Published:Updated:

`வைகோவுடன் நெருக்கம்; தி.மு.கவில் பொறுப்பு!' - தென்காசி பிரமுகரின் ஹோட்டல், வீடுகளில் ஐ.டி.ரெய்டு

அய்யாதுரை பாண்டியனின் ஹோட்டல்
அய்யாதுரை பாண்டியனின் ஹோட்டல்

தி.மு.க-வின் மாநில‌ வர்த்தக அணி துணைத் தலைவர்‌ அய்யாதுரை பாண்டியனுக்குச் சொந்தமான பள்ளி, வீடுகள், ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தினார்கள்.

தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டையைச் சேர்ந்தவர், அய்யாதுரை பாண்டியன். தொழிலதிபரான இவர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் உயரழுத்த மின்சாரம் கொண்டு செல்வதற்கான டவர் அமைக்கும் பணிகளைச் செய்து வருகிறார். வெளிநாடுகளிலும் அவர் இந்தத் தொழிலில் முன்னோடியாக உள்ளார். 

அய்யாதுரை பாண்டியன் நடத்தும் பள்ளி
அய்யாதுரை பாண்டியன் நடத்தும் பள்ளி

இவருக்குச் சொந்தமான ஹோட்டல்கள் சென்னை, நெல்லை, சங்கரன்கோவில் உள்ளிட்ட நகரங்களில் உள்ளன. அத்துடன் சங்கரன்கோவிலில் பள்ளியும் நடத்தி வருகிறார். குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மையங்களில் ரிசாட்டுகளும் நடத்தி வருகிறார்.

அரசியல் ஆர்வம் கொண்டிருந்த அவர் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுடன் நல்ல நெருக்கத்தில் இருந்தார். அதனால் அந்தக் கட்சியில் சேரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியே இருந்து வந்தார்.

தி.மு.க-வில் இணைந்த போது
தி.மு.க-வில் இணைந்த போது

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர் தி.மு.க-வில் இணைந்தார். தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ஆதரவாளர்களுடன் அவர் இணைந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது. அதைத் தொடர்ந்து தி.மு.க-வில் மாநில வர்த்தக அணியின் துணைத்தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் கட்சி சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வேகமாகச் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், அவர்‌ முறையாக வருமானவரி செலுத்தாததாக எழுந்த புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினார்கள். தென்காசி மாவட்டம்‌ சங்கரன்கோவிலில்‌ உள்ள பள்ளி, அவரது வீடு, ஹோட்டல் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

நெல்லையில் உள்ள ஹோட்டல்
நெல்லையில் உள்ள ஹோட்டல்

நெல்லையில் உள்ள ஹோட்டல், சென்னையில் உள்ள ஹோட்டல் மற்றும் குற்றாலத்தில் அவருக்குச் சொந்தமான ரிசாட்டுகளிலும் அதிகாரிகள் சோதனை நடந்தது. தற்போது தி.மு.க-வில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறையினர்‌ சோதனை நடத்தியதால் தி.மு.க நிர்வாகிகளையும் கலக்கம் அடைய வைத்திருக்கிறது.

இதனிடையே, இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை எனத் தெரிகிறது. தங்கள் நிறுவனத்தில் இருந்து எதையும் அதிகாரிகள் கொண்டு செல்லவில்லை என்று அய்யாதுரை பாண்டியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியாக நடந்த இந்த சோதனையை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு