிறப்பாகக் கையாண்டது யார்? - ஓர் அலசல்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு