Published:Updated:

கூலிப்படை, கொலை மிரட்டல்! - அமைச்சருக்கு எதிராக சாத்தூர் எம்.எல்.ஏ; விருதுநகர் அதிமுக-வில் சலசலப்பு

ராஜவர்மன்
ராஜவர்மன்

`என்னைக் கட்சி நிர்வாகிகள் முன் தரக்குறைவாகப் பேசி, வெட்டி விடுவேன், குத்தி விடுவேன், கூலிப்படையைவைத்து கொலை செய்துவிடுவேன் என்று ஓர் அமைச்சர் ஆறு மாதங்களாகக் கொலை மிரட்டல் விடுத்துவருகிறார்.’

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கும் இடையேயான கோஷ்டிப் பூசல் சமீபகாலமாக அதிகமாகி, தற்போது ஒருவரையொருவர் குற்றம்சாட்டும் அளவுக்குச் சென்றிருப்பது விருதுநகர் மாவட்ட கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

விருதுநகர் மாவட்ட அமைச்சரான ராஜேந்திர பாலாஜி பல்வேறு விஷயங்களில் அதிரடியாகப் பேசி, கடந்த காலங்களில் சர்ச்சை நாயகனாக வலம்வந்தார். அவருடைய பேச்சு கட்சிக்கு தர்மசங்கடத்தைத் தொடர்ந்து ஏற்படுத்திவந்த நிலையில், மாவட்டச் செயலாளர் பதவயிலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டார்.

அதன் பிறகு கொஞ்சம் அடக்கி வாசித்த ராஜேந்திர பாலாஜிக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. அவருக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியிலுள்ள முக்கிய நிர்வாகிகள் தனி கோஷ்டியாகச் செயல்பட்டுவருகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி நடத்திய ஆலோசனைக் கூட்டம்
ராஜேந்திர பாலாஜி நடத்திய ஆலோசனைக் கூட்டம்

இதில் ஆரம்பகாலத்திலிருந்து அவருடன் நெருக்கமாக இருந்த சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் கடுமையாக மோதிவருகிறார். ராஜவர்மனுடன் முன்னாள் எம்.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உட்பட அதிகப்படியான ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறார்கள்.

சமீபத்தில் அ.தி.மு.க-வில் `யார் முதலமைச்சர்...’ என்ற சர்ச்சை வந்தபோது எடப்பாடிக்கு ஆதரவாக ராஜேந்திர பாலாஜி கருத்து சொன்னதால், ஓ.பி.எஸ் கோபமாகி ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நிலை ஏற்பட்டது. பிறகு ஓ.பி.எஸ் தரப்பினரிடம் வருத்தம் தெரிவித்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ராஜேந்திர பாலாஜி.

ராஜவர்மன் நடத்திய ஆலோசனைக் கூட்டம்
ராஜவர்மன் நடத்திய ஆலோசனைக் கூட்டம்

இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்துக்கு முதலமைச்சர், துணை முதலைமைச்சர் வரும்போது ராஜேந்திர பாலாஜி தனியாகவும், ராஜவர்மன் அணியினர் தனியாகவும் வரவேற்பு அளிக்கும் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்தநிலையில் சில நாள்களுக்கு முன்னர் ராஜேந்திர பாலாஜி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறார்கள். இதனால், அவர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க ராஜேந்திர பாலாஜி முடிவு செய்திருக்கிறார்.

இந்தநிலையில் ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி, கடந்த 18-ம் தேதி சாத்தூர் தொகுதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய ராஜவர்மன், ``நான் எந்தப் பொறுப்புக்கும் ஆசைப்பட்டது கிடையாது. அவர்களாகத்தான் பதவியைக் கொடுத்தார்கள். இப்போது என்னைக் கட்சி நிர்வாகிகள் முன் தரக்குறைவாகப் பேசி, வெட்டிவிடுவேன், குத்திவிடுவேன், கூலிப்படையைவைத்துக் கொலை செய்துவிடுவேன் என்று ஓர் அமைச்சர் ஆறு மாதங்களாகக் கொலை மிரட்டல் விடுத்துவருகிறார்.

ராஜவர்மன்
ராஜவர்மன்

கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், அதையெல்லாம் மறந்து அ.தி.மு.க-வின் வெற்றிக்குத் தொடர்ந்து பாடுபட வேண்டும். நான் இருக்கும் இடத்துக்கு விசுவாசமாக இருப்பேன். சாத்தூர் தொகுதி மக்களுக்கு வேலை செய்ய முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் என்னை வேலைக்காரனாக வைத்திருக்கிறர்கள். என் வேலை பிடிக்கவில்லையென்றால் தூக்கி எறியுங்கள்’' என்றார். இந்த விவகாரம் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் ஜெயக்குமார், `இந்த விவகாரத்தில் கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு